திருக்குர்ஆன் 23:10-14 – பருவத்துக்குப் பருவம் எத்துணை மாற்றம்!

இவர்கள்தாம் ஃபிர்தௌஸ்எனும் சொர்க்கத்தைப் பெறும் வாரிசுகளாவர். இன்னும், அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள்.11

மனிதனை நாம் களிமண்ணின் சத்திலிருந்து படைத்தோம். பின்னர் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் (செலுத்தப்பட்ட) விந்தாக ஆக்கினோம். பிறகு அந்த விந்தினை இரத்தக் கட்டியின் வடிவத்தில் அமைத்தோம். பின்னர் அந்த இரத்தக்கட்டியை சதைக்கட்டியாய் ஆக்கினோம். பிறகு அச்சதைக்கட்டியை எலும்புகளாய் ஆக்கினோம். பின்னர் அவ்வெலும்புகளைச் சதையால் போர்த்தினோம்.12 பிறகு, அதனை முற்றிலும் வேறொரு படைப்பாக வளரச் செய்தோம்.13

11. 1 முதல் 11 வரையிலான இந்த வசனங்களில் நான்கு முக்கியமான செய்திகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன: எவர்கள் குர்ஆனையும் அண்ணல் நபிகளாரையும் ஏற்றுக்கொண்டு தமக்குள் இன்னின்ன பண்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றார்களோ, இத்தகைய நடத்தையைப் பேணி நடக்கின்றார்களோ அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியும் வளமும் வந்து சேரும்; அவர்கள் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாயினும் சரி, எந்த நாட்டில் வாழ்ந்தாலும் சரி, எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாயினும் சரி, அவர்களே வெற்றி பெறுவார்கள்.

இறைவன்மீது நம்பிக்கை கொண்டு விட்டோம் என வெறுமனே சொல்லி விடுவதாலோ வெறுமனே ஒழுக்கத்திலும் நடத்தையிலும் சிறந்து விளங்குவதாலோ மட்டும் அவர்களுக்கு இந்த வெற்றியும் வளமும் வந்து சேர்வதில்லை. அதற்கு மாறாக இறைநம்பிக்கையும் நற்செயலும் ஒருசேர இருக்கும்போதுதான் அவர்களுக்கு வெற்றியும் வளமும் வந்து சேர்கின்றன. இறைவனிடமிருந்து வந்த வழிகாட்டுதலை ஒருவர் ஏற்றுக்கொண்ட பிறகு, அந்த இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் தமது ஒழுக்கத்தையும் நடத்தையையும் சீர்திருத்திக்கொண்டபிறகுதான் அவருக்கு வெற்றியும் வளமும் வந்து சேரும்.

இந்த உலகில் தற்காலிகமாகக் கிடைக்கின்ற செழிப்புக்கும் வெற்றிக்கும் வசதி வாய்ப்புக்கும் பெயர்தான் ஃபலாஹ் என்பதல்ல. அதற்கு மாறாக, அனைத்தையும் தழுவிய, முடிவே இல்லாத நன்மைக்கும் நலத்திற்கும் பெயர்தான் ஃபலாஹ். உலகிலும் மறுமையிலும் கிடைக்கின்ற நிலையான, எல்லையில்லா வெற்றிக்கும் மனநிறைவுக்கும் பெயர்தான் ஃபலாஹ். இறைநம்பிக்கையும் அதற்கு இயைந்த நற்செயலும் இல்லாமல் இத்தகைய வெற்றியும் நற்பேறும் கிடைக்காது. வெற்றிக்கும் நம்பிக்கைக்கும் நற்செயலுக்கும் இடையிலான இந்தப் பிணைப்பு வழிகெட்டுப் போனவர்களுக்குக் கிடைக்கின்ற தற்காலிகமான வெற்றிகளாலும் வளங்களாலும் முறிந்துவிடாது. இறைநம்பிக்கையாளர்களுக்கும் ஸாலிஹான நடத்தை கொண்டவர்களுக்கும் இந்த உலகில் நேர்கின்ற தற்காலிகமான துன்பங்கள், சிரமங்கள் ஆகியவற்றைக் கொண்டு வெற்றிக்கான இந்த விதியை மறுக்கவும் முடியாது; மாற்றவும் இயலாது.

