இந்த நூல் இனிய நூல். மாறுபட்ட நூல். பிரச்னைகளைப் பேசுகின்ற, அலசுகின்ற அதே வேளையில் தீர்வையும் செயல்திட்டத்தையும் தருகின்ற நூல்.
முஸ்லிம்களின் இருப்புக்கே உலை வைக்கின்ற அளவுக்குப் பேருருவம் எடுத்துவிட்டுள்ள சவால்களைக்கூட வளர்ச்சிக்கும் வளத்துக்கும் வித்திடுகின்ற வாய்ப்புகளாய் மாற்றிக் கொள்கின்ற உத்திகளை விவரிக்கின்ற நூல். இன்று உலகமெங்கும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக இருபத்திநான்கு மணிநேரமும் அவதூறு பரப்புரை முடுக்கிவிடப்பட்டிருக்கின்ற நிலையில் முஸ்லிம்களுக்கு அவர்கள் மீதுள்ள பொறுப்புகளை உணர்த்துகின்ற நூல்தான் இந்நூல்.
உலக நிலைமைகள் பற்றிய துல்லியமான ஆய்வுடன் நூல் தொடங்குகின்றது. உலக நடப்புகளையும் அவற்றின் பின்புலத்தில் இயங்குகின்ற ஆதிக்க சக்திகளின் விழைவுகளையும் சேட்டைகளையும் தமக்கேயுரிய பாணியில் விறுவிறுப்பாக விவரிக்கின்றார் நூலாசிரியர்.
உலக அரசியலில் இஸ்லாத்துக்கு இருக்கின்ற முக்கியத்துவத்தை பதிவு செய்துள்ள விதம் அருமை. வேகமாக சரிந்து வருகின்ற மேற்கத்திய பண்பாட்டின் வீழ்ச்சிக்கான காரணங்களை அலசியிருப்பதும், அத்துடன் இஸ்லாமோஃபோபியா என்கிற வெறுப்பு அரசியலின் ஆறு பரிமாணங்களைப் பட்டியலிட்டிருப்பதும் வாசகரை யோசிக்க வைக்கும்.
அடுத்து இந்திய நிலைமைகள் மீதான அறிவார்ந்த அலசலை வழங்குகின்றார் நூலாசிரியர். பல்வேறு மதங்கள், மொழிகள், இனங்கள், பண்பாடுகள், சாதிகள், சமூகக் குழுக்கள் சேர்ந்து வாழ்கின்ற நம்முடைய நாட்டின் அரசியல், சமூக நிலைமைகளின் நாடித் துடிப்பைத் துல்லியமாய் உணர்த்துவதாய் இந்த அலசல் மிளிர்கின்றது.
குறிப்பாக நிறுவனமயமாக்கப்பட்ட மதவாதம் (Institutional Communalism), மனோபாவங்களின் அடிப்படையில் சமூகங்களை அணிதிரட்டுகின்ற முயற்சி (Attitude Polarisation) ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள் இன்று நாடு சந்தித்து நிற்கின்ற நெருக்கடியின் தீவிரத்தையும் உஷ்ணத்தையும் படம் பிடித்துக் காட்டுவதாய் இருக்கின்றன.
சோதனைகளுக்கும் பின்னடைவுகளுக்கும் கடுமையான நெருக்கடிகளுக்கும் ஆளாகின்ற போது சமூகங்களின் எதிர்வினை எத்தகையதாய் இருந்து வந்துள்ளன என்பதையும் எது சரியான, சிறப்பான எதிர் வினை என்பதையும் சுவையாக விவரிக்கின்றார் நூலாசிரியர்.
சோதனைகளின் போது நிராசையடைந்து முடங்கி விடுவதும், கொண்ட கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டு சமரசம் செய்து கொள்வதும் தற்கொலைக்குச் சமமானது என வரலாற்றுச் சான்றுகளுடன் அழுத்தமாகப் பதிவு செய்கின்றார் நூலாசிரியர்.
இதே போன்று நெருக்கடிகளின் போது ஆத்திரப்பட்டு, ஆவேசப்பட்டு வன்செயல்களில் ஈடுபடுவதும் ஒட்டுமொத்த உலகத்தையே பகைவர்களாய் நினைத்து குமுறி வெடிப்பதும் கடும்போக்குவாதத்தை மேற்கொள்வதும் அழிவுக்கே இட்டுச் செல்லும் என்பதையும் வரலாற்றுச் சான்றுகளுடன் உணர்த்துகின்றார் நூலாசிரியர்.
