மதுரை இயக்க ஊழியர்களுக்கான சிறப்புப் பயிற்சிக் கூட்டம்

இறைத்தூதர் வாரத்தை முன்னிட்டு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மதுரை கிளையின் சார்பாக இயக்க ஊழியர்களுக்கான சிறப்புப் பயிற்சிக் கூட்டம் 3.2.2011 அன்று நரிமேடு வட்டத்தில் நடைபெற்றது. நஜ்மா பேகம் இறைவாழ்த்துப் பாட நிகழ்ச்சி தொடங்கியது. 

 மாநில அழைப்பியல் துறைச் செயலாளர் A.P.நாசர் சிறப்புரையாற்றினார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் எந்தவொரு பணியையும் குர்ஆன், சுன்னத்தின் ஒளியில்தான் செய்யும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த அடிப்படையில்தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான ரிஸாலத் –  தூதுத்துவம் குறித்த சரியான, உண்மையான கருத்துகளை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க இறைத்தூதர் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

 இறைத்தூதர்கள் யார்? அவர்களின் பொறுப்புகள் என்ன? அவர்கள் எதற்காக இறைவனால் அனுப்பப்பட்டார்கள்? அவர்கள் கொண்டு வந்த செய்தி என்ன?அவதாரம் என்பது உண்மைதானா? இயேசுவுக்கும் இறுதி இறைத்தூதரான முஹம்மத் நபிக்கும் என்ன தொடர்பு? இறைத்தூதர்களை நாம் நம்பிக்கை கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இறைவனின் இறுதித் தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் நமக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் என்ன? என்பன போன்ற பல முக்கியமான கேள்விகளுக்கு விடை தெரியாமல் தமிழக மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இந்தச் செய்தியை எடுத்துரைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

 எனவேதான் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளது. இயக்க ஊழியர்களாகிய நாம் இந்த வாரத்தில் அதிகமான பொதுமக்களைத் தொடர்பு கொண்டு இந்தச் செய்தியைச் சமர்ப்பிக்க வேண்டும். முறையாகத் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

 இக்கூட்டத்திற்கு மதுரை மாநகரத் தலைவர் மௌலவி முஹையுத்தீன் உமரி தலைமை தாங்கினார். பஷீரா நன்றி கூறினார். அனைத்துக் கிளை வட்டங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர்.