SIO தமிழக மண்டலத்தின் சார்பில் அஃப்சல் ஹுசைன் விருது மற்றும் தேசிய அளவிலான தகுதி போட்டிகள்

அஃப்சல் ஹுசைன் கல்வி விருது 2012

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) தமிழக மண்டலத்தின் சார்பில் அஃப்சல் ஹுசைன் கல்வி விருது 2012 மற்றும் மாபெரும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான தகுதி சுற்றுகள் 26.09.2012 அன்று எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

காலை 9 மணிக்கு வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியாவின் மாநிலத்தலைவர் எஸ்.என்.சிக்கந்தர் தகுதி சுற்றுகளை துவக்கி வைத்தார்.  அக்டோபர் மாதம் தேசிய அளவிலான கலாச்சார போட்டிகள் கொல்கத்தாவில் நடைபெற இருக்கின்றது. அதற்கான தகுதி சுற்றுகள் 26.09.2012 அன்று நடத்தப்பட்டது.  கோவை, திருச்சி, சென்னை போன்ற பல்வேறு நகரங்களிலிருந்து மாணவ-மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.  பேச்சு போட்டி, நாடகம், தனி நாடகம், கவிதை போட்டி என பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அஃப்சல் ஹுசைன் கல்வி விருது 2012 & தகுதி சுற்றுகளுக்கான பரிசளிப்பு விழா

10ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெறக்கூடிய மாணவர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) தமிழக மண்டலத்தின் சார்பில் அஃப்சல் ஹுசைன் கல்வி விருது வழங்கப்பட்டு வருகிறது.  இவ்வருடத்திற்கான அஃப்சல் ஹுசைன் கல்வி விருது 2012 26.09.2012 அன்று மாலை 6.30 மணிக்கு எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.  இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பத்மபூஷன் மூஸா ரசா அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

மூஸா ரசா அவர்கள் மாணவர்களுக்கு சிறப்பான அறிவுரைகளை வழங்கினார்.  அன்றைய காலத்தில் நாங்கள் படிக்கின்ற போது இருந்த வசதிகளை விட பல மடங்கு அதிகமான வசதிகளை நீங்கள் பெற்று இருகின்றீர்கள்.  ஆகவே தற்போது இருக்கின்ற குறைகளை சொல்வதை விட்டுவிட்டு இருக்கின்ற வசதிகளை வைத்து சிறப்பான படிக்க வேண்டும். எப்போதும், எதிலும் சிறப்பான தேர்ச்சியை பெற முயற்சி செய்ய வேண்டும்.  200% மற்றவர்களை விட சிறப்பாக பணியாற்ற வேண்டும். அதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன். குறிப்பாக முஸ்லீம்கள் தங்களுக்கே உரிய கோபங்களை குறைத்து கொண்டு உங்களது திறமைகளை கல்வியில் செலுத்த வேண்டும். தேவையில்லாத வழிகளில் நமது செய்தியை சொல்வதை தவிர்த்து ஆக்கபூர்வமான வழியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை குறிப்பிட்டார்.

பத்மபூஷன் மூஸா ரசா அவர்கள் உரையாற்றுகின்றார்

முன்னதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநில பொதுச்செயலாளர் மெளலவி. ஹனிஃபா மன்பஈ வாழ்த்துரை வழங்கினார்.  இறைவன் திருமறையில் கற்பதை குறித்து அழகாக சுட்டி காட்டியுள்ளான். தொடர்ந்து கற்க வேண்டும், இன்னும் குறிப்பாக பயனுள்ள கல்வியை கற்க வேண்டும் என்பதை இறைவன் போதித்துள்ளான் என்பதை தனது உரையில் குறிப்பிட்டார்.

மெளலவி ஹனிஃபா மன்பஈ உரையாற்றுகிறார்

அதன் பிறகு சென்னை பல்கலைக்கழகத்தின் துறை தலைவர் முனைவர். ராமு மணிவண்ணன் அவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.  மாணவர்கள் சிறப்பாக தங்களது வாழ்வை அமைத்து கொள்வதற்கான அறிவுரைகளை வழங்கினார்.

டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் உரையாற்றுகிறார்

டாக்டர் கே.வி.எஸ் ஹபீப் முஹம்மத் அவர்கள் இறுதியாக சிறப்புரை வழங்கினார். தனது உரையில் மாணவர்கள் சிறப்பாக படிக்க வேண்டும். ஆளுமை மிக்கவர்களாக பயில வேண்டும். அதன் பிறகு ஒழுக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஊழல், காதல் என்று தவறான வழிகளில் செல்லாமல் ஒழுக்க சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் செலுத்த வேண்டும் என்பதை குறிப்பிட்டார். சமுதாயத்தில் ஏதேனும் தீமைகளை கண்டால் அதற்காக குரல் கொடுக்க வேண்டும். சமுதாய சேவைகளில் ஈடுபட வேண்டும் என்பதை மாணவர்களுக்கு அறிவுரையாக வழங்கினார்.

ஜனாப் மூஸா ரசா அவர்கள் விருதுகளை வழங்குகிறார்

பிறகு அஃப்சல் ஹுசைன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன்.

விழாவில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்

முன்னதாக மாநிலத்தலைவர் நூருல் ஹசன் அவர்கள் தலைமையுரையாற்றினார். நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.  நிகழ்ச்சியை மாநில செயலாளர் அபுதாஹிர் தொகுத்து வழங்கினார்.