முஸப்பர் நகர்: 200 வீடுகளைக் கட்டித் தர ஜமாஅத் முடிவு

nusrath ali

முஸப்பர் நகர் நிவாரண முகாம்களைப் பார்வையிட்டார் பொதுச் செயலாளர்! 200 வீடுகளைக் கட்டித் தர முடிவு! ஜமாஅத்தின் சர்வே முடிவுகள் வெளியீடு!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலீ தலைமையிலான குழுவினர், உ.பி.மாநிலம் முஸஃப்பர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான லோய், புதானா, ஷஹ்பூர், பாஸி கலன் ஆகிய இடங்களில் ஜமாஅத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று, அங்கு இதுவரை நடந்துள்ள நிவாரணப் பணிகளையும் தற்போதுள்ள சூழ்நிலைகளையும் ஆய்வு செய்தனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 200 வீடுகளைக் கட்டித் தர முடிவு செய்தனர்.

வன்முறை பாதித்த பகுதிகளில் ஜமாஅத்தே இஸ்லாமி விரிவாக எடுத்துள்ள சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சர்வேயின்படி, முஸஃப்பர் நகர் கலவரத்தில் 113 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30 பேர் காணாமல் போயுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 97 பேர் முஸ்லிம்கள். 16 பேர் இந்துக்கள்.

ஜமாஅத்தின் செயலாளர் ஷஃபி மதனி, கேரள அமீர் ஆரிஃப் அலீ, கே.கே.மம்முன்னி மௌலவி, உ.பி (மேற்கு) ஜமாஅத் தலைவர் மௌலானா இனாமுல்லாஹ் இஸ்லாஹி, ஹியூமன் வெல்ஃபேர் ஃபவுண்டேஷனின் செயலாளர் ரஃபிக் அஹ்மத், நிவாரண முகாம்களின் பொறுப்பாளர் அலாவுத்தீன், மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆலே நபி, ஊடகத் துறைச் செயலாளர் அன்வாருல் ஹக் ஆகியோர் அடங்கிய இக்குழுவினர் நிவாரண முகாமில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுடன் விரிவான முறையில் கலந்துரையாடினர். அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்தனர். நிவாரண முகாம்களின் பொறுப்பாளர்களையும் சந்தித்துப் பேசினர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான எல்லா அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தனர். மக்களுடன் உரையாடிய நுஸ்ரத் அலீ, நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மாணவர்களின் கல்வி தடைபட்டுள்ளதால், அவர்கள் தொடர்ந்து கல்வி பயில நிவாரண முகாமிலேயே தற்காலிகப் பள்ளிக்கூடங்களை அமைத்துத் தருவதாக உறுதியளித்தார்.

மக்களைக் கடுங்குளிரிலிருந்தும் மழையிலிருந்தும் பாதுகாக்க ஜமாஅத்தே இஸ்லாமி ஆயிரம் நீரில் நனையா (வாட்டர் புரூஃப்) குடில்களை அமைத்துக் கொடுத்துள்ளது. இரண்டாயிரம் படுக்கைகளை வழங்கியுள்ளது. லோய் நிவாரண முகாமில் முஸ்லிம் எஜுகேஷன் சொசைட்டி மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்களையும், ஐடியல் ரிலீஃப் விங் கேரளாவின் தொண்டர்களையும் கொண்ட மருத்துவ முகாமை நிறுவியுள்ளது. மருந்துகளையும் சிகிச்சையையும் இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறது. நடமாடும் மருத்துவ வேன் எல்லா நிவாரண முகாம்களுக்கும் சென்று வருகிறது.

புதானாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய நுஸ்ரத் அலீ, பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்குப் பாதுகாப்புடன் திரும்பிச் செல்ல உ.பி.அரசு உரிய நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதுமான நிவாரணத்தையும் இழப்பீட்டையும் அரசு வழங்க வேண்டும்.

முஸ்லிம்களுக்கும் ஜாட் இன மக்களுக்கும் இடையே தோன்றியுள்ள மிகப்பெரும் இடைவெளியைக் குறைக்க வேண்டிய கடமை அரசுக்கும் அமைதியை விரும்பக்கூடிய மக்களுக்கும் உள்ளது எனக்கூறிய அவர், இரு சமூகங்களைச் சேர்ந்த மதத்தலைவர்கள் நல்ல சூழலைத் தோற்றுவிக்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.