ஜ.இ.ஹி மாநிலத் தலைவருடன் ஒரு நேர்காணல்

 

மாநிலத் தலைவர் ஜனாப் ஷப்பீர் அஹமத்

ஜ.இ.ஹி மாநிலத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாப் ஷப்பீர் அஹமத் அவர்களிடம் ஒரு நேர்காணல்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மாநிலத்தலைவர் ஜனாப் ஷப்பீர் அஹமத் அவர்கள் பதிலளிக்கும் முன் கூறியதாவது, இத்தகைய மிகப்பெரிய பொறுப்பு மீண்டும் என் மீது சுமத்தப்பட்டுள்ளது,  4 வருடம் ஆரோக்கியத்துடனும், முன்னேற்றத்துடனும் செயல்பட இறைவனிடம் உதவியை நாடுகின்றேன் என்று இறையருளை நாடினார். ஒவ்வொரு ஊழியரும் எனக்காக துஆ செய்ய விரும்புகின்றேன் என்ற வேண்டுதலுடன் கேள்விக்கு பதிலளித்தார்கள்…

1. தற்போதைய சூழலில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர்களுக்கு தங்களது செய்தி?

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் குறிக்கோளையை மையமாக கொண்டு செயல்படும் இயக்கம் ஆகையால் ஊழியர்கள் ஜமாஅத்தின் குறிக்கோளை தெளிவாக புரிந்து செயல்பட வேண்டும்.  அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இலக்கியங்களின் மூலமாக தான் அமைப்பின் நோக்கமும், செயல்பாட்டில் உறுதியும் இருக்கும் ஆகையால் இலக்கியங்களை படிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  பொதுவாக தமிழகத்தில் வாசிப்பு பழக்கம் குறைவாக உள்ளது.  இத்தகைய பழக்கம் இயக்க ஊழியர்களுக்கு பலனை தராது.  ஆகையால் இலக்கியங்களை படிப்பதில் ஆர்வம் வேண்டும், அதிக முக்கியத்துவம் கொடுத்து இஸ்லாமிய மற்றும் உலக அறிவை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இலக்கியங்கள் தான் நமது பொக்கிஷம்.

இஸ்லாத்தின் தேவையை உணர்ந்து ஒவ்வொருவரும் இறைவன் கொடுத்துள்ள திறமைகளையும், ஆற்றல்களையும் வளர்க்க வேண்டும். நவீனகால வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவற்றை பயன்படுத்தவும். அதன் வாயிலாக மக்களுக்கு இஸ்லாத்தின் செய்தியை சமர்ப்பிக்க வேண்டும்.  அதற்காக அர்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்.  சமீப கால நிகழ்வுகள் அதற்கு சான்றாக உள்ளன, 1.மலப்புரம் பகுதியில் ஒரு நிறுவனம் முஸ்லிம் பெண்களுக்கான கணினி பயிற்சி நடத்தி சாதித்துள்ளது. 2.ஒரு நபர் படிப்பறிவு இல்லாத பெண்களுக்கு கணினியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், இமெயில் எப்படி அனுப்புவது மற்றும் இணையதளம் பயன்படுத்தும் முறை ஆகியவற்றிற்கு பயிற்சி கொடுத்து வெற்றி கண்டுள்ளார்.  3.எகிப்த் புரட்சிக்கு காரணம் Face Book என்று சொல்லக்கூடிய இணையதள சாதனம்.  ஆகவே நாமும் முயற்சி எடுத்தால் எல்லா தகவல் தொழில்நுட்பங்களையும் கற்று கொள்ள முடியும்.  இதற்காக நமது நேரத்தையும், உழைப்பையும் தியாகம் செய்து மக்களுக்கு செய்தி சேர்ப்பதில் முனைப்புடன் இருக்க வேண்டும்.  இன்ஷா அல்லாஹ் இறைவன் துணை நிற்பான்.

2. தமிழகத்தில் ஜமாஅத்தின் வளர்ச்சி எப்படி உள்ளது.  ஊழியர்களிடம் உங்களது என்ன எதிர்ப்பார்ப்பு என்ன?

