IFT – யின் புதிய வெளியீடுகள்

ஃபிக்ஹுஸ் ஸுன்னா

ஃபிக்ஹுஸ் ஸுன்னாஹ் பாகம் – 1 (இஸ்லாமிய சட்டக் கருவூலம்)

ஆசிரியர்: அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக்

தமிழில்: மௌலவி நூஹ் மஹ்ழரி

ISBN 978 81 232 0254 9

 Price: INR 80.00

 ஒரு மத்ஹபுக்கு மட்டும் ஆதரவாகவோஎதிராகவோ அல்லாமல் நபிவழியில் இஸ்லாமியச் சட்ட விளக்கங்களை விவரிக்கும் முறையில் ஃபிக்ஹுஸ் ஸுன்னா சாதனை படைத்துள்ளது.டாக்டர் யூஸுப் அல்கர்ளாவி

‘இஸ்லாமியச் சட்டத் துறை என்றாலே அது மெத்தப்படித்த அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உரியது;எளியோருக்கும் இஸ்லாமியச் சட்டங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ எனும் ‘இரும்புச் சுவர்’ சூழல்தான் முஸ்லிம் சமூகத்தில் நிலவி வருகிறது. இதனால் ஏற்படும் விபரீதமான விளைவுகள் பற்றிச் சொல்லத் தொடங்கினால் ஏடு கொள்ளாது; எழுத்தாணி போதாது.

பரபரப்பான ஒரு நகரிலுள்ள பெரிய பள்ளிவாசலில் தலைமை இமாமாகப் பல ஆண்டுகளாய்ப் பணியாற்றிவரும் மார்க்க அறிஞர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ‘இன்றைய இளைஞர்கள் – திருமணமான இளைஞர்கள் உட்பட- குளிப்பு எப்போது கடமையாகிறது போன்ற அடிப்படை மார்க்கச் சட்டங்-களைக்கூட அறியாமல் இருக்கிறார்கள்; ஒப்பீட்டு அளவில் பதின்பருவப் பெண்பிள்ளைகள் பரவாயில்லை;பாட்டி, அம்மா, மூத்த சகோதரி என யாரேனும் ஒருவர் வளரிளம் பெண்களுக்கு சில அடிப்படை சுகாதாரங்கள் குறித்தச் சட்டங்களைச் சொல்லித் தந்துவிடுகிறார்கள். பையன்கள் நிலைமைதான் பரிதாபம்’ என்று வருத்தப்பட்டார்.

இந்த வருத்தத்துக்குக் காரணம் அடிப்படை மார்க்கச் சட்டங்களை நாம் பரவலாக்காததுதான். பெற்றோர்களுக்கே பல விஷயங்கள் தெரியாது எனும்போது, பிள்ளைகள் பற்றி என்ன சொல்ல? எந்த ஒரு சிறிய பிரச்னைக்கும் ‘போய் ஹஜ்ரத்துகிட்ட கேளு’ என்பதுதான் பதில். அந்தரங்க சுகாதாரச் சட்டங்கள் பற்றியெல்லாம் ஹஜ்ரத்திடம் எப்படிக் கேட்பது என்று கூச்சப்பட்டுக் கொண்டு அது பற்றிய அறியாமையிலேயே காலம் கடத்துபவர்கள்தான் அதிகம்.

இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணவேண்டுமானால் எளிய பாமர மக்களிடம் இஸ்லாமியச் சட்டங்கள் சென்று சேர வேண்டும். அவர்களுக்குப் புரிகின்ற வகையில் சொல்லப்படவேண்டும். முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் சிந்தனைப்பிரிவுகள் குறித்தோ, ஒவ்வொரு சிந்தனைப் பிரிவின் சட்டவாக்கங்கள் பற்றிய வாதப் பிரதிவாதங்களோ இல்லாமல், அந்த எளிய வாசகனைக் கைப்-பிடித்து நேரடியாகக் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் அழைத்துச் சென்று ‘இதுதான் சட்டம், இதுதான் வழிமுறை’ என்று காண்பிக்கின்ற வகையில் இஸ்லாமியச் சட்ட நூல்கள் வரவேண்டும்.

