பங்களாதேஷ் ஜமாஅத் இஸ்லாமி தலைவர் மெள அப்துல் காதர் முல்லாஹ் படுகொலைக்கு ஜ.இ.ஹி தலைவர் கண்டனம்

Abdul-Quader-Molla2
பங்களா தேஷ் ஜமாஅத் இஸ்லாமி தலைவர் மெளலானா அப்துல் காதர் முல்லாஹ் வியாழன் அன்று இரவு, ‘1971ல் அந்நாட்டு பிரிவினையின் போது நடந்த அசம்பாவிதங்களுக்கு காரணம்!’ – என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆளும் அரசால் படுகொலை செய்யப்பட்டார். அதைக் கண்டித்து  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்திய தலைவர் மெளலானா சையத் ஜலாலுத்தீன் உமரி தமது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
“ஒரு நாட்டின் பிரிவினைக்கு எதிராகவும், ஒருமைப்பாட்டைக் கட்டிக் காக்கும் முயற்சிக்கு ஆதரவாகவும்  செயல்படுவது ஒருபோதும் தேச துரோக குற்றமாகாது. அவ்வகையில், மெளாலானா அப்துல் காதர் முல்லாஹ் மற்றும் இதர எதிர்கட்சி தலைவர்களின் நாட்டு நலன் காக்கும் முயற்சிகளுக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ அளிக்கும் வகையில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காட்டுமிராண்டித்தனமன்றி அவற்றை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது.
தற்போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைவர்களின் மீது முஜிபுர் ரஹ்மான் காலத்திலேயோ அல்லது பங்களா தேஷ் விடுதலைக்குப் பிறகோ எவ்வித குற்றச்சாட்டுகளும் எழவில்லை.
ஜமாஅத்தே இஸ்லாமி பங்களா தேஷ், ஒரு சிறப்புப் பெற்ற இயக்கமாகும்; நாட்டின் ஆளுங்கட்சி மற்றும் எதிர் கட்சி ஆகியோருக்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளித்துவரும் இயக்கமாகும்.
ஜனநாயக  மாண்புகள் மலர்ந்து மணம் பரப்பிவரும் ஒரு காலகட்டத்தில், ஒரு ஆளும் கட்சி, வெறும் அரசியல் பழிவாங்கல்களுக்காக, மிகவும் கீழ்த்தரமான போக்குகளை கடைப்பிடித்து, நீதிக்காக கடைபிடிக்க வேண்டிய அனைத்து வரையரைகளையும் புறக்கணித்துவிட்டு தனது அரசியல் எதிரிகளை தீர்த்துக் கட்ட நினைப்பது நினைத்துப் பார்க்கவே முடியாதது. பங்களா தேஷ் அரசாங்கம் எதிர்காலத்தில் இத்தகைய போக்குகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும்!”- என்று வலியுறுத்திய மெளலானா சையத் ஜலாலுத்தீன் உமரீ, “இந்திய அரசாங்கமும், உலக நாடுகளும், சர்வதேச சமூகமும் காட்டுமிராண்டிதனமான இத்தகைய அடக்குமுறை செயல்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்!”- என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.
மௌலானா அப்துல் காதர் முல்லாஹ்வின் மரணம் ஷஹீத் அந்தஸ்துக்கு உரியது என்று விளக்கிய மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரீ, அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்க்கும், இயக்க உறுப்பினர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், “இறைவன் மௌலானா அப்துல்காதர் முல்லாஹ்வின் பிழைப் பொறுக்கவும், சுவனங்களில் உயர் இடங்களை அளிக்கவும், அவரது குடும்பத்தார்க்கு அழகிய பொறுமையை அளிக்கவும், நேர்வழியில் நடப்பவர்களின் பாதங்களை உறுதிப்படுத்தவும்” பிரார்த்தித்தார்.