தோல்விக்கும் இழிவுக்கும் இட்டுச் செல்கின்ற இந்த இரண்டு தீவிர நிலைப்பாட்டையும் நடத்தையையும் கைவிட்டு நெருக்கடிகளிலிருந்து முன்பை விட பன்மடங்கு அதிகமான வீர்யத்துடனும் வலிவுடனும் பற்றுடனும் மீண்டு எழுகின்ற பண்பை (Resilience) மேற்கொள்வதுதான் வெற்றிக்கு வித்திடும்; அது சமூகங்களில் புதைந்துள்ள ஆக்கப்பூர்வ ஆற்றல்களை உயிர்த்தெழச் செய்யும் என வலுவான வாதங்களுடன் ஆணித்தரமாக நிறுவுகின்றார் நூலாசிரியர். பதினெட்டு பக்கங்களில் விறுவிறுப்பாக நீள்கின்ற இந்த அலசல்தான் இந்த நூலின் ஹைலைட் எனலாம்.
மோசமான நிலைமைகளை எதிர்கொள்வதற்கும் பன்மைச் சமூகத்தில் சிறுபான்மையினர் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அதன் மூலம் சமூக வலிமையைப் பெருக்கிக் கொள்வதற்கும் தேவையான காரணிகளாய் நூலாசிரியர் முன் வைக்கின்ற நான்கும் எந்தவொரு பன்மைச் சமூகச் சூழலிலும் அழுத்தமான, ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை. குறிப்பாக நன்மையளிக்கும் ஆற்றல் (Exchange Power) குறித்து நூலாசிரியர் விவரித்துள்ள குறிப்புகளும் செய்திகளும் வாசகரின் மனத்துக்குள் புது வெளிச்சத்தைப் பாய்ச்சும் என்பது உறுதி. சமூக வலிமையைப் பற்றிய இந்த விவாதத்தின் இறுதியில் இதற்காக வேண்டி முஸ்லிம்கள் உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆறு இலக்குகளை நினைவூட்டியிருப்பது சிறப்பு.
மதவாதத்தை முறியடிப்பதற்காக நூலாசிரியர் முன் வைக்கின்ற யோசனைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சத்தான யோசனைகள். மதச் சண்டைகளுக்கு பெயர் பெற்ற அலீகர், மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாய் இருக்கின்ற கோழிக்கோடு ஆகிய இரண்டு நகரங்களின் சமூகச் சூழல்களை ஒப்பாய்வு செய்த சமூகவியல் வல்லுநரின் ஆய்வு முடிவுகளும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு நூலாசிரியர் முன் வைக்கின்ற வழிமுறைகளும் கவனத்தை ஈர்க்கின்றன.
முஸ்லிம்களையும் முஸ்லிம் தலைவர்களையும் விளித்து பத்து அம்சத் திட்டம் ஒன்றை நூலின் இறுதியில் தனி அத்தியாயமாகவே வழங்கியிருக்கின்றார் நூலாசிரியர். முத்து முத்தாகத் தரப்பட்டுள்ள இந்தப் பத்தும் செம்மையாகக் கடைப்பிடிப்படுமேயானால் முஸ்லிம்களையும் நாட்டையும் பீடித்துள்ள நெருக்கடிகள் அனைத்தும் பஞ்சாய்ப் பறந்து போகும் என அறுதியிட்டுச் சொல்லலாம்.
நூலாசிரியரான சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி நாடறிந்த அறிஞர். பன்னூல் ஆசிரியர். மாணவப் பருவத்திலிருந்தே இந்தியாவையும் இந்திய முஸ்லிம் சமூகத்தையும் நல்ல முறையில் அறிந்து தெளிந்தவர். பொறியியலில் படித்துத் தேர்ந்தாலும் மார்க்கத்திலும் தேர்ச்சியும் புலமையும் பெற்றவர். தொலைநோக்கும் விஷயஞானமும் மிக்கவர். உலகமயமாக்கலின் கோர விளைவுகளைத் துல்லியமாகக் கணித்து எச்சரித்த சிந்தனையாளர். இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் அகில இந்தியத் தலைவராகப் பணியாற்றியவர். தற்சமயம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவராக இருக்கின்றார். ‘உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்’, ‘பன்மைச் சமூகத்தில் முஸ்லிம்களின் பொறுப்புகள்’ ஆகிய நூல்களை எழுதியிருக்கின்றார்!
இன்றையக் கொந்தளிப்பான நாள்களில் ஒவ்வொரு முஸ்லிமும் சாமான்யர்கள் முதல் தலைவர்கள் வரை, பாமரர்கள் முதல் அறிஞர்கள் வரை, மாணவர்கள் முதல் குடும்பத் தலைவிகள் வரை அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
– ஹெச். அப்துர் ரகீப்
நூல் : இந்திய முஸ்லிம்கள்
சவால்கள், சாத்தியங்கள் & செயல்திட்டம்
ஆசிரியர் : சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி
பக்கங்கள் 132 விலை ரூ90/-
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138 ஐஎஃப்டி லேன், பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை 600 012
தொலைபேசி : 266204401