ஆரம்பத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 40யை விட்டு அதிகரிக்காத நிலை இருந்தது.  ஆனால் கடந்த 8 முதல் 10 வருடங்களில் ஜமாஅத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.  அல்ஹம்துலில்லாஹ்.  தற்போது உறுப்பினர்கள் 165 உள்ளனர்.   ஊழியர்கள் இருமடங்கு அதிகமாக வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் செயல்பட்டு தற்போது அந்த இலக்கை அடைந்திருக்கிறோம்.  அபிமானிகள் மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருகின்றோம்.  ஜமாஅத் எப்போதும் எண்ணிக்கையை விட ஊழியர்களின் தரத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கும்.  அதன் அடிப்படையில் ஜமாஅத்தின் தனிநபர் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

ஊழியர்களிடம் நமது எதிர்ப்பார்ப்பு என்னவென்றால்,  தற்போது இருக்கும் தியாக உணர்வு நமது வளர்ச்சிக்கு குறைவானது ஆகையால் இன்னும் அதிகமான தியாக உணர்வு வேண்டும்.  அப்போது தான் முன்னேற்ற பாதையில் நாம் செல்ல முடியும்.

ஒவ்வொரு ஊழியரும் குறிக்கோளை விளங்கி செயலாற்ற வேண்டும் அதில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது.  உலகிலுள்ள எல்லா அமைப்புகளுக்கும் இது முக்கியமானதாக இருக்கிறது.

3. தமிழகத்தில் ஜமாஅத்தின் செய்தி மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா,  திருச்சியில் நடைபெற்ற மாநாடு குறித்து தங்களது கருத்து என்ன?

எந்த அளவிற்கு வளர வேண்டுமோ அந்த அளவிற்கு வளரவில்லை.  காரணம் ஆரம்பகாலங்களில் ஜமாஅத்தின் இலக்கியங்கள் உருதுவில் இருந்ததால் தமிழ் பேசும் மக்களிடம் வேலை மிக குறைவாக இருந்தது.  உருது பகுதிகளில் மட்டும் ஜமாஅத்தின் வேலைகள் நடைபெற்றது.  தற்போது அந்த நிலை மாறி உள்ளது.  தமிழில் அதிக இலக்கியங்களை கொண்டு வந்துள்ளோம்.  10 வருடத்திற்கும் மேலாக இந்த பணியில் அதிக கவனமுடன் செயல்பட்டு தற்போது வளர்ச்சி அடைந்து வருகின்றோம்.  இன்னும் அதிகமான வேலை இருக்கிறது.  குர்ஆனின் தாக்கத்தையும், அழைப்பு பணியின் அவசியத்தையும் மக்களுக்கு அதிக அளவில் எடுத்து வைத்துள்ளோம்.  இன்னும் பல தளங்களில் வேகத்துடன் பணியாற்றி வருகிறோம்.  சமூக பிரச்சனைகளில் ஜமாஅத்தின் நிலைபாடு முக்கிய பங்கு வகிக்கின்றது.

இப்பணிகளில் திருச்சி மாநாடும் முக்கிய பங்கு வகிக்கின்றது.  ஜமாஅத் உருவான ஆரம்ப காலத்திலுருந்தே தமிழக்கத்தில் ஜமாஅத்தின் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் மாநில அளவில் மாநாடு நடைபெறவில்லை.  ஊழியர்களிடமும், மக்களிடமும் இப்படி ஒரு மாநாடு நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.  இறைவனின் கிருபையால் மாநாடு நடைபெற்றிருக்கிறது.  8 வருடத்திற்கு மேலாக களத்தில் தொடர்ந்து பணியாற்றியதற்கான பலனை மாநாட்டில் கண்டது ஒரு சாதனையாக இருக்கிறது என்று ஒரு ஊழியர் கூறினார்.  இன்னும் முக்கிய விஷயம் எல்லா அமைப்பு தலைவர்களையும் ஒரே மேடையில் ஒருங்கிணைத்துள்ளோம்.  நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக மக்கள் வந்திருந்தனர். மாநாட்டிற்கு வராத அதிகமான மக்களுக்கு மாநாட்டின் மையக்கருத்து எடுத்து வைக்கப்பட்டுள்ளது.  திருச்சியில் சிரமமான இடத்தில் மாநாடு நடைபெற்றும் அதிகமான மக்களை ஒன்றிணைக்க முடிந்தது என்றால் இது ஊழியர்களின் பணியையும், மக்களின் எதிர்பார்ப்பையும் காட்டுகிறது.  மாநாடு முடிந்த பிறகு பல்வேறு இடங்களில் குறிப்பாக தென் தமிழகத்தில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.  18 மாவட்டத்திலிருந்து தற்போது 29 மாவட்டங்களில் நமது பணிகள் நடைபெற்று வருகிறது.  ஒரு சில பகுதிகளில் குர்ஆன் வகுப்பு என்று சிறிய அளவு பணியாவது நடைபெற்று வருகிறது.  இன்னும் அதிக இடங்களில் வேலை பார்க்கும் வாய்ப்பு உள்ளது, மக்களும் அழைக்கின்றார்கள் அதற்கு நமக்கு இன்னும் அதிக ஆள்வலம் தேவைபடுகின்றது.

