கண்ணியக் கவசம் ஹிஜாப் – பத்திரிகை செய்தி

hijab press meet ch

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தமிழ்நாடு மகளிர் அணி சார்பில் வருகிற நவம்பர் 8 முதல் 15 வரை மாநில அளவில் “ஹிஜாப் வாரம்” கடைபிடிக்கப்படுகிறது.

கண்ணியக் கவசம் ஹிஜாப்

கண்ணுக்கு இமை போல பெண்ணுக்கு ஹிஜாப்.  இமைகளை இறைவன் படைத்திருப்பது கண்களைச் சிறைப்படுத்தவோ சிதைக்கவோ அல்ல; கண்களின் பாதுகாப்புக்குத்தான்.

அதுபோல பெண்களுக்கு ஹிஜாபை இறைவன் கடமையாக்கியது அவளை அடிமைப்படுத்தவோ, சிறுமைப்படுத்தவோ அல்ல; அவளுடைய கண்ணியத்தைக் காப்பதற்குத்தான்.

ஆம்..! பெண்களுக்கு ஆன்மா இல்லை; பெண் தாழ்ந்தவள்; பெண் அடிமை என்ற காலகட்டத்தில் பெண் குழந்தை பிறப்பதை நற்செய்தியாகச் சொன்ன மார்க்கம் இஸ்லாம்.

பெண்களுக்கு கல்வி உரிமை, சொத்துரிமை, பொருளீட்டும் உரிமை, கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, மணக்கொடை நிர்ணயிக்கும் உரிமை, மணவிலக்கு உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, வேதம் கற்கும் உரிமை, கற்பிக்கும் உரிமை எனப் பெண்ணின் விடுதலை மார்க்கமாக வந்ததுதான் இஸ்லாம்.

அடிமைத்தனத்தின் சின்னமா ஹிஜாப்?

பெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய மகத்தான அருட்கொடைதான் ஹிஜாப் எனும் உடையணியும் ஒழுங்குமுறை. ஹிஜாப் அணியச் சொல்வதன் அடிப்படையே பெண்கள் வெளியே செல்லலாம் என்பதுதான். பெண் சமூகத்தின் அங்கமாக சகலப் பணிகளிலும் பங்காற்ற வேண்டுமெனில் அவள் கண்ணியமாய் உடையணிந்து வரவேண்டும்.

ஹிஜாப் அணிவதனால் அவளது பணிகளில் பாதிப்பு எதுவுமில்லை. பெண்ணுரிமை என்ற போர்வையில் பெண்களை அரைகுறையாக்கி காட்சிப் பொருளாய், கடைச் சரக்காய் ஆண்வர்க்கம் அடிமைப்படுத்திவைத்துள்ளது. கண்ணியம் இல்லாது ஏது பெண்ணியம்? உரிமை என்பது ஆடைக் குறைப்பு அல்ல; அணிவதுதான்!

போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இவ்வாரத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் பதில் சொல்ல இருக்கின்றோம்.  இன்னும் குறிப்பாக பேரணி, பொதுக்கூட்டங்கள், கல்லூரி மாணவிகள் கருத்தரங்கம், தொலைக்காட்சியில் ஹிஜாப் பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது.

5 நவம்பர் அன்று சென்னை பத்திரைகையாளர் சங்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  அதைத் தொடர்ந்து மதுரை மற்றும் கோவையில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.