பத்திரிகையாளர்களுக்கான நோன்புப் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT) சார்பில் 13.08.2014 அன்று மாலை ஊடகவியலாளர்களுக்கான நோன்புப் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை ஐ.எஃப்.டி வளாகத்தில் நடைபெற்றது.

மெளலவி முஸம்மில் புகாரி அவர்களின் கிராஅத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநிலத்தலைவர் ஜனாப் ஏ.ஷப்பீர் அஹ்மத் அவர்கள் தலைமையுரையாற்றினார். அதன் பிறகு நிகழ்வில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் தங்களது கருத்துகளை அவையில் பதிவு செய்தனர்.

ஏ. ஷப்பீர் அஹ்மத், மாநிலத் தலைவர்-ஜ.இ.ஹி.

ஏ. ஷப்பீர் அஹ்மத், மாநிலத் தலைவர்-ஜ.இ.ஹி.

தீக்கதிர் ஆசிரியர் திரு. குமரேசன், திரு. எஸ்.ராம கிருஷ்ணன், துக்ளக் பரக்கத், நேஷ்னல் டுடே சத்தியநாராயணன், விகடன் ஆசாத், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் சுபாஸ், திரு. பெரேரா ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் பேசியஎஸ்.ரா., “நான்ஆரம்ப பள்ளிப் படிப்பை முடித்தது விருதுநகரில் உள்ள சையது முகம்மது பள்ளியில்…

எஸ். ராமகிருஷ்ணன் உரையாற்றுகிறார்

எஸ். ராமகிருஷ்ணன் உரையாற்றுகிறார்

நான் தமிழ் பாடம் கற்றுக் கொண்டதும் ‘அப்துல்காதர்ஐயா’ எனும் தமிழ் ஆசிரியரிடம் தான். எங்கள் ஊரில் முஸ்லீம்களும் நாங்களும் மாமா, மச்சான் என தான் அழைத்துக் கொள்வோம். வாய் அளவில் மட்டுமல்லாமல் எங்கள் தொடர்புகளும் அவ்வாறே இருக்கும்” என தனக்கும் முஸ்லீம் சமூகத்திற்கும் உள்ள தொடர்பை வெளிப்படையாக எடுத்துரைத்தார்.

மேலும் பேசும் பொழுது, “இன்று சில சக்திகள் முஸ்லீம்களுக்கும் இந்த மண்ணிற்கும் உள்ள தொடர்பை, வரலாற்றை திருத்துவதன் மூலம் அறுக்கப்பார்க்கிறார்கள். ஆனால், அந்த வரலாறு கல்லிலோ அல்லது கட்டிடங்களிலோ, காகித தாள்களிலோ எழுதப்படவில்ல மாறாக அது எங்களுக்குள் அன்றாடம் பயன்படுத்தும் மாமா, மச்சான் எனும் உறவு முறை வார்த்தைகளில்,  எங்களின் இதயங்களில் எழுதப்பட்டுள்ளது அதை இவர்களால் திருத்தவோ அழிக்கவோ முடியாது” என உணர்ச்சிபூர்வமாக குறிப்பிட்டார்.

திரு. குமரேசன் கூறுகையில் :

இறைவனின்பெயரால், மதத்தின்பெயரால், இனத்தின்பெயரால், சாதியின் பெயரால் நடக்கிற கொடுமைகளையும் இழைக்கப்படுகிற அநீதிகளையும் கண்டு மனம் பதறுகிறது. பூமியில் நிலமும் நீரும் சந்திக்கிற இடங்கள் மட்டும்தானே இயற்கையான எல்லைக்கோடுகள்?

