பாகிஸ்தான் பள்ளிக்குழந்தைகள் படுகொலைக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடும் கண்டனம்

pakterror

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்திவரும் பள்ளியில் புகுந்து 132 மாணவர்கள் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்டவர்களைத் தீவிரவாதிகள் கொன்றழித்துள்ளனர். நெஞ்சைப் பதறவைக்கும் இந்தக்காட்டுமிராண்டித்தனமான  செயலுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத் தலைவர் ஏ.ஷப்பீர் அஹமத் கடும் கண்டனத்தையும் உயிரிழந்தவர்களுக்கான ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் குண்டுவைப்பது, ரயில்களில் குண்டுவைப்பது போன்ற மனிதவிரோதச் செயல்களால் அப்பாவிகளைக் கொன்று குவிக்கும் தீவிரவாதிகள் இதுவரை என்ன சாதித்துவிட்டார்கள்? இனியும் எதனைச் சாதிக்கப்போகிறார்கள்?

அப்பாவிகளின் ரத்தத்தைக் குடிக்கும் இந்தக் காட்டேறிகளின் வெறி எப்போது அடங்கும்? என உலகமே அச்சம் கொண்ட சூழலில் பால்மணம் மாறா பிஞ்சுகளைச் சுட்டுத்தள்ளிய வன்ம நிகழ்வு மனிதகுலத்திற்கே இழிவைத் தேடித்தரும் செயலாகும்.  குழந்தைகளைக் கொல்வதைப் போன்ற கோழைத்தனத்தையும், இரக்கமற்ற செயலையும் செய்த தீவிரவாதிகளை மனிதர்களாகவே கருத இயலாதபோது, இவர்களை மதம் சார்ந்து கருதுவதற்கு இடமே இல்லை. நேரடியான போர்களங்களில் கூட பெண்களையும், குழந்தைகளையும் கொல்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது. இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு நேர் முரணான இப்பாதகச் செயலைச் செய்தவர்கள் இஸ்லாத்தின் பெயரால் இக்காரியத்தை அரங்கேற்றுவதை ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

எந்தக்காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்தவே இயலாத இக்கொலைவெறிச் செயல் மனிதநேயத்தையும், நல்லிணக்கத்தையும், அமைதியையும் விரும்பும் அனைவரையும் பெரும்கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்குவதற்கு பாகிஸ்தான் அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். குழந்தைகளைக் கொன்ற கொடியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். தீவிரவாதத்தின் பெயரால் இதுபோன்ற ஒரு நிகழ்வு இனி நடைபெறாவண்ணம் பாதுகாப்புகள் பலப்படுத்தவேண்டும். குழந்தைகளை இழந்துவாடும் பெற்றோர்களுக்கு இறைவன் அழகிய பொறுமையையும், இழப்பைத் தாங்கும் மனவலிமையையும் தர இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.