நமது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் வலைவீசித் தேடிப்பார்த்தும் அப்படி ஒரு நூல் இதுவரை தமிழில் இல்லை என்பது பெருங்குறையாகவே இருந்துவந்தது. அந்தக் குறையைப் போக்கும் வகையில் இதோ,இப்போது வெளிவந்துள்ளது ‘ஃபிக்ஹுஸ் ஸுன்னா’ எனும் அருமையான நூல். உலகப் புகழ்-பெற்ற இந்தச் சட்ட நூலின் முதல் தொகுதிதான் உங்கள் கைகளில் தவழ்கிறது. இதனுடைய இதர தொகுதிகள் அடுத்தடுத்து வெளிவரும் இன்ஷா அல்லாஹ்.

“எந்த மத்ஹபு குறித்தும் ஆதரவோ எதிர்ப்போ இல்லாமல், நபிவழியை அடிப்படையாகக் கொண்டு சட்ட விளக்கங்களைத் தருதல் எனும் மகத்தான சாதனையை ஃபிக்ஹுஸ் ஸுன்னா நூல் சாதித்துக் காட்டியிருக்கிறது” எனும் டாக்டர் யூசுபுல் கர்ளாவி அவர்களின் ஒரு வரி போதும், இந்த நூலின் சிறப்பைச் சொல்ல!

இந்த பூமிப் பந்தில் தமிழ்பேசும் முஸ்லிம்கள் – குறிப்பாக இளைய தலைமுறையினர் – எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த நூல் சென்று சேர வேண்டும்; அவர்களின் அன்றாட வாழ்வுக்கு இது ஒரு குறிப்பு நூலாகப் பயன்படவேண்டும்; இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப வாழ்ந்து, உடல் நலனையும் ஆன்ம நலனையும் பெற்றுப் பெருவாழ்வு வாழவேண்டும் என்பது எங்கள் வேணவா.

நூலாசிரியர்:

20ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகின் ஆன்மிகத் துறை, சட்டத் துறை ஆகியவற்றை மறுகட்டமைப்பு செய்த நாயகர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்தாம் அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக். இஸ்லாமியச் சட்டத்துறை வல்லுநர், தனித்துவம் மிக்க ஆசிரியர், மிகச் சிறந்த அழைப்பாளர், தலை சிறந்த எழுத்தாளர் என்று முத்திரை பதித்தவர்.இஸ்லாமியச் சட்டத்துறையின் தன்னிகரற்ற நூலான ‘ஃபிக்ஹுஸ் ஸுன்னாவை’எழுதியவர் என்ற முறையில் பெரும் புகழ் பெற்றவர். ஹிஜ்ரி 1413-இல் (கி.பி.1994) முஸ்லிம் உலகின் மாபெரும் விருதான ‘ஃபைஸல் விருது’ பெறுவதற்குத் தகுதி பெற்றவராக இவரை மாற்றியதும் இந்நூல் தான்.குர்ஆனிலும், ஸுன்னாவிலும் ஆழ்ந்த ஞானமும், அத்துடன் சாதாரண மனிதர்களின் தேவைகளை மிக உன்னிப்பாகக் கவனித்தும் எழுதப்பட்ட ஒரு நூல்தான்   ஃபிக்ஹுஸ் ஸுன்னா.அறிஞர்களால் மட்டுமே புரிந்துகொள்ளும் வண்ணம் இருந்த இஸ்லாமியச் சட்டக்கலையை எளிய மக்களும் புரிந்து-கொள்ளும் வண்ணம் மாற்றிய பெருமை இவரையே சாரும். குர்ஆன், ஸுன்னா, இஜ்மா ஆகியவற்றை ஆதாரங்களாய்க் கொண்டு சட்ட விளக்கங்களை விவரிக்க வேண்டும் என்பது மட்டுமே ஆசிரியரின் இலட்சியம்.அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் அவர்களின் ஏறக்குறைய 20 ஆண்டு உழைப்பே இந்நூல். உலகின் பல மொழிகளிலும் இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.இஸ்லாமியச் சட்டவிளக்கங்களைத் தெரிந்து அதன் வழி நடக்க வேண்டும் என்று உறுதிகொள்ளும் ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்திற்கும் இந்நூல் ஓர் அருட் கருவூலம்.

சாதி ஒழிய சமத்துவம் மலர…

சாதி ஒழிய.. சமத்துவம் மலர...!

ஆசிரியர்: டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்

ISBN 978 81 232 0253 2

Price: INR 40.00

(மானுடவசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கு டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் அளித்த பதில்களின் தொகுப்பே இந்த நூல் )

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’

‘இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்’

‘சாதிகள் இல்லையடி பாப்பா’

‘ஒன்று எங்கள் சாதியே ஒன்று எங்கள் நீதியே’

‘ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்’

-சங்க காலம் தொடங்கி இந்தக் காலம் வரை சாதியை எதிர்த்தும், மனிதகுல ஒருமைப்பாட்டை வலியுறுத்தியும் பாடாத புலவர்கள் இல்லை; பேசாத தலைவர்கள் இல்லை; சொல்லாத அறிஞர்கள் இல்லை. எத்தனை எத்தனையோ மகான்களும் சீர்திருத்தவாதிகளும் இந்த மண்ணில் தோன்றி சாதியை ஒழிக்கப் போராடிப் பார்த்தார்கள்.

சாதி ஒழிந்ததா? இல்லவே இல்லை.

ஒழியாததற்கு என்ன காரணம்? எத்தனையோ காரணங்கள். இறைக்கோட்பாடு தொடங்கி மனிதனின் ஆதிக்க மனப்பான்மை வரை இதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இன்னொரு பெரிய வரலாற்றுச் சோகத்தையும் நாம் சொல்லித்தான் ஆகவேண்டும். ‘கடவுள் இல்லை’ என்று குரல் கொடுத்த தந்தை பெரியார் போன்றவர்கள் இன்று கடவுளாக ஆக்கப்பட்டதைப்போன்று சாதிக்கு எதிராகக் குரல் கொடுத்த தலைவர்களையும் இன்று ‘சாதிக் கூண்டில்’ அடைத்துவிட்டார்கள்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒரு வினா எழுகிறது: சாதி ஒழியவே ஒழியாதா? சமத்துவ சமுதாயம் மலரவே மலராதா? அதற்கு வழியே இல்லையா?

இருக்கிறது. ஆம்..! அதுதான் இறைவனின் வழிகாட்டல். சாதியை ஓட்டவும் மனித குல விடுதலையை நாட்டவும் இஸ்லாமியத் திருநெறி சில அழகிய அடிப்படைகளை வகுத்துத் தந்துள்ளது. அந்த அடிப்படைகளை மனித குலம் ஏற்றுக்-கொண்டால் ஒரே ஒரு முழக்கத்தில்- ஒரே ஒரு வினாடியில் சாதி அடியோடு ஒழிந்துவிடும். அந்த உன்னத வழிமுறையைத்தான் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் இந்த நூலில் விளக்கியுள்ளார்கள்.

பிறப்பால், நிறத்தால், இனத்தால், மொழியால் இன்னும் பல்வேறு காரணங்களால் நசுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த நூல் சென்று சேர வேண்டும். ‘விடுதலை விடுதலை விடுதலை’ என்று பாடிய பாரதியால்கூட உண்மையான விடுதலையை அளித்திட இயலவில்லை. ஆனால் இந்த நூல் உண்மையான விடுதலையை முழங்குகின்ற- அதற்கான சரியான வழிமுறைகளை வழங்கு-கின்ற நூல். தலித் விடுதலை அல்லது மனித குல விடுதலைக்கான முழக்கம் இந்த நூலின் மூலமாக அனைவரின் இதயங்களிலும் எதிரொலிக்க வேண்டும்; அதன் மூலம் சமத்துவ சமுதாயம் இங்கு சாத்தியமாக வேண்டும் என்பது எங்கள் பேரவா.

