சென்னை சென்ட்ரல் ரயில்நிலைய குண்டுவெடிப்புக்கு ஜ.இ.ஹி தலைவர் கடும் கண்டனம்

chennai_train_blast5

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்மாநிலத் தலைவர் A.ஷப்பீர் அஹ்மது அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரிலிருந்து கவுஹாத்தி நோக்கிச் சென்று கொண்டிருந்த கவுஹாத்தி விரைவு ரயில் இன்று காலை 7:30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது S4,S5 பெட்டிகளில் குண்டு வெடித்து இளம் பெண் ஒருவர் பலியானதும் மற்றும் பலர் காயமான சம்பவம் கடும் கண்டணத்திற்குரியதும்,  வேதனைக்குரியதும் ஆகும்.

மனிதநேயமற்ற இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்களை பாரபட்சமின்றி நடுநிலையான விசாரணையுடன் விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை வழங்கவேண்டும். இதுபோன்ற சம்பவம் இனி எங்குமே நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குண்டுவெடிப்பின் உண்மைப் பின்னணியை தீர விசாரித்து உண்மைக் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கான முயற்சிகள் முழுவீச்சில் நடைபெறவேண்டும்.

ஊடகங்களும் பொறுப்புணர்வோடு உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காட்ட வேண்டும் என்ற நோக்கோடு செய்திகளை வெளியிட வேண்டும்.  மக்கள் மத்தியிலுள்ள  பீதியை அகற்றும் வண்ணம் செய்திகளை வெளியிட வேண்டும்.

இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த சகோதரி சுவாதியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் இத்துயர சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்கள் விரைவில் பூரண குணமடையவும் பிரார்த்திக்கின்றோம்.

பொதுமக்கள் அனைவரும் தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டி, மக்களின் நலனை காக்க ஒருவருக்கொருவர் அன்பை போதித்து சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும்.