நபிமொழி விளக்கம் – விற்பவருக்கும் வாங்குபவருக்குமுள்ள உரிமைகள்

அம்ரு பின் ஷûஐப்(ரலி) அறிவிக்கின்றார்:

அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்: ‘கடனையும் வியாபார பேரத்தையும் இணைத்து விடுவதற்கு அனுமதி இல்லை. பேரத்தில் இரண்டு நிபந்தனைகளை விதிப்பதும் உகந்ததல்ல. தன் கைவசம் இன்னும் வந்து சேராத பொருளிலிருந்து இலாபம் ஈட்டுவதும் சரியல்ல. உம்மிடம் இல்லாத பொருளை விற்பதற்கும் அனுமதி இல்லை’.

(நூல்: திர்மிதி, அபூதாவூத், நஸாயீ)

கடனும் வியாபார பேரமும் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டவை ஆகும். அவற்றை ஒன்றோடொன்று இணைப்பது சரியாகாது.

எடுத்துக்காட்டாக ஒருவர் ஒரு பொருளை இன்னொருவரிடம் விற்கும்போது, “நீங்கள் கேட்கின்ற விலையில் என்னுடைய பொருளை உங்களுக்குத் தரத் தயார். ஆனால் நீங்கள் எனக்கு இத்துணை ரூபாய் கடனாகத் தந்தாக வேண்டும்” என நிபந்தனை விதிப்பதற்கு அனுமதி இல்லை.

இதே போன்று ஒருவர் இன்னொருவருக்குப் பணம் கடனாகத் தருவதற்கு ஒப்புக்கொள்கின்றார். அதே சமயம் தன்னுடைய பொருள் ஒன்றை அதன் அசல் விலையை விட மிக அதிக விலையில் வாங்கியாக வேண்டும் என நிபந்தனை விதிக்கின்றார் எனில் அதற்கும் அனுமதி இல்லை. ஏனெனில் பொருளை வாங்குகின்றவர் அவரிடம் கடன் வாங்க வேண்டியுள்ளதே என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் அசல் விலையை விட அதிக விலையில் அந்தப் பொருளை வாங்கியாக வேண்டும் என்கிற தேவை இல்லாத நிலையிலும் – ஒப்புக் கொள்கின்றார். இது அநீதியாகும்.

வட்டி என்கிற பெயரில் அடுத்தவரின் பணத்தை விழுங்குபவர்களால் உருவாக்கப்பட்ட சாக்குப்போக்கின் மற்றொரு வடிவம்தான் இது. இதிலிருந்து முற்றாக விலகிக்கொள்ள வேண்டும்.

இதே போன்று பொருளை வாங்குபவர் அதிலிருந்து பயன் ஈட்டிக்கொள்வதைத் தடுக்கின்ற விதத்தில் விற்பவர் நிபந்தனை விதிப்பதும் தடுக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, என்னிடம் விலைக்கு வாங்கிவிட்ட பிறகு இதனை வேறு எவருக்கும் விற்கக்கூடாது; அல்லது இதனை இன்ன மனிதருக்கு அன்பளிப்பாகத் தரக் கூடாது என்றெல்லாம் பொருளை விற்பவர் நிபந்தனை விதிப்பதற்கும் அனுமதி இல்லை. அல்லது, ‘நான் உமக்கு இந்தப் பொருளை விற்கத் தயார். ஆனால் ஒரு நிபந்தனை. நீர் உம்மிடம் இருக்கின்ற இன்ன பொருளை என்னிடம் விற்றாக வேண்டும். அல்லது இத்துணை தொகையை எனக்குக் கடனாகத் தந்தாக வேண்டும்’ என நிபந்தனை விதிப்பதும் சரியல்ல.

எடுத்துக்காட்டாக, ஒருவர் இன்னொருவரிடம் ஒரு பொருளை விற்றுவிடுகின்றார். பொருளை வாங்கியவர் அந்தப் பொருளை உடனே கொண்டு செல்லாமல் அதனை விற்றவரிடம் விட்டுவிட்டுச் செல்கின்றார். இந்த இடைக்காலத்தில் பொருளை விற்றவர் அந்தப் பொருளிலிருந்து பயன் ஈட்டிக் கொள்கின்றார் எனில், பொருளை வாங்கியவர் அந்தப் பயனுக்குரியதைப் பொருளை விற்றவரிடம் கேட்டுப் பெறுதல் கூடாது. ஏனெனில் ஏதாவது இழப்பு ஏற்பட்டிருக்குமேயானால் அதனை பொருளை விற்றவர்தான் ஏற்றிருப்பார். எனவே பொருளை விற்றுவிட்டவரின் கையில் பொருள் இருக்கின்ற வரை அந்தப் பொருளிலிருந்து கிடைக்கின்ற பயன் அனைத்தும் அதனை விற்றவரையே சாரும். பொருளை வாங்கியவருக்கு அதில் எத்தகைய பங்கும் இருக்காது.

* மௌலானா முஹம்மத் பாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா * நூல் : கலாமே நுபுவ்வத்