மெளலானா குத்புத்தீன் அஹமத் பாகவி இனி நினைவுகளில் மட்டும்- சிறப்பு கட்டுரை

மெளலானா குத்புத்தீன் அஹமத் பாகவி

 

சிறப்பு கட்டுரைகள்கண்ணியமான மனிதர்!

–   ஏஜாஸ் அஸ்லம் சாஹிப்

மௌலானா  இஃஜாஸ் அஹ்மத் அஸ்லம் அவர்கள்  1977 முதல் 1990 வரை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழகத் தலைவராகப் பணியாற்றியவர். கடந்த 21 ஆண்டுகளாக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியச் செயலாளராகச் சேவையாற்றி வருகின்றார். 7.11.2011 தியாகத் திருநாளன்று சென்னை பெரம்பூரில் உள்ள மஸ்ஜிதே இக்லாஸில் அஸர் தொழுகைக்குப் பிறகு மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி அவர்களுக்காக ‘காயிப் ஜனாஸா’ தொழுகை நடைபெற்றது. தொழுகையை நடத்தி வைத்த அஸ்லம் சாஹிப் அவர்கள், தமது இரங்கல் உரையில் கூறியதாவது :

அன்புக்கினிய நண்பர் மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி அவர்களுடன் எனக்கு நாற்பது ஆண்டுகளாக பழக்கம். திருச்சியைச் சேர்ந்தவர் அவர். சென்னை வில்லிவாக்கத்தில் பள்ளிவாசல் ஒன்றில் இமாமாகப் பணியாற்றி வந்தபோது ஜமாஅத்துடன் நெருக்கமானார். அதன் பிறகு தனது இறுதி மூச்சு வரை அவர் ஜமாஅத்துடன் இணைந்து இருந்தார்; இஸ்லாத்திற்காக சேவையாற்றுவதிலும், குர்ஆனின் செய்தியைப் பரப்புவதிலும், இஸ்லாமியக் கல்வியைப் போதிப்பதிலும் முழுமூச்சாக ஈடுபட்டார்.

 அவர்  மிகவும் இனியவர்; கண்ணியமான மனிதர்; அதிகம் பேச மாட்டார்; அறிவும் தெளிவும் நிறைந்த அறிஞர். குர்ஆனையும் நபிமொழியையும் நபிவழியையும் நன்றாக விளங்கிக்கொள்கின்ற ஆற்றலை அல்லாஹ் அவருக்கு நிறையவே அளித்திருந்தான். எந்தவொரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் அடி முதல் நுனி வரை மிக எளிதாக கணித்துக்கொள்கின்ற ஆற்றலையும் அல்லாஹ் அவருக்கு வழங்கியிருந்தான்.

குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்க்கின்ற சேவையில் அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருந்தார். தமிழில் எளிய நடையில் இனிய மொழியில் மொழிபெயர்ப்பு கிடைப்பதற்கு அவர் பெரும் பங்காற்றினார்.

வாய்மையுடனும் உளத்தூய்மையுடனும் அவர் ஆற்றிய சேவைகள் அனைத்தையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக; அவருடைய பிழைகளைப் பொறுத்தருள்வானாக; அவருக்குத் தன்னுடைய கருணையையும் கிருபையையும் அருள்வானாக; பாவங்களை மன்னித்தருள்வானாக; மறுமையில் முடிவே இல்லாத நிலையான வாழ்வின் மிக உயர்வான படித்தரங்களை வழங்குவானாக; அவருடைய குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை மேற்கொள்கின்ற நற்பேற்றை அருள்வானாக என நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்.

அவருடைய ஆளுமையை ஹபீஸ் மீரட்டி என்கிற கவிஞரின் கவிதை வரிகளில் சொல்லி விடலாம்:

ஹயாத் ஜிஸ் கி அமானத் தீஹ் உஸ் கூ லோடா தீ

மை ஆஜ் செய்ன் சே ஸோதா ஹுன் பாவுன் பெஹ்லாயே

“வாழ்க்கை என்கிற இந்த அமானிதத்தை அதற்கு உரியவரிடம் ஒப்படைத்துவிட்டேன்.

இன்றைக்கு நிம்மதியாக உறங்குகின்றேன் கால்களை நீட்டிக்கொண்டு”நானும் இஸ்லாமிய இயக்கமும்

–  மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி

* உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?

நான் 1937 ஆம் ஆண்டு  ஜூன் 5ஆம் நாளன்று பிறந்தேன். திருச்சி மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி எனது சொந்த ஊர். எனது தந்தை பெயர் மௌலவி அப்துல் ஹை பாகவி. தாயார் பெயர் ஃபாத்திமா பீவி. எனது தந்தை இமாமாகப் பணியாற்றினார். தமிழ், அரபி, உருது ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர். எனக்கு 5 சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் உள்ளனர். நான் குடும்பத்தில் மூன்றாமவன்.

* எங்கு கல்வி பயின்றீர்கள்?

அரவக்குறிச்சி அரசுப் பள்ளியில் தொடக்கக் கல்-வியை முடித்தேன். பிறகு பள்ளப்பட்டியில் உள்ள மக்தூமியா அரபிக் கல்லூரியில் 1952 இல் சேர்ந்தேன். 53 – 54 காலகட்டத்தில் ஈரோடு தாவூதியா அரபிக் கல்லூரியிலும் பிறகு வேலூர் பாகியாதுஸ் ஸாலிஹாத்திலும் கல்வி பயின்றேன். 1960 இல் பட்டம் பெற்றேன்.

* ஜமாஅத் அறிமுகம் உங்-களுக்கு எப்படிக் கிடைத்தது?

