இஸ்லாமிய வங்கி நடைமுறை சாத்தியம் – H.அப்துர் ரகீப் அவர்களுடன் ஒரு நேர்காணல்

இஸ்லாமிய வங்கி முறைக்கு தடையில்லை என்ற கேரள உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு  செய்தி கிடைத்தவுடன் இஸ்லாமிய வங்கி நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வரும் ICIF (Indian Centre for Islamic Finance) இயக்குனர் ஜனாப் H.அப்துர் ரகீப் (முன்னாள் மாநிலத்தலைவர், JIH TN) அவர்களை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக இணையதள குழுவினர் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இஸ்லாமிய வங்கி இந்தியாவில் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்ற அயராத முயற்சிகளுக்கு இடையில் நம்முடைய கேள்விகளுக்கு ஜனாப் H.அப்துர் ரகீப் அவர்கள் அளித்த பதில்கள்…

1. கேரள உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

வங்கி அல்லாத நிதி நிறுவனம் உருவாக்க கேரள அரசு ஒரு குழு உருவாக்கி ஆய்வு மேற்கொண்டது.  இஸ்லாமிய வங்கி முறையை மையமாக வைத்து செயல்படக்கூடிய ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டது.  இதில் கேரள அரசிற்கு 11% பங்கு என்றும் அரசால் உருவாக்கப்பட்ட கேரள தொழில் அதிபர்களை கொண்ட குழுவிற்கு 89%  பங்கு என்றும் செயல் வடிவம் கொடுக்கப்பட்டது.

இதற்கு திரு.சுப்பிரமணிய சுவாமி அவர்களும், ஹிந்து ஐக்கிய வேதி அமைப்பின் திரு.பாபு ஆகிய இருவரும் எதிரிப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர்.  அதில் அவர்கள் இந்நிறுவனம் அரசியல் அமைப்பு சட்டம் பகுதி 27-க்கு முரணாக உள்ளது என்று வாதிட்டனர்.  இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது.  விசாரணையின் முடிவில் கேரள உயர்நீதி மனற நீதிபதிகள் இஸ்லாமிய முறையில் செயல்படக்கூடிய கேரள நிதி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி தடையை நீக்கியது.

இந்த தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.  மேலும் இஸ்லாமிய வங்கி நடைமுறைக்கு கொண்டு வரும் இம்முயற்சியின் ஒரு மைல்கல். அல்ஹம்துலில்லாஹ்.

2. இஸ்லாமிய வங்கி பற்றி உலக அளவில் மக்களிடம் என்ன கருத்து இருக்கிறது?

2008க்கு பிறகு மிக பெரிய பொருளாதார நெருக்கடியை உலகம் சந்தித்தது.  மிக பெரிய நிறுவனங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டன.  ஆனால் இஸ்லாமிய வங்கி முறையில் நடைபெற்ற நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை,  15% வளர்ச்சியையும் சந்தித்தது.  இது அனைவருக்கும் பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கியது.

போப் அவர்கள் கூறினார் உலக நாடுகள் இஸ்லாமிய வங்கி முறை பற்றி யோசிக்க வேண்டும் மேலும் முதலீடுகளை இஸ்லாமிய வங்கிக்கு செலுத்த ஆலோசனை வழங்கினார்.

இன்னும் குறிப்பாக 53 நாடுகளுக்கு மேலாக இம்முறையை கடைப்பிடித்து வருகின்றனர்.

இஸ்லாமிய வங்கி குறித்து உலக அளவில் பல்வேறு நபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அவற்றை காண —-> இஸ்லாமிய வங்கி பற்றி மிக முக்கிய அறிஞர்களின் கருத்து

3. இஸ்லாமிய வங்கி முறை மற்ற வங்கிகளைவிட சிறப்பானது எப்படி?

500 வருடங்களுக்கு மேலாக வட்டி இல்லாத வங்கி முறை எங்கும் இல்லை.  வட்டி சார்ந்த முறை தான் கடைப்பிடித்து வருகின்றனர்.  இன்றைய வங்கி முறைக்கும் இஸ்லாமிய வங்கி முறைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

இன்றைய வங்கி முறையில் பணம் போடுபவர்க்கும், கடன் வாங்குபவர்க்கும் மட்டும் தான் லாபம், இழப்பு.  வங்கிக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லை.  ஆனால் இஸ்லாமிய வங்கியில் லாபம், இழப்பில் வங்கிக்கும் பங்கு உண்டு.

இன்றைய வங்கி முறையில் பணம் பெற ஏதாவது அடமானம் வைக்க வேண்டும். அல்லது யாராவது ஜாமின் வழங்க வேண்டும்.  ஆனால் இஸ்லாமிய வங்கி முறையில் யார் வேண்டுமானாலும் கடன் பெறலாம், முதலீடு செய்யலாம்.  ஏழை, நலிவுற்றவர்களும் பயன் பெறும் வகையில் இஸ்லாமிய வங்கி முறை உள்ளது.  இன்னும் இஸ்லாமிய முறையில் பயன்பெற்ற விவசாயிகள் இன்று நல்ல நிலைமையில் இருக்கும் அறிக்கை நம்மிடம் உள்ளது.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவது ஏழைகள் மேலும் ஏழைகளாவது இஸ்லாமிய வங்கி முறையில் சாத்தியமில்லை.   எல்லோரும் பயன் பெறும் முறை என்பது இதன் தனி சிறப்பு.