அண்ணல் நபிகளாரின் அழைப்பும் பணியும் சத்தியமானவை என்பதற்கான சான்றுகளாக இறைநம்பிக்கை–யாளர்களிடம் காணப்படுகின்ற இந்த அழகிய பண்புகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்த வசனங்களின் இந்த அம்சம்தான் இவற்றை இதற்குப் பிறகு ஐம்பதாம் வசனம் வரை நீளுகின்ற உரைத்தொடருடன் பிணைக்கின்றது. அண்ணல் நபிகளாரின் அழைப்பு சத்தியமானது என்பதற்கான சான்றுகள் ஐம்பதாம் வசனம் வரை மூன்று கோணங்களில் எடுத்துரைக்கப்படுகின்றன.

முதலில் இதற்கான நடைமுறைச் சான்றுகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டன. அண்ணல் நபிகளாரின் அழைப்பும் போதனையும் இந்த மனிதர்களிடம் ஏற்படுத்தியிருக்கின்ற தாக்கங்களையும் மாற்றங்களையும் பாருங்கள். யார் இவர்கள்? எல்லோருமே உங்களோடு சமூகத்தில் வாழ்கின்றவர்கள்தாம். ஆனால் அண்ணல் நபிகளாரின் அழைப்பை ஏற்றுக்கொண்டதால் அவர்களுக்குள் இன்னின்ன பண்புகளும், அழகு குணங்களும் மலர்ந்துள்ளன. இப்போது நீங்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அண்ணல் நபிகளாரின் அழைப்பும் பணியும் சத்தியமானவையாக இல்லாமல் இருந்திருந்தால் இவர்களிடம் இந்த அழகிய மாற்றங்கள் மலர்ந்திருக்குமா?

அதன் பிறகு மனிதனின் பிறப்பிலும் இந்தப் பேரண்டம் முழுவதிலும் நீக்கமற நிறைந்திருக்கின்ற சான்றுகளில் சிலவற்றைப் பட்டியலிட்டு அண்ணல் நபிகளாரின் போதனைகளை மெய்ப்பிக்கின்ற சான்றுகள்தாம் அவை இறைவன் ஒருவனே என்பதையும் மறுமை நிகழ்ந்தே தீரும் என்பதையும் மெய்ப்பிக்கின்ற சான்றுகள் அவை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அதன் பிறகு வரலாற்றிலிருந்து சில சான்றுகள் எடுத்துரைக்கப்படுகின்றன. அந்தச் சான்றுகளின் ஒளியில் முக்கியமான உண்மை ஒன்று சுட்டிக்காட்டப்படுகின்றது. அதாவது இன்று மக்காவில் இறைவனின் தூதருக்கும் மக்கத்து இணைவைப்பாளர்களுக்கும் இடையில் வெடித்துள்ள மோதல் புதிய விஷயம் அல்ல. இதற்கு முந்தையக் காலங்களிலும் இறைத்தூதர்களுக்கும் அவர்களின் சமூகத்தாருக்கும் இடையில் மோதல்கள் வெடித்துள்ளன. காலங்காலமாக இந்த மோதல்கள் நிகழ்ந்து வந்துள்ளன.

ஆனால் எல்லாக் காலங்களிலும் இந்த மோதல்கள் இறைத்தூதர்களின் வெற்றியிலும் தூதர்களுக்கு எதிராக மல்லுக்கு நின்றவர்களின் அழிவிலும்தாம் முடிந்துள்ளன. சத்தியத்தின் பக்கம் நின்றவர்கள் யார் என்பதையும் அசத்தியக் கொடியைத் தூக்கிப் பிடித்தவர்கள் யார் என்பதையும் இந்த வரலாற்று உண்மைகள் தெளிவுபடுத்திவிடுகின்றன.

12. விளக்கங்களுக்குப் பார்க்க: அத்தியாயம் : அல்ஹஜ்: குறிப்பெண் 5, 6, 9.