ஜமாஅத்தைக் குறித்த எதிர்மறையான அறிமுகம்தான் எனக்கு முதலில் கிடைத்தது. எனது தந்தை முஸ்லிம் லீக் தலைவர்களில் ஒருவராக இருந்தார். அப்போது முஸ்லிம் ஹம்தர்த் தொண்டர் குழு என்ற ஒரு பிரிவு இருந்தது. அந்தத் தொண்டர்களுக்கு அணிவகுப்புப் பயிற்சியை அளிப்பார். இராணுவ அணிவகுப்பு போன்று அது மிடுக்குடன் இருக்கும். ஆகவே இயல்பிலேயே நானும் முஸ்லிம் லீக் அனுதாபியாக இருந்தேன்.  1958 இல் திருச்சியில் முஸ்லிம் லீக் மாநாடு நடைபெற்றது. அதில் காயிதே மில்லத், பாஃபகி தங்ஙள், சி.ஹெச். முஹம்மது கோயா, மறுமலர்ச்சி ஆசிரியர் நாவலர் யூசுப் போன்ற  பெரும் தலைவர்கள் கலந்துகொண்டனர். அதில் நானும் பங்கேற்றேன். ஆனால் சிலரது தவறான முன்மாதிரிகளைக்  கண்டு நான் வேதனையுற்றேன். இயல்பிலேயே என்னிடம் குடி கொண்டிருந்த இஸ்லாமிய உணர்வு அதனுடன் ஒத்துப்போகக் கூடியதாய் இருக்கவில்லை. அதற்குப் பிறகு அதன் மீதான பற்றுதல் என்னைவிட்டுச் சென்றுவிட்டது.

நான் படித்த பாகியாத்துஸ் ஸாலிஹாத்தில் எனது உஸ்தாத் ஒருவர் இருந்தார். அவர் ஒரு மலையாளி. அவர் ஹதீஸ் பாடங்களை நடத்துகின்ற போதெல்லாம் இடையிடையே மௌதூதி இப்படிக் கூறியுள்ளார்; அப்படிக் கூறியுள்ளார் என எப்போது பார்த்தாலும் மௌதூதியைத் தவறாகவே  விமர்சனம் செய்வார். அவர் வாயிலிருந்துதான் மௌதூதி எனும் பெயரை முதன்முறையாகக் கேட்டேன். அப்போதெல்லாம் மௌதூதி என்பவர் இஸ்லாத்தின் விரோதி என்றுதான் நான் கருதி இருந்தேன்.

வேலூரில் படித்துக்கொண்டிருந்தபோது எம்.எம்.ஹபீபுல்லாஹ் என்ப-வர்  வேலூர் மாவட்ட முஸ்லிம் லீக் தலைவராக இருந்தார். அவரைக் காணச் செல்லும்போது அவரது மேசையில் ஏராளமான நூல்கள் இருந்தன. அதில் மௌதூதி எழுதிய நூல்களும் இருந்தன. நான் அவரிடத்தில் மௌதூதி குறித்துக் கேட்டேன். அவர் சொன்னார்: “மௌலானா மௌதூதி அவர்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞர். இஸ்லாத்தின் மேன்மைக்காகப் பாடுபடுகின்றவர். தமது கருத்துகளைத் துணிச்சலாகக் கூறுபவர்.”

இப்போது எனக்கு விஷயம் புரிந்துவிட்டது. மௌதூதி குறித்த காழ்ப்பு உணர்வின் காரணமாகவே என் ஆசிரியர் அவ்வாறு கூறுகிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். படிப்பு முடிந்த பிறகு இமாமத் பணியில் சேராமல் 1963 இல் மதுரை சென்று அங்கு ஒரு ஜவுளிக் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். அருகில் உள்ள தேநீர்க் கடையில் ஒருவர் இருந்தார். அவர் ஜமாஅத்தின் ஆதரவாளராக இருந்தார். அவர் அடிக்கடி மௌதூதி குறித்து என்னிடம் கூறுவார். அப்போதுதான் நான் சிந்திக்கத் தொடங்கினேன். மௌதூதி என்பவர் ஒரு சாதாரண மனிதர் அல்லர். அதனால்தான் அவரைக் குறித்து நாடே அறிந்திருக்கிறது போலும் எனக் கருதினேன்

65 இல் பல்லாவரத்தில் ஒரு மளிகைக் கடையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது நான் மௌலானா அபூஸலீம் அப்துல் ஹை அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘அல்ஹஸனாத்’ இதழைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஜமாஅத் ஊழியரான  அஹமத் கபீர் என்பவர் அதனைப் பார்த்துவிட்டு என்னைப் பற்றித் தெரிந்து கொண்டார்.

கீதுராய் தெலுங்கு இதழின் ஆசிரியராக இருந்த ஆந்திராவின் எஸ். எம். மலிக், அப்துல் அஜீஸ் ஆகியோர் அப்போது சென்னை இரயில்வேயில் பணி புரிந்து வந்தனர். அவர்கள் இருவரும்  ஜமாஅத்தின் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்கள் என்னை வில்லிவாக்கம் பள்ளிவாசலுக்கு இமாமத் பணியாற்ற அழைத்தனர். ஜமாஅத்தே இஸ்லாமியைச் சேர்ந்த அப்துஸ் ஸலாம், அப்துல் கரீம், மெஹ்மூத் கான், மௌலா அலீ ஆகியோர் அந்தப் பள்ளிவாசலின் கமிட்டியில் இருந்தர். அவர்கள் அழைத்ததால் நான் அங்கு இமாமத் பணியாற்றச் சென்றேன். அந்தத் தோழர்கள் மௌலானா உரூஜ் காதிரி அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘ஜிந்தகி நவ்’ எனும் இதழைத் தந்தனர். ஜமாஅத்தே இஸ்லாமியைக் குறித்த முழுமையான அறிமுகம் அப்போதுதான் எனக்குக் கிடைத்தது.

அங்கு ஒரு கிளை உருவானது. அதன் பின்னர்  அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ளே இருந்த எண் 8, பேரர் தெருவில் இருந்த ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, என்னை மௌலானா எம்.ஏ.ஜமீல் அஹமத் அவர்களிடம் அறிமுகப்படுத்தினர்.

* உங்களின் முதல் மொழிபெயர்ப்பு அனுபவம் குறித்து?

எஸ்.எம். மலிக் அவர்கள் திடீரென ஒருநாள் வந்து மௌலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் எழு-திய ஒரு கட்டுரையைத் தமிழில் மொழிபெயர்த்துத் தரும்படி கேட்டுக் கொண்டார். எனக்கு அனுபவம் இல்லை எனக் கூறி மறுத்தும் அவர் விடுவதாக இல்லை. உங்களால் கண்டிப்பாக முடியும் எனக் கூறி கொடுத்துவிட்டுச் சென்றார். பின்னர் அதனை மொழிபெயர்த்துக் கொடுத்தேன். அவர் அதனை வாங்கிச் சென்று ஏ.கே. ரிஃபாயீ அவர்களின் ‘உரிமைக் குரல்’ பத்திரிகையில் வெளியிடச் செய்தார். அந்த மொழிபெயர்ப்பு நன்றாக இருந்ததாக அனைவரும் பாராட்டினர். சையத் குதுப் அவர்கள் தூக்கிலிடப்பட்ட நேரம். அவரைக் குறித்த ஒரு கட்டுரையையும் மொழிபெயர்த்துக் கொடுத்தேன்.