மேலும் இஸ்லாமிய வங்கி முறையில் முதலீடு, பணம் தூயமையான வகையில் பயன்படுத்த படுகிறது. பின்வரும் முறைகளை தீவிரமாக கண்காணிக்கிறது.

  • வட்டி அல்லாத முறைதான் என்பதை உறுதி செய்கிறது
  • சூதாட்டம், மது, ஆபாசம், ஆயுதம், மக்கள் மோசடி போன்றவற்றில் முதலீடு இல்லை
  • முதலீடுகள் எங்கு உள்ளது என்பதை தெளிவாக காண இயலும்

ஆனால் இன்றைய வங்கி முறையில் வட்டிக்கு முக்கியத்துவம், IPL போன்ற மிகப்பெரிய சூதாட்டம் என மக்களிடம் அதிக லாபம் என்ற நோக்கில் செயல்படுகிறது.  இம்முறையை அகற்றி ஒழுக்கம் சார்ந்த முறைகளை (Ethical Plan)மட்டும் இஸ்லாமிய வங்கி அனுமதி வழங்குகிறது.  ஆக பணத்திற்கு பணமே வியாபாரம் ஆகாது. பணத்தை ஏதாவது பொருளை கொண்டு தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்ற முறையை இஸ்லாமிய வங்கி நடைமுறைப் படுத்துகிறது.

4. இஸ்லாமிய வங்கி குறித்து மத்திய அரசின் நிலை என்ன?

2005ல் திரு. ஆனந்த் சின்ஹா அவர்களின் தலைமையில் மத்திய அரசு ஒரு குழு உருவாக்கியது.  நாட்டில் இஸ்லாமிய வங்கி நடைமுறை சாத்தியம் குறித்து ஆய்வு செய்து அறிக்கையை அக்குழு சமர்ப்பித்தது.  இஸ்லாமிய வங்கி முறை சாத்தியமற்றது.  FootBall க்கும் Cricket க்கும் உள்ள வேறுபாடு போன்றது இஸ்லாமிய வங்கி முறையும் நாம் பின்பற்றுவதும்.  இதை அமல்படுத்த பாராளுமன்றத்தில் வங்கி முறை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.  ஆகவே இது சாத்தியமற்றது என்று அக்குழு கூறியுள்ளது.  ஆனால் அந்த அறிக்கை ஆதரமற்றது.  ஏனெனில் அதில் இஸ்லாமிய வங்கி குறித்த நிபுனர்கள் இல்லை.  மேலும் பல்வேறு இணையதளங்களை பார்த்து அறிக்கை தயார் செய்யப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் அந்த அறிக்கையை பெற RBIஆளுநருக்கு கடிதம் எழுதினேன்.  ஆனால் அவர் இது தரமுடியாது என்று கூறினார்.  பிறகு Right to Information Act (RTI) மூலம் அந்த அறிக்கை கிடைத்தது.

5. இஸ்லாமிய வங்கி குறித்து மக்கள் மற்றும் மத்திய அரசிடம் செய்யப்பட்டு வரும் பணிகள் என்ன?

முதலில் மக்களுக்கு இஸ்லாமிய வங்கி குறித்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும். ஏனெனில் இஸ்லாம் என்ற பெயரை கேட்டவுடனே பயங்கரம், சரி வராது என்ற கருத்து நிழவுகிறது.  இன்னும் குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் வட்டியில்லாத வங்கியா முடியாது என்ற கருத்தும் நிழவுகிறது. இவற்றை அகற்ற பல்வேறு நடவெடிக்கைகள் ICIF (Indian Centre for Islamic Finance) மூலம் செய்யப்பட்டு வருகிறது.

2008 ல் Planning Commission of India வரக்கூடிய காலங்களில் பொருளாதார மாற்றங்களில் எப்படி செயல்படுவது என்று திட்டமிட டாக்டர் ரகுராம் ராஜன் அவர்களின் தலைமையில் குழு அறிக்கை ஆய்வு செய்தது.  அவர்களை ICIF மூலம் சந்தித்து இஸ்லாமிய வங்கி முறையின் அவசியத்தை எடுத்துரைத்தோம். அக்குழு அவர்களது அறிக்கையில் 2 பகுதியில் இஸ்லாமிய வங்கி குறித்த அவசியத்தை சேர்த்துள்ள்னர்.   ஆனால் RBI அக்கருத்தை பெரிதாக எடுக்கவில்லை.  RBI ஆளுநர் மற்றும் இணைஆளுநரை அனுகினோம்.  அரசு தான் இஸ்லாமிய வங்கி குறித்து யோசிக்க வேண்டும் என்று கூறினர்.  பிறகு மத்திய நிதி அமைச்சர் திரு. பிரணாப் முகர்ஜியை சந்தித்தோம்.  அவர் RBI க்கும் ICFIக்கும் இடையில் ஒரு குழு அமைத்து அதில் விவாதிக்க வழியமைத்து கொடுத்தார்.  இந்த வகையில் கேரள உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு இஸ்லாமிய வங்கி முயற்சிக்கு இன்ஷாஅல்லாஹ் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் H.அப்துர் ரகீப் அவர்கள்

