இல்லறம் நல்லறமாக – மதுரையில் மகளிர் மாநாடு

maduஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மதுரை மண்டலம் சார்பில் “இல்லறம் நல்லறமாக” என்ற மையக்கருத்தில் 2014, ஜூன் 25 அன்று மதுரை தமுக்கம் கலையரங்கத்தில் மாபெரும் மகளிர் மாநாடு நடைபெற்றது. மாநாடு தொடர்பான பத்திரிகை அறிக்கையை மாநாட்டு அமைப்பாளர் பஷிரா வெளியிட்டுள்ளார்.

இன்றைய நவீனகால சூழலில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இம்மாநாடு அமைந்தது. இன்றைய சூழலில் பொருளாதார ஓட்டத்தின் மத்தியில் குடும்ப உறவுகள் பற்றி சிந்திக்கவும், நல்ல ஆரோக்கியமான குடும்பங்கள் அமைவது சாத்தியமற்றதாக மாறிவருகின்றது. அழகான குடும்ப உறவுகள் அமையாததால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. மேலும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பற்ற நிலை, பாலியல் வன்கொடுமை, நியாயமற்ற விவாகரத்துகள், உரிமைகள் மறுக்கப்படுதல், விளம்பர உத்திக்காகப் பெண்களை ஆபாசமாகச் சித்தரித்தல் எனப் பல்வேறு சவால்களைப் பெண்கள் சந்தித்து வருகின்றனர். இந்தச் சூழலில் நாட்டு நடப்புகளைப் புரிந்து கொண்டு, பெண்களுக்கு எதிரான சவால்களைச் சமாளிப்பதற்குத் தேவையான ஆற்றல்களையும், மன உறுதியையும் ஏற்படுத்தக்கூடிய உந்துசக்தியாக இம்மாநாடு அமையும்.

madu1

அழகிய முறையில் குழந்தைகளை வளர்த்தல், குடும்ப அமைப்பை சிறப்பாக வடிவமைத்தல், சமூக அவலங்களிலிருந்து விலகியிருத்தல் போன்ற பல்வேறு பொறுப்புகளை உணர்ந்து சமூக அக்கறையுள்ளவர்களாக திகழ்வதற்கான வழிகாட்டுதல்களை இம்மாநாடு வழங்கும். சமூக ஒற்றுமையை உருவாக்கி, நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் தலைத்தோங்க முன்மாதிரியான பெண்களை இச்சமூகத்திற்கு அடையாளம் காட்டும் மாநாடாக இம்மாநாடு அமையும் என்று தமது அறிக்கையில் பஷிரா அவர்கள் கூறியுள்ளார்.

இம்மாநாட்டை மாநிலத் தலைவர் ஏ. ஷப்பீர் அஹ்மத் அவர்கள் துவக்கி வைத்தார். மாநாட்டு அமைப்பாளர் பஷிரா வரவேற்புரையாற்றினார்.. இல்லறம் நல்லறமாக என்ற தலைப்பில் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் துணைத் தலைவர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் உரையாற்றினார். மேலும் மகளிரனி மாநில அமைப்பாளர் ஃபாக்கிரா, துணை அமைப்பாளர் கதிஜா, ஃபாத்திமா, மெளலவி நூஹ் மஹ்ளரி ஆகியோர் உரையாற்றினர். மதிய அமர்வில் சிறப்பான கலந்துரையாடலும், மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. ஜ.இ.ஹி.மாநில பொதுச் செயலாளர் மெளலவி ஹனிஃபா அவர்களின் நிறைவுரையுடன் மாநாடு நிறைவுற்றது. இம்மாநாட்டிற்கு 5000க்கும் அதிகமான பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

madu11