* பீகாரில் பஞ்சம் ஏற்பட்டபோது நிவாரண நிதி வசூலித்தது குறித்து…

பீகார் மாநிலத்தில் பஞ்சம் தலை விரித்தாடியபோது ஜமாஅத்தே இஸ்லாமி நாடு முழுவதும் நிவா-ரண நிதி திரட்டி பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்புப் பணியில் ஈடுபட்டது. அதற்காக 25 காசு அஞ்சல் தலைகளை வெளியிட்டு அதனை விற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டது. நான் மட்டும் ரூ.1000/- வரை வசூலித்துக் கொடுத்தேன். அந்தக் காலத்தில் 1000 ரூபாய் என்பது மிகப் பெரும் தொகை. அதனால் தலைவர்களின் பாராட்டைப் பெற்றேன். இதனால் ஜமாஅத் வட்டாரத்தில் இவர் நன்றாக வேலை செய்யக்கூடியவர் எனும் கருத்து பரவலானது.

* தமிழ்ப் பிரசுர ஆலயம் குறித்துச் சொல்லுங்களேன்?

ஜமீல் சாஹிப் அவர்கள் இயக்க நூல்களைத் தமிழில் வெளியிடுவதற்காகத் தமிழ்ப் பிரசுர ஆலயம் எனும் பெயரில் ஒரு பதிப்பகத்தைத் தோற்றுவித்தார். இதன் முதல் வெளியீடாக இஸ்லாம் மத ஞான விளக்கம் எனும் புத்தகம் வெளியிடப்பட்டது.  இதுதான் இன்று உலகம் முழுதும் அறியப்படுகின்ற இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளையின் (IFT) தொடக்கமாக இருந்தது.

* அப்போது யார் தலைவராக இருந்தார்?

மௌலானா அப்துல் அஜீஸ் சாஹிப் அப்போது ஆந்திராவுக்கும் தமிழ்நாட்டிற்கும்  தலைவராக இருந்தார். ஹாஜி முஹம்மத் இப்ராஹீம் சென்னை மாநகரத் தலைவராக இருந்தார். சி. அப்துல் ஜலீல், மரைக்காயர், ஹனீஃப் ஆகியோர் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர்.

* நீங்கள் எப்போது முழு நேர ஊழியராகச் சேர்ந்தீர்கள்?

1969 இல் நான் முழு நேர ஊழியராக நியமிக்கப்பட்டேன். தொடக்கத்தில் புத்தகங்களை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டேன். புத்தகங்கள் யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் அச்சகத்தில் பிரசுரிக்கப்பட்டன. ஜமீல் சாஹிப் என்னிடத்தில் தரக்கூடிய நூல்களை நான் அங்கு கொண்டு சென்று கொடுப்பேன். அது அச்சில் ஏற்றப்படும் வரை அங்கேயே இருந்து சரிபார்த்துக் கொடுத்துவிட்டு வரும்படி ஜமீல் சாஹிப் கூறுவார். நானும் அவ்வாறு செய்து வருவேன்.

* தொடக்க காலத்தில் இந்தப் பணிக்கு யாரெல்லாம் உதவியாக இருந்தனர்?

திறமையானவர்கள் யார் என்பதை அடையாளங் கண்டு அவர்களை இஸ்லாமியப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் கலையைக் கை வரப் பெற்றிருந்தார்  ஜமீல் சாஹிப். அப்போது ‘பிறைக்கொடி’ பத்திரிகையின் துணை ஆசிரியராக இருந்த தண்ணன் முஹம்மத் மூஸா, மஹ்தி, எஸ். அப்துல் வஹாப், நாசர், சதாவதானி ஷெய்குத் தம்பி அவர்களின் மகன் அப்துல் ஹமீத், வரைகலைஞர் யூசுப் என பலரது உதவியைப் பெற்று நூல்களை வெளியிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. திரீ-யெம் பிரிண்டர்ஸில் முகப்பு அட்டை அச்சடிக்கப்பட்டு வந்தது.

* நீங்கள் எப்போது உறுப்பினர் ஆனீர்கள்?

1974 இல் நான் உறுப்பினர் ஆனேன். அப்போது அப்துல் அஜீஸ் சாஹிப் தலைவராக இருந்தார். அப்போது ஜமாஅத்தின் உறுப்பினர்களாக மலையாளிகளும் உருது பேசும் மக்களும்தாம்  இருந்தனர். நானும் இராஜகிரி அப்துர் ரஹ்மானும்தான் தமிழர்களாக இருந்தோம்.  இராஜகிரி அப்துர் ரஹ்மானை அழைத்துக் கொண்டு அமீரே ஹல்காவாக இருந்த அப்துல் அஜீஸ் சாஹிப் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணங்களை மேற்கொள்வார். பிறகு நானும் அவருடன் செல்லத் தொடங்கினேன்.

* நெருக்கடி நிலையின்போது நீங்கள் எங்கு இருந்தீர்கள்?

அப்போது நான் திருச்சியில் இருந்தேன். பெல் நிறுவன வளாகத்தில் இருந்த பள்ளிவாசலில் இமாமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். உளவுத் துறை அதிகாரி ஒருவர் என்னிடம் வந்து விசாரணை நடத்தி விட்டுச் சென்றார் என்றபோதிலும் நான் கைது செய்யப்-படவில்லை. இயக்கத் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

* நீங்கள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

சிறையிலிருக்கும் அஸ்லம் சாஹிப், இப்ராஹீம் சேட் சாஹிப் மூலமாக தகவல்களைச் சொல்லி அனுப்புவார். அதன்படி ஒருநாள் அஸ்லம் சாஹிப் அவர்-களை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது நான் சென்றிருந்தேன். அஸ்லம் சாஹிப் கூறினார்: “மௌலானா! இனி நாங்கள் எப்போது விடுதலை செய்யப்படுவோம் என்பது தெரியாது. அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. எனவே நீங்கள் வேறு எந்தப் பெயரிலாவது இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வாருங்கள்.”

திருச்சியில் இருந்த நான் அல் அமீன் எழுச்சி மன்றம் எனும் பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி சமூக சேவைப் பணிகளிலும் இளைஞர்களைப் பயிற்றுவிக்கும் பணியிலும் ஈடுபட்டேன். அப்போது என்னைக் காண ஜமாஅத் உறுப்பினர் ஹஸன் இக்பால் அடிக்கடி வருவார்.

* பிறகு சென்னைக்கு எப்போது திரும்பினீர்கள்?

1977 இல் ஜமாஅத் மீதான தடை நீங்கி தலைவர்கள் விடுதலை செய்யப்பட்ட உடன் என்னைக் காண அஸ்லம் சாஹிப் திருச்சிக்கு வந்து என்னை மீண்டும் சென்னைக்குக் கையோடு அழைத்து வந்தார். அன்றிலிருந்து  ஜமாஅத் பணிகளில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்.

* தமிழக மக்களிடையே ஜமாஅத் எப்போது பரவலாக அறிமுகம் ஆனது?

தமிழகத்தில் புயல் மழை காரணமாகப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன. அப்போது ஜமாஅத்தே இஸ்லாமி தமிழகத்தின் பல பகுதிகளில் துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபட்டது. அடியக்கமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து உதவிகள் கேட்டுக் கடிதங்கள் வந்தன. ஜமாஅத் அதைச் செய்து கொடுத்தது. இதன் காரணமாகத்தான் தமிழக மக்களிடையே ஜமாஅத் பரவலாக அறிமுகம் ஆனது.

அடுத்து, சமரசம் இதழ் தொடங்கப்பட்டது. ஜமீல் சாஹிப் சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டபோது அவருடன் சிறையில் இருந்த தனித்தமிழ் ஆர்வலர் பெருஞ்சித்திரனார் அவர்களின் நட்பு கிடைத்தது. அவரிடத்தில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள இதழுக்குத் தமிழில் பெயர் சூட்ட வேண்டும். சில பெயர்களை எழுதித் தாருங்கள் எனக் கேட்டபோது அவர் சில பெயர்களை எழுதித் தந்தார்.

இதற்கிடையே சுல்தான் பகுதாதி என்பவர் சமரசம் எனும் பெயரில் ஓர் இதழை நடத்தி வந்தார். ஆனால் அது சரிவர வெளிவருவதில்லை. அவரிடத்தில் கேட்டு அதையே பெயராகச் சூட்டினால் என்ன என்ற ஆலோசனை வந்தது. இறுதியில் அவ்வாறே செய்யப்பட்டது.

சமரசத்தின் முதல் பிரதியை அன்று ஜமாஅத்துல் உலமாவின் தலைவராக இருந்த மௌலானா அபுல் ஹஸன் ஷாதலி அவர்கள் பெற்றுக் கொண்டது இங்கு நினைவுகூரத்தக்கது. சமரசம் இதழ் தமிழக மக்களிடையே இயக்கத்தின் செய்தியைக் கொண்டு சேர்த்தது.

* நீங்கள் இதுவரை என்னென்ன பொறுப்புகளை வகித்துள்ளீர்கள்?

மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர், அழைப்பியல் துறைச் செயலாளர், பயிற்சித் துறைச் செயலாளர், மாநிலத் துணைத் தலைவர் உள்பட பல பொறுப்புகளில் இருந்துள்ளேன்.  ஜமாஅத்தின் நிறுவனங்கள் பலவற்றில் உறுப்பினராக உள்ளேன்.

 * என்னைப் போன்ற இளைஞர்கள் பலருக்கு இஸ்லாத்தின் உண்மையான செய்தியை அறிந்து கொள்வதற்கு மிகவும் உதவிகரமாக இருந்தது IFT வெளியிட்ட திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புதான். அதனை அழகு தமிழில் பெயர்த்தவர்கள் நீங்கள். அந்த அனுபவத்தைச் சொல்லுங்களேன்…

முதலில் யாசீன் அத்தியாயத்தின் விரிவுரையைத் தமிழாக்கம் செய்தேன். இளைஞனே விழித்தெழு எனும் புத்தகத்தைத் தமிழாக்கம் செய்தேன். திருக்குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என ஜமாஅத் முடிவு செய்தது. மௌலானா மௌதூதி அவர்களின் மொழிபெயர்ப்பை வெளியிட முடிவு செய்தது.

எனக்குத் துணையாக அப்போது S.N.சிக்கந்தரும் லியாகத் அலீயும் வந்து சேர்ந்தனர். பிறகு காஞ்சி அப்துர் ரவூஃப் பாகவி, மஸ்தான் அலீ பாகவி, செய்யத் முஹம்மத் மதனீ ஆகியோரும் இந்தப் பணியில் இணைந்து கொண்டனர். இறையருளால் அந்தப் பணியை நல்ல முறையில் செய்து முடித்த மனநிறைவு எனக்கு உள்ளது. நம்முடைய இஸ்லாமிய அறக்கட்டளை நிறுவனமே அதனை வெளியிட்டு இன்று பரவலாக மக்களைச் சென்றடைந்து கொண்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.

* குல்லியதுஸ் ஸலாம் கல்லூரி குறித்துச் சொல்லுங்களேன்..

வேலூர் இஸ்லாமிக் சென்டரின் கீழ் நிறுவப்பட்டுள்ள குல்லியதுஸ் ஸலாம் அரபிக் கல்லூரி இஸ்லாமிய அழைப்பாளர்களை உருவாக்கும் நோக்கோடு தொடங்கப்பட்டுள்ளது. அழைப்புப் பணியில் ஆர்வமுள்ள நான் அதன் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன். தமிழகத்தில் அழைப்புப் பணியாற்ற அதிகம் பேர் தேவைப்படுகின்றனர். இறைவன் நாடினால் எதிர்காலத்தில் அந்தத் தேவையை இது நிறைவு செய்யும்.மௌலானா இனி நினைவுகளில் மட்டும்…!

–  அஷ்ரப் அலீ

 மௌலானா ஏ. குத்புத்தீன் அஹமத் பாகவி அவர்கள் அரவாக்குறிச்சியில் அப்துல் ஹை என்ற புகழ்பெற்ற ஆலிமுக்கு மகனாக 1937 இல் பிறந்தார். அவரின் தந்தை நேர்மை-யானவர்; பார்சி உட்பட பன்மொழி அறிந்த பெருந்தகை. பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாக மௌலவி குத்புத்தீன் அஹமத் பாகவி பிறந்தார்.

சிறுவயதிலிருந்தே கூர்மையான அறிவுத்திறன் கொண்டவர். எதையும் அறிவைப் பயன்படுத்தியே தீர்வு காண்பார். மூடநம்பிக்கைகளைச் சாடுபவர். 5 ஆம் வகுப்பு வரை படித்தவர். அதற்கு மேல் படிக்க வசதியில்லாத காரணத்தால் வேலைக்குச் சென்றவர். பிறகு ஆலிமாக வேண்டும் என்ற ஆவலில் அவரின் தந்தையாரிடமும் கூறாமல் வேலை செய்யும் இடத்திலிருந்து ஈரோட்டில் உள்ள ஒரு மதரஸாவிற்குச் சென்றார். அங்கு சிறிது காலம் படித்தார். அது சமயம் ஆம்பூரில் அவரின் தந்தை இமாமத் பணி செய்து வந்தார். அப்பொழுது அனைவரும் அங்கு குடிபெயர்ந்தார்கள். பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் ஆலிம் பட்டப்படிப்பில் இணைந்தார்.

சுன்னத் ஜமாஅத்திற்கு அப்பாற்பட்ட எந்த நூலையும் படிக்க அனுமதி கிடையாது. வகுப்புகள் நடைபெறும் போது மௌலானா மௌதூதி பற்றிய  விமர்சனங்கள் வரும்-போதெல்லாம் யார் அந்த மௌதூதி அவர் என்ன சொல்ல வருகிறார், மௌலானாவின் சிந்தனை என்ன போன்ற கேள்விகள் அவரின் உள்மனதில் எழத் தொடங்கின.

அதன் விளைவாக ஜமாஅத் நூல்களைத் தேடி அலைந்தார். ஒரு முஸ்லிம்லீக்காரர் வேலூரில் நண்பரானார். அவரிடம் மௌலானா மௌதூதியின் நூலை வாங்கி வந்து படிக்கத் தொடங்கினார். இரவு நேரத்தில் விழித்திருந்து படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று சோதனைக்கு ஆசிரியர் வந்து விட்டால் உடனே அந்த குத்பாத் நூலை தலையணைக்குக் கீழ் மறைத்து வைத்து தலையணை மீது உட்கார்ந்து கொள்வார்.

ஆசிரியர் சென்றதும் மீண்டும் படிக்கத் தொடங்குவார். இப்படியே ஜமாஅத்தின் பல்வேறு நூல்களைப் படித்த பின்பு அவருக்குள் கேள்வி எழுந்தது. சரியான கருத்தைத்தான் சொல்கிறார். அறிவுக்குப் பொருத்தமானதைதான் மௌலானா கூறுகிறார் என்ற சிந்தனை மாற்றம் ஏற்பட்டது. ஆலிம் பட்டம் பெற்ற பின் சில பள்ளிவாசல்களில் இமாமாகப் பணியாற்றினார். இமாம் என்பதால் உள்ளூரில் நடைபெறும் பாத்திஹா, 40 பாத்திஹா, காது குத்து போன்ற வைபவங்களுக்குப் போகக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்படி சூழ்நிலை இருந்த இடங்களிலிருந்து கிளம்பி வந்து விடுவார். மேலும் இமாமத் பணிக்குச் செல்லும் போது தொழ வைப்பதும், மக்தபு நடத்துவது மட்டும் செய்வேன். வேறு எந்த நிகழ்விற்கும் வர மாட்டேன் என்று முன்பே கூறி விட்டுப் போவார்.

ஒரு முறை இமாமத் பணியிலிருந்து விலகிய போது ரேஷன் கடையில் பணிபுரிந்தார். அங்கும் அநியாயம் நடைபெற்றது. பொய்யான பில் போட வேண்டும் என வற்புறுத்தினார்கள். உடனே அதையும் விட்டு விலகினார். அதன் பின் திருச்சி ரெஜிமென்டல் பஜார் பள்ளியில் இமாமாகப் பணியாற்றிய போது, மூடநம்பிக்கைகளில் மூழ்கியிருந்த மக்களைச் சீர்திருத்தம் செய்வதற்காக இளைஞர் பட்டாளம் ஒன்றைத் தயார் செய்தார். அல்அமீன் எழுச்சி மன்றம் என்ற அந்த அமைப்பு பல அரிய பணிகளைச் செய்தது. அநாச்சாரங்களுக்கு எதிரான இவருடைய பிரச்சாரத்தைத் தாங்கிக் கொள்ள இயலாத சிலர், இவரை இமாமத் பணியிலிருந்து நீக்க முயற்சி செய்தனர். அதற்கு முன்பாக மௌலானாவே பணியிலிருந்து விலகிவிட்டார்.

வில்லிவாக்கத்தில் ஒரு பள்ளிவாசலில் இமாமாகப் பணியைத் தொடர்ந்தார். அந்தப் பள்ளியில் ஹைதராபாத்தைச் சேர்ந்த எஸ்.எம். மலிக் சாஹிப் (இரயில்வே துறையில் பணியாற்றியவர்). பள்ளியில் தொழுகைக்கு வருவார். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். குடும்ப நண்பராக இருந்தார்கள்.

மௌலானா ஜமீல் அஹ்மத் சாஹிப் எஸ்.எம். மலிக் சாஹிபைச் சந்திக்க வருவது வழக்கம். ஒரு முறை கையில் தாவத் உருது நாளிதழைக் கொண்டு வந்தார். அது எப்படியோ மௌலவி அவர்களின் கைக்குக் கிடைத்தது. உடனே படிக்கத் தொடங்கினார். மீண்டும் அடுத்த இதழ் எப்போது கிடைக்கும் என்ற ஆவலுடன் இருந்தார். இதையறிந்த மலிக் சாஹிப் இச்செய்தியை மௌலானா ஜமீல் அஹ்மதிடம் கூறினார். உடனே கிடைத்தது விலாங்கு மீன் என்று ஜமீல் அஹ்மத் அவர்கள் அடிக்கடி மௌலவி அவர்களைச் சந்திப்பது, விவாதம் புரிவது தொடர்ந்தது…

அதன் விளைவாக மௌலானா குத்புத்தீன் பாகவி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கத்துடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். உர்து மொழியிலிருந்து குறிப்பிடத்தக்க நூல்களைத் தமிழாக்கம் செய்தார். திருக்குர்ஆனைத் தமிழில் கொண்டு வர வேண்டும் என இயக்கத் தலைமை முடிவு செய்த போது, குர்ஆன் மொழிபெயர்ப்புக் குழுவின் தலைவராக மௌலானா குத்புத்தீன் பாகவி அவர்கள்தாம் நியமிக்கப்பட்டார். பல ஆண்டுகள் கடின உழைப்புக்குப் பின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புப் பணிகள் முழுமை அடைந்தன.