இனி மாநில அளவில் மாநாடு தேவைக்கு ஏற்ப நடத்தப்படும்.  ஆனால் வரக்கூடிய வருடங்களில் மாவட்ட அளவில் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

 

சகோ.அப்பாஸ் அமீரே ஹல்காவிடம் நேர்காணல் செய்கிறார்

4. ஜமாஅத்திற்கும் மற்ற அமைப்பிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

இஸ்லாம் எல்லோருக்கும் பொதுவான மார்க்கம்.  எல்லா மக்களுக்கும் இஸ்லாத்தின் செய்தியை சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்புள்ளது.  சத்தியத்திற்கு சான்றுபகர வேண்டிய கடமை நம்மிடம் உள்ளது.  எல்லா நபிமார்களும் அந்த வேலையை தான் செய்தார்கள்.  பிறகு நம்மிடம் இந்த பொறுப்பு வந்துள்ளது. போட்டிக்காக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆரம்பிக்கப்பட வில்லை.  ஜமாஅத்தை துவக்கும் முன் மெளலானா மெளதூதி ஆரம்பத்திலேயே கூறியுள்ளார் இஸ்லாத்தை சான்றுபகரக்கூடிய, தீனை நிலைநாட்டக்கூடிய அமைப்பு தேவையிருக்கிறது, அப்படி ஒரு அமைப்பு இந்தியாவில் இல்லை ஆகையால் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்படுகிறது.  யாராவது அப்படி ஒரு அமைப்பு நடத்துவதாக இருந்தால் நாங்கள் சேர்ந்து கொள்கிறோம் என்று தெளிவாக கூறியுள்ளார்.  ஆக எங்களுடைய அழைப்பு இஸ்லாத்தின் பக்கம் தான் இருக்குமே தவிர இயக்கத்தின் பக்கம் இருக்காது.  இஸ்லாத்தை நிலைநாட்ட வேண்டும் என்று தான் இயக்கத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறோம்.  இன்று வரை இது போன்ற ஒரு அமைப்பு இல்லை என்பது உண்மையான விஷயம்.

முழுமையான இஸ்லாத்தை நிலைநாட்ட ஜமாஅத் செயல்படுகின்றது, இது சரியென்றால் ஒத்துழைப்பு தாருங்கள் என்று அழைக்கின்றோம்.

பல்வேறு அமைப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் உருவாகியுள்ளதே?

இஸ்லாத்திற்காக இயக்கமா? இயக்கத்திற்காக இஸ்லாமா? என்ற கேள்வியில் நமது முன்னுரிமை எவ்வாறு இருக்கின்றதோ அதன் அடிப்படையில் தான் இயக்கம் செல்லும்.  இந்த விஷயத்தில் தான் பிரச்சனை வருகின்றது. தமிழகத்தில் பல்வேறு இயக்கங்கள் இந்த விஷயத்தில் தவறு செய்கின்றது.  ஒரே கொள்கை நோக்கி பல்வேறு இயக்கங்கள் செயல்படுவதில் தவறில்லை.  நிச்சயமாக அல்ஜமாஅத் உருவாகும் போது எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து அல்ஜமாஅத்தில் இணைய இருக்கின்றன.  ஆனால் மக்களிடம் இஸ்லாத்தை நிலைநாட்டும் பணியை தொடர்ந்து செயல்பட வேண்டும்.  இஸ்லாம் முன்னுரிமை படுத்தப்படும் போது பிரச்சனை வராது.  இயக்கங்களிடையே பல்வேறு பிரச்சனைகள் வந்திருன்றது, அப்போது ஜமாஅத் நடுநிலையோடு அப்பிரச்னையை தீர்த்து வைக்கும் பணியில் ஈடுப்பட்டு இருக்கின்றது.