13. தாயின் வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கின்ற சிசுவைப் பார்த்துப் பிற்காலத்தில் அறிவிலும், ஞானத்திலும், ஆற்றலிலும் தொழிலிலும் இன்னின்ன சாதனைகளைப் புரியக்கூடியவன் அல்லவா இவன்! இன்னின்ன வியத்தகு ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிப்படுத்தக்கூடியவன் அல்லவா இவன் என எந்தவொரு மனிதனாலும் கணிக்கவே இயலாது.

தாயின் வயிற்றிலோ அவன் எலும்புகளையும் சதையையும் கொண்ட ஒரு பிண்டமாகத்தான் இருப்பான். கர்ப்பப்பையிலிருந்து வெளி வருகின்ற வரை அவனுக்கு உயிர் வாழ்வின் தொடக்கச் சிறப்புக்கூறுகளைத் தவிர வேறு எதுவுமே இருப்பதில்லை. செவிப்புலனும் இருக்காது; பார்வைத் திறனும் இருக்காது; பேச்சும் வராது; சிந்திக்கவும் தெரியாது; அறிவும் இருக்காது; எந்தவொரு சிறப்பும் அவனுக்கு இருக்காது.

ஆனால் வயிற்றிலிருந்து வெளிவந்த பிறகு அவன் முற்றிலும் வேறுவிதமாகவே மாறி விடுகின்றான்; அந்த ஆளுமைக்கும் வயிற்றில் வளர்ந்து வந்த கருவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாததைப் போன்றே தோன்றும். இப்போது அவனால் கேட்கவும் பார்க்கவும் முடியும்; பேசவும் முடியும். இப்போது அவன் எதனையும் பார்த்தும் ஆய்ந்தும் கூர்ந்து நோக்கியும் அறிவைப் பெருக்கிக் கொள்கின்றான்.

அதன் பிறகு அவன் வளர வளர அவனுக்குள் இந்த ‘தான்’ என்கிற மாறுபட்ட உணர்வு இன்னும் எடுப்பாகிக்கொண்டே போகின்றது. இளைஞனாகும்போது குழந்தைப் பருவத்தில் இருந்ததை விட முற்றிலும் மாறுபட்டவனாக மிளிர்கின்றான். நடுத்தர வயதை எட்டிவிடுகின்ற போது இளமைப் பருவத்தில் இருந்ததைக் காட்டிலும் மாறுபட்டவனாக நடக்கத் தொடங்கிவிடுகின்றான்.

முதுமை அடைந்துவிட்டாலோ இளமையிலும் குழந்தைப்பருவத்திலும் அவன் எப்படி இருந்திருப்பான் என்பதைப் புதிய தலைமுறையினரால் கணிக்க இயலாத அளவுக்கு மாறுபட்டு விடுகின்றது. பருவத்துக்குப் பருவம் இத்துணை பெரிய மாற்றங்கள் அவனுக்கு நிகழ்ந்தவாறு இருக்கின்றன. இந்த அளவுக்கு மிகப் பெரும் மாற்றங்களை இந்த உலகில் உள்ள பிற விலங்குகள் எதிலும் பார்க்க முடியாது.

20 வயதுள்ள இளைஞனின் ஆற்றல்களையும் திறமைகளையும் அவன் செய்து முடிக்கின்ற வேலைகளையும் பாருங்கள். இருபதாண்டுகளுக்கு முன்பு ஒருநாள் தாயின் கர்ப்பப்பையில் விழுந்த ஒற்றைத் துளிக்குள் இந்த ஆற்றல்களும் திறமைகளும் பொதிந்திருந்தனவா என சற்றே யோசித்துப் பாருங்கள். உங்களையும் அறியாமல் உங்களுடைய உதடுகளிலிருந்து சில சொற்கள் தெறிக்கும். இதற்கடுத்த வசனத்தில் அந்தச் சொற்கள்தாம் இடம் பெற்றுள்ளன.

(தொடரும்)

அத்தியாயம் : 23 அல்முஃமினூன்

(மக்காவில் அருளப்பட்டது)
திருவசனங்கள் : 10 – 14…

 தஃப்ஹீமுல் குர்ஆன்

மௌலானா மௌதூதி
தமிழில் : அபூ அதூஃபா