ஒரு முறை இஸ்லாமிக் அகாடமிக்கு ஒரு கடிதம் வந்தது. டேப் தங்கதுரை என்பவர் எழுதியிருந்தார். அவர் புதூர் தர்காவில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பாட்டு பாடுபவர். அவர் ‘இஸ்லாம் பற்றி அறிய விரும்புகிறேன்; எனக்கு நூல் அனுப்பி வைக்கவும்’ என விருப்பம் தெரிவித்திருந்தார். நானும் மௌலானா அவர்களும் தண்டையார்பேட்டையில் உள்ள அவர் இடத்திற்குத் தேடிச் சென்றோம். அங்கு சென்று பார்த்த போதுதான் தெரிந்தது அந்த இடம் வடசென்னையின் குப்பை கொட்டும் இடம் என்று. ஒரே நாற்றம். குப்பை மீதுதான் நடந்து செல்ல வேண்டும். நான் கூறினேன், “மௌலானா, வெள்ளையும் சொள்ளையுமாக கம்பீரமான தொப்பி வைத்து வருகிறீர்கள். மக்கள் அனைவரும் உங்களையே உற்று நோக்குகிறார்கள். இடமோ மோசமாக இருக்கிறது. சகோதரர் தங்கதுரையை அலுவலகத்திற்கு அழைத்துப் பேசிக்கொள்ளலாம்” என்றேன்.

“இப்படித் திரும்பிச் செல்வது நபிகளாரின் முன்மாதிரி அல்ல. நாம் அவரைச் சென்று பார்ப்போம் வா” என உறுதியாக இருந்தார். தேடினோம் கிடைத்தது. கழிவுநீர் ஓடை ஓரமாக வீடு. பக்கத்தில் சாராயக்கடை. வீட்டிற்குள் நிமிர்ந்து செல்ல முடியாது. குனிந்துதான் செல்ல வேண்டும். சென்றோம். அந்த நபர் பீடியை சுருட்டிக் கொண்டே பேசினார். மிக அழகான முறையில் தவ்ஹீத், ரிசாலத், ஆகிரத் ஆகிய மூன்று செய்தியையும் 2 மணி நேரத்தில் மௌலானா அவர்களுக்கு அவருக்கு எடுத்து வைத்தார். தங்கதுரை தேநீர் வாங்கிக் கொடுத்தார். அருந்தினோம். விடை பெற்றோம்.

தொடர் சந்திப்பிற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தங்கதுரையின் வீட்டிற்குச் சென்றோம். அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்தான். குடும்பத்துடன் கலிமா சொல்ல முன்வந்தார். அவரை அலுவலகத்திற்கு அழைத்து சத்தியத்தை ஏற்ற பின்பு அவருக்கு அறிவுரை வழங்கினோம். இனி அந்த இடத்தில் இருப்பது நல்லதல்ல. இடம் மாற்றம் செய்யுங்கள் என்றவுடன் உடனே அதை ஏற்று அவர் முழுமையான இஸ்லாமியராக மாறி வாழ்ந்து வந்தார்.

 இன்று அந்தத் தங்கதுரையின் குடும்பத்திலிருந்து ஓர் ஆலிம் உருவாகி அவர் ஒரு பள்ளியில் இமாமாக உள்ளார். இப்படி ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து முழுமையாக அவரை மாற்றி அவரின் வாழ்வாதாரத்துக்கும் உதவி செய்து முழு மனிதராக மாற்றியவர்கள் நூற்றுக்கும் மேல் இருப்பார்கள்.

ஒரு முறை ஒரு பெண்மணி நேர்வழி பெற்று இருந்த சமயத்தில் கடுமையான காசநோய் தொற்றியது. நல்ல திறமையுள்ள மாணவி. யாரும் இல்லை அவருக்கு. அவரின் நோய் காரணமாக யாரும் அவரைக் கவனிக்க முன்வரவில்லை. பயந்தார்கள். மௌலானா அவர்கள் தம் மகளைப் போன்று அவரைப் பாதுகாத்து மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்று அந்தக் கொடிய நோயிலிருந்து அவரை மீட்டெடுத்து நல்ல இடத்தில் அவருக்குத் திருமணமும் முடித்து வைத்தார். இன்று அந்தப் பெண் ஒரு தாயியாக பணியாற்றி வருகிறார். ஆக மௌலானாவின் வாழ்வில் இது போன்று நிறைய நிகழ்வுகள்!

எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் நிதானமாகப் பேசுவார். அறிவார்ந்த பேச்சையே முன்வைப்பார். அலுவலகத்தில் தமக்கு ஒதுக்கப்பட்ட பணி முடியும்வரை நேரம் காலம் பாராமல் உழைப்பார். பயணம் செய்யும் போது கூட இயக்கப் பணி இஸ்லாமிய செய்தி குறித்த உரையாடல் இருக்கும். உருது தெரிந்த காரணத்தினால் எப்பொழுதுமே இயக்க நூல்களைப் படித்த வண்ணம் இருப்பார். ஜமாஅத் செய்தி இல்லாத உரையாடல் இருக்காது. அவரின் வாழ்க்கையில் இறுதி காலகட்டங்களில் அழைப்புப் பணியின் துறையையே தேர்ந்தெடுத்து வெற்றிகரமாகச் செயல்பட்டார்

மௌலானா குத்புத்தீன் அஹமத் அவர்கள் இந்த உலகத்தில் இருந்த வரை வாய்மையுடனும் உளத்தூய்மையுடனும் செய்த சேவைகள் ஏராளம். அவை அனைத்தையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக!