6. Non-Banking System என்ற முறை இஸ்லாமிய வங்கி முறை இதில் அதிக முக்கியம் எதில் கொடுக்கிறீர்கள்?

உடனடியாக இஸ்லாமிய வங்கி முறை என்பது கடினம்.  முதலாவதாக இன்றைய வங்கி முறையில் இஸ்லாமிய வங்கி அடிப்படையில் வங்கிஅல்லாத நிறுவனத்தை அறிமுகம் செய்ய வேண்டும்.  உ.ம். அசைவ உணவகத்தில் சைவ உணவிற்கு ஒரு அறை என்ற வகையில் இஸ்லாமிய வங்கி முறைக்கு ஏற்பாடு செய்கிறோம்.  அதில் மக்கள் கண்டிப்பாக இஸ்லாமிய வங்கி முறையின் பலனை அறிவர்.

அடுத்த நடவெடிக்கையாக பாராளுமன்றத்தில் வங்கி சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் மசோதவை நிறைவேற்ற ஹைதராபாத் M.P மூலம் பேசி கொண்டு இருக்கிறோம்.  ஆனால் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் மசோதா குலுக்கல் முறையில் தான் தேர்வு செய்யப்படும்.  நம்முடைய முயற்சி வெற்றி பெற துஆ செய்யுங்கள்.  இந்த மசோதா கொண்டு வரும் நேரத்தில் இஸ்லாமிய வங்கிக்கு ஆதரவாக பேச பல்வேறு நபர்களிடம் தொடர்பு கொண்டு வருகிறோம். இன்ஷாஅல்லாஹ் அடுத்த அவையில் கூட இஸ்லாமிய வங்கி பற்றி விவாதிக்க வாய்ப்பு உள்ளது.

வெளிநாட்டில் இருக்கும் நம்முடைய மக்கள் மூலம் பிரதமரையும் தொடர்பு கொண்டிருக்கிறோம்.

ஆக பிரதமர், அமைச்சர்கள், அறிஞர்கள், பொது மக்கள் என எல்லா தரப்பில் தொடர்ந்து போராடி வருகிறோம்.

7. இஸ்லாமிய வங்கி ஏற்பட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பங்கு என்ன?

இஸ்லாம் வட்டியை வன்மையாக கண்டிக்கிறது.  கொடுக்கவும், வாங்கவும் கூடாது என்கிறது.  ஆனால் மக்களிடம் வட்டியிலிருந்து  விலகி இருக்கும் நிலை ஏற்படவில்லை.

வட்டியின் பக்கம் நெருங்காதீர்கள் என்று வட்டியினால் ஏற்படும் கொடுமைகளையும், தீமைகளையும் மக்களுக்கு தெளிவுப்படுத்த மெளலானா மெளதூதி அவர்கள் வட்டி பற்றி புத்தகம் எழுதினார். முதன் முதலில் அந்த புத்தகம் தான் மக்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

வட்டியில்லா வங்கி முறையை எப்படி அமல்ப்படுத்துவது என்பதற்கான புத்தகத்தை டாக்டர். நஜாத்துல்லாஹ்  சித்திகீ அவர்கள் எழுதினார்.  அது தான் முதல் வழிகாட்டியாக பின்பற்றப்படுகிறது.  இன்னும் டாக்டர். ஃப்ஸ்லுர்ரஹ்மான் ஃபரிதி, டாக்டர். அவ்ஷாத் பலர் இதறகாக போராடி இருக்கிறார்கள்.

செயல்ரீதியாக வட்டியில்லா இஸ்லாமிய வங்கி முறையை ஆரம்பிக்க அப்போதைய அமீரே ஜமாஅத் மெள. யூசுஃப் அவர்கள் முடிவெடுத்தார்கள்.  அதன் அடிப்படையில் 500 க்கும் அதிகமான வட்டியில்லா நிறுவனங்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.

கேரளாவில் வெற்றிகரமாக வட்டியில்லா நிறுவனங்கள் செயல்படுகிறது.  AICL என்ற அமைப்பு 10 வருடமாக சிறப்பாக செயல்படுகிறது.  இன்னும் அகில இந்திய அளவில் மைக்ரோ ஃபைனான்ஸ் என்ற முறையில் ஷஹுலத் மைக்ரோ ஃபைனான்ஸ் (Sahulath Microfinance) உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இஸ்லாமிய வங்கி நடைமுறையில் வருவதற்கு கடுமையாக போராடி வருகிறது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!