பாலஸ்தீன் மீது இஸ்ரேல் நடத்திவரும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க ஐநா மற்றும் இந்தியாவிற்கு அமீரே ஜமாத் வேண்டுகோள்

gazza

 

பாலஸ்தீன் மீது இஸ்ரேல் நடத்திவரும் படுகொலைகள், அநீதிகளுக்கு எதிராக ஐநாசபை மற்றும் இந்தியா கண்டன குரல் எழுப்ப வேண்டும் என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்திய தலைவர் மொளானா ஜலாலுத்தீன் உமரி அவர்களின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஸா மீது இஸ்ரேல் தனது காட்டுமிரான்டித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்றது. கடந்த சில தினங்களில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஆண்கள், பெண்கள், ஒன்றும் அறியாத சிறு குழந்தைகளும் இருக்கின்றனர்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்திய தலைவர் மௌலானா ஜலாலுத்தீன் உமரி அவர்கள் இஸ்ரேலின் இந்த கொடூரச் செயலை வன்மையாக கண்டித்துள்ளார்கள். பாலஸ்தீனியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் இந்த அக்கிரமத்தை எதிர்த்து  இஸ்ரேல் அரசுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து உடனே இக்கொடூரச் செயலை நிறுத்த ஐக்கிய நாட்டு சபை முயல வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அமீரே ஜமாஅத் அவர்கள் தங்களுடைய ஆழ்ந்த வருத்தத்தையும் கவலையையும்  தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்கள்: பாலஸ்தீன் மட்டுமல்ல, உலகத்திலுள்ள எல்லா முஸ்லிம்களும் ரமளான் மாதத்தில் புனித வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் இறைவனுக்கு முன்னால் வணங்கி வழிபடுகின்றனர். இஸ்ரேல் இந்த வேளையில், நபிமார்களின் பூமியாகிய பாலஸ்தீன் நாட்டில் குண்டு மழை பொழிவதின் மூலம், பச்சிளம் குழந்தைகளை அழிப்பதின் மூலம், பாலஸ்தீனியர்ளின் உள்ளங்களை மட்டுமல்ல, உலக முஸ்லிம்களின் உள்ளங்களைக்கூட காயப்படுத்தி விட்டது.

மேலும் மௌலானா அவர்கள் கூறினார்கள்: இது இஸ்ரேலின் ஒழுக்கமற்ற செயல்,  சட்டங்களை மீறுகின்ற செயலாகும். நீதி நேர்மை அமைதியை குலைக்கும் நடவடிக்கையாகும். பாலஸ்தீனியர்கள், தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் என்று நினைக்காமல் இருக்கும் அளவுக்கு, அவர்களின் அக்கம் பக்கத்தில் இந்த நேரத்தில், அவர்களுக்கு தார்மீக அடிப்படையில் உதவி செய்யக் கூடிய எந்த வலிமையான வாய்மையான முஸ்லிம் நாடும் இல்லை என்பது முற்றிலும் உண்மையாகும்.

உலகத்தில் நீதி நேர்மை, சத்தியத்தை விரும்பக்கூடிய எல்லா பொதுமக்களின் அனுதாபங்கள், உறுதியான உணர்வுகள் என்ற சக்தி மட்டுமே பாலஸ்தீன் நாட்டு மக்களுடன்  இருக்கின்றது என்பது உண்மையே! இரத்தங்களை ஆறாய் ஓட்டுகின்ற, கொடுங்கோள் அரசாகிய  இஸ்ரேலின் எல்லா அச்சுறுத்தும், பீதியை ஏற்படும் நடவடிக்கைகளை எதிர்த்து, பாலஸ்தீனர்கள் தங்கள் உரிமையை மீட்டெடுப்பதற்காக 65 வருடமாக கடுமையாக போராடி வருகின்றனர். இன்ஷா அல்லாஹ் அவர்கள் இந்த போராட்டத்தில் நிச்சயம் வெற்றிவாகை சூடுவார்கள்.

அமீரே ஜமாஅத் அவர்கள் முஸ்லிம் நாடுகள் இந்த அக்கிரமத்தை அகற்றுவதின் பக்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். அவ்வாறு  இத்தகைய கடினமான தருணத்தில் பாலஸ்தீனர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்வது மார்க்க, தார்மீக, சட்ட ரீதியான பொறுப்பாகும் என்று கூறியுள்ளார்கள்.

இஸ்ரேலின் சதிவலையில் அகப்படாமல் இருக்க வேண்டும் என்று இந்திய அரசையும் கேட்டுக் கொண்டுள்ளார்கள். மேலும் பாலஸ்தீன விவகாரத்தில் உதவி நல்கிட வேண்டும்.

பாலஸ்தீனுடன் நல்ல சுமூகமான உறவுகளை வைத்துக் கொள்வது இந்தியாவிற்கு தார்மீக மற்றும் அரசியல் ரீதியாக பயனளிக்கக் கூடியது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.