 அவருடைய பிழைகளைப் பொறுத்தருள்வானாக. மறுமைப் பேறுகளை வாரி வழங்குவானாக.


 

மலைக்கோட்டையிலிருந்து

புறப்பட்ட ஒரு மாணிக்கம்

–  கவிஞர் ருக்னுத்தீன்


மலைக்கோட்டையிலிருந்து புறப்பட்ட

இந்த மாணிக்கம்

இன்று மண்ணறையில்..!

மலைக்கோட்டை முதல்

மண்ணறை வரை இந்த

மாணிக்கத்தின் வாழ்வு

மணிமகுடமாய்  ஜொலித்தது..!

மாணவனாக

மரக்கடை வியாபாரியாக

மௌலவியாக இமாமாக

நூலாசிரியராக

மொழிபெயர்ப்பாளராக

சொற்பொழிவாளராக

பேராசிரியராக தோழனாக அறிஞராக

இயக்கத்தின் மூத்த தலைவராக

வழிநடத்திச் செல்லும் முன்னோடியாக

இவர் வாழ்வில் ஏற்ற பாத்திரங்கள் எண்ணிலடங்கா!

என்போன்ற இளைஞர்களுக்கு

அவர் ஓர் ஒளிச்சுடர்

மாணவர்களுக்கு அவர் ஒரு மணிச்சுடர்

அந்தச் சுடர் இன்று அணைந்துவிட்டது..!

பல்லாயிரம்பேருக்கு சத்தியத்தை அறிமுகப்படுத்தியவர்

இன்று சாந்தமாய் உறங்குகிறார்

பலருடைய இல்லற வாழ்வுக்கும் வழியமைத்தவர்

இன்று இனிமையாய் உறங்குகிறார்

தீனை நிலைநாட்ட நடையாய் நடந்தவர் இன்று

தீரா உறக்கத்தில் இருக்கிறார்

இறைமறையைத் தமிழுக்குத் தந்தவர் இன்று

இறைவன் முன் தலைசாய்த்து விட்டார்

கிழிந்த இதயங்களைப்

பல  நூல்களால் தைத்தவர்

சத்தியத்தைத் தோள்மீது சுமந்து

சுற்றித் திரிந்தவர்

கல்லாமை போக்கக் கங்கணம் கட்டியவர் இன்று

அல்லாஹ்விடம் திரும்பிவிட்டார்

எங்கள் தோழமையிலிருந்து பிரிந்து

இறைத் தோழமையில் மூழ்கிவிட்டார்

நாங்கள் காயப்படும்போதெல்லாம்

எங்கள் கண்ணீரைத் துடைத்தவர் இன்று

கண்ணுறங்கச் சென்றுவிட்டார்

முதுமையிலும் இளைஞர்களோடு பழகியவர்

மறுமையிலும் இளைஞராகவே எழுப்பப்படுவார்

இன்ஷா அல்லாஹ்

உறவுகள் இருந்தும் துறவியாய் வாழ்ந்தவர் இன்று

தொலைதூரத்தில் அடக்கமாய்..!

ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும்

சொல்லித் தந்தவர் சுவைத்தே விட்டார்

இறைவா,

எங்கள் மணிமகுடத்தின் பிழைகளை எல்லாம்

மன்னித்தருள்வாயாக.

சுவனத்தின் உயர்பேறுகளை

வாரி வழங்குவாயாக!

ஆட்களை உருவாக்குங்கள்;

அதுதான் மறுமையில் வெற்றி ஈட்டித் தரும்!


மௌலானா குத்புத்தீன் அஹமத் பாகவியைக் குறித்து

அவருடைய மாணவர் எஸ்.என். சிக்கந்தர் நினைவுகூர்கிறார்.

 –  எஸ்.என். சிக்கந்தர்

இஸ்லாமியப்  புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்பதற்காக அப்போது திருவல்லிக்கேணி தகியுத்தீன்கான் தெருவிலிருந்த ஜமாஅத்தே இஸ்லாமி அலுவலகத்திற்குச் சென்றேன். அப்பொழுதுதான் மௌலவி குத்புத்தீன் அஹ்மத் பாகவி அவர்களை முதன் முதலாகச் சந்தித்தேன். அங்கே என்னை வரவேற்றுப் பேசினார். நூல் வாங்க வந்த என்னை அன்புக் கயிற்றால் கட்டி விட்டார்.

திருவல்லிக்கேணி கெல்லட் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரம். ஒரு நாள் மாலையில் சந்திப்பு. அதன் பிறகு சந்திப்புகள் தொடர்ந்தன. நூலைப் படித்து விட்டு அது பற்றி கருத்து சொல்ல வேண்டும்.

தொடர்பு தொடர்ந்தது. விடுமுறை நாட்களில் ஜமாஅத் அலுவலகத்திலேயே தங்கி விடுவேன்.

தினமும் எழும்பூரிலிருந்து டிரெயின் பிடித்து செயின்ட் தாமஸ் மவுண்ட் இறங்கி அவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.

தஃப்ஹீமுல் குர்ஆன் சூரா பகரா திருத்தப் பணி. நானும் டிபன் பாக்ஸில் உணவு எடுத்துப் போவேன். அங்கும் பகலுணவு சுடச்சுட ஆணம். பெரும்பாலும் தட்டைப் பயிறு குழம்பு, சாம்பார், கீரை இப்படித்தான்…

ஹாமீத் அலீ சாஹிபின் நபிமொழி நாற்பது – ஹதீஸ் திருத்தம் – யாசீன் சூரா விளக்கம். அவர் அடித்து, திருத்தி எழுதியிருப்பதை நான் படி எடுத்து எழுதித் தர வேண்டும். அதனைப் படித்துக் காட்ட சொல்வார். புரிகிறதா என்று கேட்பார். புரிகிறது என்று தலையாட்டுவேன். என்ன புரிந்தது என்று விளக்க வைப்பார்.

பெரியமேடு அட்கின்சன் தெருவில் அக்பர் சாஹிப் வீட்டின் பின்புறமுள்ள விருந்தினர் அறையில் தஃப்ஹீம் பணி. அவர் சொல்லச் சொல்ல நான் எழுத வேண்டும். சுற்றிலும் அகராதிகள் (Dictionary) அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அரபியிலிருந்து அரபி, உருதுவிலிருந்து உருது, ஆங்கிலத்திலிருந்து தமிழ் ஒரு சொல்லுக்கு எத்தனை அர்த்தம் உண்டோ அவ்வளவையும் தனித்தாளில் எழுத வேண்டும். பின்னர் அதனை வாசித்துக் காட்ட வேண்டும். நோட்புக், பேனாவோடுதான் குர்ஆனை வாசிக்க வேண்டும் என வலியுறுத்துவார்.