இவற்றிற்கு எல்லாம் தீர்வு இயக்கத்தை புரிய வைக்கக்கூடிய புத்தகங்கள் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும்.  மக்களுக்கு குர்ஆன், அழைப்பு பணி பற்றிய விழிப்புணர்வு புத்தகங்களின் வாயிலாக கிடைத்துள்ளது. அதனால் நல்ல விழிப்புணர்வு இருக்கின்றது.  இயக்கம் சார்ந்த புத்தகங்கள் அதிகம் வரும் போது அமைப்புகளிடையே விழிப்புணர்வு உண்டாகி பிரச்சனை தீர வாய்ப்புள்ளது.  இறைவன் கிருபை புரியட்டும்.  இதற்காக தொடர்ந்து ஜமாஅத் முயற்சி செய்து வருகின்றது.

5. ஜமாஅத்தின் அரசியல் நிலைபாடு குறித்தும், வெல்ஃபேர் பார்டி பற்றியும் அதைப்பற்றிய விமர்சனம் குறித்தும் உங்களது கருத்து என்ன?

அனைவரிடமும் அரசியல் குறித்து ஆரம்ப காலத்தை விட தற்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஜமாஅத் ஆரம்பத்தில் தேர்தலில் ஓட்டு போடக்கூடாது என்று கூறியது.  பிறகு பாசிச சக்திகள் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் ஓட்டு போடவும், நல்லவர்களை தேர்ந்தெடுங்கள் என்ற செய்தியையும் மக்களிடம் முன்வைத்தது.  பாருங்கள் தற்போது அனைவரும் இந்த வார்த்தையை ஏற்று நல்லவரை தேர்ந்தெடுங்கள் என்று கூறி வருகின்றனர்.  தற்போது நடைபெற்ற தேர்தலில் ஒரு இணையதளமே இருந்தது. வேட்பாளர்கள் குறித்த முழுவிவரத்தையும் அதில் வைத்து இவற்றில் நல்லவரை தேர்ந்தெடுங்கள் என்றனர்.  தேர்தல் தற்போது எளிமையான முறையில் போஸ்டர், ஆடம்பரம் இல்லாது நடைபெற்று இருக்கிறது.  இது ஒரு நல்ல ஆரம்பம்.

இஸ்லாம் அரசியலுக்கு எதிரானது கிடையாது.  இஸ்லாத்தில் அதிக விஷயங்கள் அரசியல் குறித்து கூறப்படுள்ளது.  சட்டம் இயற்றும் அதிகாரம் இறைவனுக்கு தான் இருக்கிறது என்ற விஷயம் தெளிவாக உள்ளது.  ஜமாஅத்தும் அந்த விஷயத்தில் தெளிவாக உள்ளது.  மக்களாட்சி நடைபெறும் நம் நாட்டில் சட்டங்கள் பாராளுமன்றத்தில் இயற்றப்படுகின்றது.  அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக சட்டம் இயற்றப்படக்கூடாது, மக்களுக்கு பாதிப்பில்லாத சட்டம் இயற்றப்பட வேண்டும், நேர்மையான ஆட்சியாளர் வேண்டும் என்றால் நாம் அங்கு முன்மாதிரியான நபர்களை அனுப்பும் போது தான் அது நிறைவேறும்.  உதாரணமாக தமிழகத்தில் திருமண பதிவு சட்டத்தை எடுத்து பாருங்கள் என்ன நடந்தது.  நமக்கு போதிய நபர்கள் இல்லாததால் நமக்கு பாதிப்பு ஏற்படும் சட்டம் வந்தது.  பிற்கு அனைத்து அமைப்புகளின் முயற்சியில் அதில் மாற்றம் வந்தது.  ஆகவே இத்தகைய நோக்களுக்காக தான் ஜமாஅத் அரசியலை அனுகுகிறது.

வெல்ஃபேர் பார்டி ஓட்டுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்ற கூறுகிறார்களே.?