 

நபிகளார் வரைந்த கோடுகளில் மனித வாழ்வு

மனித வாழ்வு

ஆசிரியர்: உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

ISBN 978 81 232 0255 6

Price: INR 100.00

 நபிகளார் வரைந்த வாழ்வியல் கோடுகளை இவ்வளவு அழகாக நமக்கு வரைந்துகாட்டியுள்ள இந்த நூலின் ஆசிரியர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசியத் தலைவர் ஆவார்.

 சிறந்த மார்க்க அறிஞரும் எழுத்தாளரும் பேச்சாளருமான உஸ்தாத் அவர்கள், அரபிக் கல்லூரியின் முதல்வராக இருந்தபோது அவர் போதித்த அனைத்துப் பாடங்களும் குறிப்பாக, நபிமொழிப் பாட வேளைகள் சிந்தனை விருந்தாய் அமையும் என மாணவர்கள் மனம் திறந்து பாராட்டுகின்றனர். ஆம்.. உண்மைதான். நபிமொழி தரும் கருத்தை, அதன் மொழியாக்கத்தைக் கடந்து ஊடறுத்துத் தேடும் பாங்கும், அதற்கு ஆதாரங்களாக முன்வைக்கும் குர்ஆனிய, வரலாற்றுச் சான்றுகளும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.

 இவ்வகையில், ஜமாஅத்தே இஸ்லாமி கொழும்பு நகரக் கிளையில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை உஸ்தாத் அவர்கள் ஹதீஸ் விளக்கவுரை ஆற்றிவந்தார். அந்தத் தொடர் சொற்பொழிவுகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சில ஹதீஸ்களுக்கான விளக்கங்களே இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.

 பொதுவாகக் குர்ஆனையும் குறிப்பாக நபிமொழி-களையும் அறிஞர் பெருமக்கள் கையாளும்போது இஸ்லாமியச் சட்டங்களை விளக்கும் வகையில் அமைந்த வசனங்களுக்கே மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நிலையை நாம் காண்கிறோம். இஸ்லாமியச் சட்டத் துறையைப் பொறுத்தவரை இந்த அணுகுமுறை பெரிதும் விரும்பப்படுகிறது; வரவேற்கப்படுகிறது.

 அதே சமயம், மனித வாழ்வியலின் ஏனைய பல்வேறு துறைகளுக்கான வழிகாட்டல்களைக் குர்ஆனும் நபிமொழி-யும் தன்னகத்தே கொண்டுள்ளன. அவற்றையும் தொட்டுப்-பார்க்கும் ஒரு முயற்சியாக ஹதீஸ் விளக்கத் தொடரை அமைத்துக்கொண்டால் என்ன எனும் எண்ணம் நூலாசிரி-யரின் உள்ளத்தில் உதித்ததால், அந்த எண்ணத்தைச் செயல்-படுத்தும் முயற்சியில் அவர் தேர்வு செய்த சில நபிமொழி-களின் அழகிய விளக்கமே இந்த நூல்.

 அல்லாஹ்வின் வேதத்தையும் அண்ணலார்(ஸல்) அவர்-களின் பொன்மொழிகளையும் மனிதர்களின் சொற்களால் விளக்கிவிடலாம் என்பது அவ்வளவு எளிதான செயலன்று. ஆயினும் அவற்றில் பொதிந்து கிடக்கும் அரும்பெரும் பொக்கிஷங்களில் ஒரு சிறுபகுதியையாவது சிந்தனைக்கு எட்டச் செய்யலாம் என்பதே இந்த நூலாக்க முயற்சிக்கான அடிப்படையாகும்.