உருது கற்க வேண்டும் எனும் ஆசையைத் தூண்டியவர் அவர்தான். ததப்புரே குர்ஆன், தஃப்ஹீமுல் குர்ஆன், மஆரிபுல் குர்ஆன் இப்படி பல தஃப்ஸீர்கள் உருதுவில்தான் உள்ளன. அது போல இஸ்லாமிய இயக்க நூல்களும் உருதுவில்தான் உள்ளன. உருது மொழி மூலம் எளிதாக இஸ்லாத்தின் தேட்டங்களை, குர்ஆனின் விழுமங்களை, இஸ்லாமிய இயக்கத்தின் கட்டமைப்பை உள்வாங்கிக் கொள்ளலாம் என வலியுறுத்தியவர்.

நானும், சமரசம் பொறுப்பாசிரியர் சிராஜுல் ஹசனும்தான் மாணவர்கள். சுபுஹு தொழுகை முடிந்த பிறகு உருது வகுப்பு ஆரம்பமாகும்.

மார்க்க அறிவை வளர்க்க, உருது ஆற்றலை மெருகேற்ற தமிழகத்தில் உமராபாத், தாருஸ்ஸலாம் அரபிக்கல்லூரி, உபியில் பலேரியாகன்ஜில் உள்ள ஜாமியத்துல் ஃபலாஹ் அரபிக்கல்லூரி இரண்டில் ஒன்றைத் தேர்வு செய் என்று சொன்னார். அந்த இரண்டு கல்வி நிலையங்கள் அந்த ஊரின் இயற்கை சீதோஷ்ணங்கள் உணவு முறை இப்படிச் சாதக, பாதகங்களைப் பட்டியலிட்டு உமராபாத் ஜாமியா தாருஸ்ஸலாம் சென்று படிக்க அனுப்பி வைத்தவர் அவரே.

உருதுச் சொற்பொழிவுகளைத் தமிழுக்கு மாற்றும் போது என்னென்ன நுட்பங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சொல்வார். ஜமாஅத்தின் தலைவர்கள் மௌலானா அபுல் லைஸ் இஸ்லாஹி சாஹிப், மௌலானா ஹாமித் அலீ சாஹிப், மௌலானா அப்துல் அஜீஸ் சாஹிப், மௌலானா சிராஜுல் ஹசன் சாஹிப், இப்படி யார் வந்தாலும் அவர்களின் உர்து உரைகளை மொழியாக்கம் செய்ய வேண்டும்.

மொழிபெயர்ப்பை மேடையிலிருந்தோ, பார்வையாளர் கூட்டத்திலிருந்தோ கவனிப்பார். கூட்டம் முடிந்த பிறகு மொழிபெயர்ப்பில் இருந்த கருத்துப் பிழை, வார்த்தைப் பிழைகளைக் கனிவோடு சுட்டிக்காட்டி திருத்துவார்.

தஜ்வீது வகுப்பில் குர்ஆனை ஓதும் போது தவறில்லாமல் அழகாக ஓதும் வரை அடுத்த பாடத்துக்கு நகர மாட்டார். குர்ஆன் வகுப்புக்குச் செல்லும் முன் தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களை, நேர்த்தியாக, கம்பீரமாக, அழகாக, நிதானமாக, மெருகு குறையாமல் ஓதப் பயிற்சி அளிப்பார். தேவையான குறிப்புகளைக் கொடுப்பார். அந்த வசனங்களுக்கு வலுவூட்டக் கூடிய இயக்க நூல்களைக் குறிப்பிட்டுப் படிக்க ஆர்வமூட்டுவார்.

அவருடன் பயணம் போவது அலுப்பில்லாமல் இருக்கும். இரண்டு நாள் பயணமானாலும் எட்டு நாள் பயணமானாலும் அதே சின்ன பெட்டிதான். பழம் நறுக்க சின்ன கத்தி முதல் துவைத்த துணிகளைக் காயப்போட பிளாஸ்டிக் கயிறு வரை அப்பெட்டிக்குள் அடக்கம்.

குர்ஆனுடன் நெருக்கத்தை வளர்த்துக்கொள்ள வலியுறுத்துவார்.

ஆட்களை உருவாக்குவதில் அதிகம் கவனம் தேவை. மறுமையில் அதிக நன்மைகளை ஈட்டித் தருவதும் அதுவே எனக் கூறுவார்.

பிறரின் பிரச்னைகளைக் கேட்பது; அதனைப் புரிந்துகொண்டு அவருக்குத் தீர்வு கூறி நெறிப்படுத்துவது போன்றவற்றைச் சளைக்காமல் செய்வார்.

ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக, ஆழமாகச் செயல்படுவதிலேயே ஆர்வம் காட்டுவார்.

விளம்பர வெளிச்சத்தை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு எளிமையாக, அமைதியாக வாழ்வதையே இலக்காகக் கொண்டு வாழ்ந்தவர்.

இறுதியாக சந்தித்தது சிங்கப்பூர் செல்ல இரு நாட்களுக்கு முன் 23.10.11 அன்று சந்திப்பு அவரது இல்லத்தில். மனம் விட்டு நீண்ட நேரம் பேசினோம்.

“வெல்ஃபேர் பார்ட்டியின் அமைப்புச் சட்டம், அறிமுக ஏடு கொடுத்தனுப்புங்கள். சிங்கப்பூரிலிருந்து வந்தவுடன் திருவண்ணாமலையிலிருந்து அரசியல் பணியைத் துவக்க விரும்புகிறேன். திருவண்ணாமலையிலுள்ள சாதிக் போன்ற சில இளைஞர்களிடம் வெல்ஃபேர் பார்ட்டியை அறிமுகப்படுத்தியுள்ளேன்” எனக் குறிப்பிட்டார்.

மகள் வீட்டுக்குப் போய் இரண்டு மாதங்கள் கழித்து திரும்பி வருவேன் என்று கூறினார். ஆனால்… மீண்டும் திரும்ப முடியாத இடத்திற்கே… இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்…!