10-20 வருட தீவிர ஆலோசனைக்கு பிறகு இந்த அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  வெல்ஃபேர் பார்டி ஜமாத்துடைய அரசியல் கட்சி கிடையாது.  அது கிருஸ்துவர்கள், தலித்துக்கள் என பல்வேறு நபர்களையும் ஒருங்கிணைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்சி.  அப்படி தான் அதன் அமைப்பு சட்டமும் உள்ளது.  நான் மேலே கூறப்பட்டுள்ளது போல் மக்களுக்கு எதிரான ஆட்சி வரக்கூடாது, இஸ்லாத்திற்கு எதிரான செயல்பாடுகளை தடுக்கவும், நேர்மையான ஒழுக்கமான ஆட்சி வர வேண்டியும் தான் இந்த அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  அதில் சேர்ந்துள்ள அனைவரும் இதை தெளிவாக உணர்ந்துள்ளனர்.  காயத்திரி மந்திரத்து ஆரம்பமானது என்கின்றனர்.  இப்படிப்பட்டவர்களின் தவறான பிரச்சாரம், விமர்சனங்களை பற்றி ஆராய தேவையில்லை. ஏனெனில் எங்களுக்கு நிறைய பணிகள் இருக்கின்றது.  அவற்றை செய்வதற்கே எங்களுக்கு நேரம் போதவில்லை. மெளலானா மெளதூதி கூறிய கருத்தை நினைத்து பார்க்க வேண்டும்.  என்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதில் தந்திருந்தால் நான் புத்தகங்களையும், தஃபீமுல் குர்ஆனையும் எழுதியிருக்க மாட்டேன் என்றார்.  தவறான பிரச்சாரம் என்று அவர்களுக்கே தெரியும் நாங்கள் வேறு கூற தேவையில்லை.

இன்றைய அரசியல் சூழல் நன்றாக தெரியும் நன்றாக இருந்தவர்கள் எல்லாம் அரசியலுக்கு போனவுடன் எப்படி மாறியுள்ளனர்.  ஆகவே இப்படிப்பட்ட சூழலை மாற்ற வேண்டும்.  இது ஒரு நல்ல ஆரம்பம் இன்னும் நிறைய பணிகள் அரசியலில் செய்ய வேண்டியுள்ளது.

6. தேர்தலில் போட்டியிடும் வேட்பளர்களுக்கு ஜமாஅத்தின் ஆதரவு என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஊழியர்கள் வேட்பாளர் ஆதரவு குறித்து தெளிவாக இருக்கின்றார்களா?

ஆரம்பத்திலே கூறியது போல், நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஜமாஅத்தின் ஆரம்பக்கால முழக்கம் தற்போது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  எல்லோரும் அத்தகைய கருத்தின் அடிப்படையில் செயல்படுகின்றனர்.  நமது தேர்வு என்பது ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நமது ஊழியர்கள், பொறுப்பாளர்களின் கருத்தை பெற்று பிறகு தான் நமது முடிவை அறிவிக்கின்றோம் ஆகையால் இந்த விஷயத்தில் ஊழியர்கள் தெளிவாக உள்ளனர்.

7. தமிழகத்தில் இளைஞர் அமைப்பு உருவாக்கும் வாய்ப்பும், தேவையும் உள்ளதா?

தமிழகத்தில் இளைஞர்களை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.  SIO முழுக்க முழுக்க மாணவர்மயமாகி வருவதாலும், கல்வி வளாகங்களை மையமாக வைத்து பணி நடைபெறுவதாலும் இளைஞர்களுக்கான வேலைகள் காலியாக உள்ளது.  கடந்த மீக்காத்தில் 2 வருடத்திற்கு முன்பே இளைஞர் அமைப்பு உருவாக்குவது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  இளைஞர் அமைப்பு சிறப்பாக உள்ள மாநிலங்களுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் கேரளா சாலிடாரிட்டி, ஆந்திரா MPJ ஆகிய அமைப்புகள் செயல்படும் முறையை ஆய்வு செய்து ஆலோசனைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  பிறகு தமிழகத்தில் இருக்கும் வாய்ப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.  கோவை, வாணியம்பாடி, சென்னை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருக்கும் வாய்ப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு ஆலோசனைக்கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது. இத்தனை மிக விரிவான ஆய்வுக்கு பிறகு ஆலோசனைக் கூட்டத்தில் அனைவரிடமும் இளைஞர் அமைப்பு உருவாக்க வேண்டும் என்ற ஒருமித்த சிந்தனை உருவானது.  அப்போது மீக்காத்தின் இறுதி கட்டத்தை அடைந்திருந்ததால் வருகிற மீக்காத்தில் ஆரம்பிக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.  ஆகவே இறைவன் நாடினால் வருகிற புதிய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.

ஜஸாகல்லாஹ், இன்னும் அதிகமான பணிகளுடனும், புது உத்வேகத்துடனும் செயல்பட இறையருளை நாடுகின்றோம்.  எல்லா புகழும் இறைவனுக்கே!