தீக்கதிர் ஆசிரியர் குமரேசன்

தீக்கதிர் ஆசிரியர் குமரேசன்

மனிதர்கள் செயற்கையாகவ ரைந்து கொண்ட எல்லைக்கோடுகளுக்காக நடத்துகிற சண்டைகளையும் கொலைகளையும் கண்டு மனம் துடிக்கிறது.  இப்போது காஸா பகுதியில் நடப்பது உள்பட.  72மணி நேரசண்டை நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அரசு சம்மதம் என்றசெய்தியைக் கேட்கிறபோது, மூன்று நாட்களுக்கு பாலஸ்தீன மக்கள் இயற்கை மரணம் அடைவதற்கான அனுமதி அல்லவா அது என்ற எண்ணம் மனதைக் கொந்தளிக்கச் செய்கிறது.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பேசுகையில், தமது வெளிநாட்டுப் பயணத்தின் போது, விமானநிலையத்தில் ஒரு முஸ்லிம் பெரியவர் ஆடைகள் களையப்பட்டு சோதனை செய்யப்பட்ட அவமானத்தைப் பற்றிச் சொன்னார். பயங்கரவாத ஆபத்து என்றால் தன்னையும் தானே சோதனை செய்திருக்கவேண்டும்,  ஆனால் இஸ்லாமிய மக்களை மட்டும் அடையாளப்படுத்துவது ஏன் என்று கேட்டார். அந்த விமானநிலையத்தில், அந்த இஸ்லாமிய அன்பருக்கு இழைக்கப்பட்ட அவமானம் கண்டு ஒரு எஸ்ராவுக்கு மட்டும் தானே மனம் கொதித்தது? மற்ற பயணிகள் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருந்தது ஏன்?

இங்கே ஊடக நண்பர்கள் கூடியிருப்பதால், லயோலா கல்லூரி ஊடகவியல் மாணவர்கள் இரண்டாண்டுகளுக்கு முன் நடத்திய ஆய்வு பற்றிப் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். 100 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து, தீவிரவாதியின் தோற்றத்தைப் படம் வரைந்துகாட்டு என்று கேட்டிருக்கிறார்கள். தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிக் குழந்தைகள் முதல், மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகள் வரையில் பல மட்டங்களிலுமாக நடத்தப்பட்ட அந்த ஆய்வில், அத்தனை குழந்தைகளும் முகத்தில் மீசை இல்லாத, தாடிவைத்திருக்கிற, தலையில்குல்லா அணிந்திருக்கிற, நீண்ட அங்கியோடு இருக்கிற, கையில் துப்பாக்கியோடு நிற்கிற உருவத்தை வரைந்திருந்தார்கள். அவர்களில் 13 பேர் இஸ்லாமிய வீட்டுக்குழந்தைகள்…

யாரோ உருவாக்க விரும்புகிற இந்தப் படிமம் மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்டதன் விளைவுதானே விமானநிலையத்தில் சகபயணி அவமதிக்கப்படுகிற போது மற்றவர்கள் இயல்பாக எடுத்துக்கொண்டு போவது? இந்தப்படிமத்தை பதிய வைத்ததில் ஊடகத்துறையைச் சேர்ந்த நமக்குப் பங்கில்லையா?  அந்தப் பங்கிலிருந்து கழற்றிக் கொள்ள நாம் என்ன செய்யப்போகிறோம்? அது எளிதான செயலல்ல,  ஊடக நிறுவனங்களின் நிர்வாகங்களை மீறி எதுவும் செய்துவிட முடியாது தான். ஆனாலும், மாற்றுச்சிந்தனைகளைக் கொண்டு செல்வதில், உண்மைகளைச் சொல்வதில், நம்பங்கிற்கு ஒரு துளியாவது முயல்வதற்கு உறுதியேற்போம் என்றார்.

மேலும், வருகை புரிந்திருந்த அனைத்து ஊடகவியலாளர்களும் தங்களின் கருத்துகளை அழகாக பதிவு செய்தனர். மனம் திறந்த நிகழ்வாக அமைந்திருந்தது.

அதன் பிறகு நிறைவாக ஐ.எஃப்.டி-யின் துணைத் தலைவர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் உரையாற்றினார்.

டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்

டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்

உரையில் ஊடகத்திற்கு இருக்கும் பொறுப்புகளை தெளிவாக எடுத்து வைத்தார். காஸாவில் நடைபெறுகின்ற மனித உரிமைக்கு எதிரான கொடுமைகளை ஊடகங்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்பதை விவரித்தார்.  நல்லிணக்கத்திற்கு சிறந்த முன்மாதிரியாக தமிழகம் திகழ்கின்றது. இன்றைய சூழலில் சமுக அக்கறையுள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை வழியுறுத்தும் உரையாக அமைந்திருந்தது.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்

ஐ.எஃப்.டி-யின் இணைச் செயலாளர் கே.ஜலாலுதீன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது. இந்நிகழ்வில் ஐ.எஃப்.டி-யின் பொதுச் செயலாளர் ஜனாப் ஹெச்.அப்துர் ரகீப், பொருளாளர் இம்ரான் லத்திப் சேட் கலந்து கொண்டனர். நிகழ்வினை மானுட வசந்தம் இயக்குநர் வி.எஸ்.முஹம்மத் அமீன் மிக அழகாக வழிநடத்தியது பங்கேற்பாளர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே!