கோவையில் “சுவனப்பாதை” இஸ்லாமியக்கண்காட்சி

கோவை மாநகரின் கரும்புக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில் பயிலும் மாணவியர் சார்பில் பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1, 2015 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய மூன்று நாட்கள் ‘சுவனப்பாதை’ எனும் மையத்தலைப்பில் இஸ்லாமியக்கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

Suvanappadhai Expoi-Hidhaya College

தினசரி காலை 10 – 00 மணி முதல் மாலை 5 – 00 மணிவரை கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியில் ஐந்து அரங்குகளில் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள், நற்பண்புகள், இஸ்லாமிய வாழ்வியல், இஸ்லாமிய வாரிசுரிமை சட்டங்கள், பெண்ணுரிமைகள், பெண் கல்வி, பர்தா, கொலை, தற்கொலை, கருக்கொலை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் மாணவியரே உருவாக்கிய ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட மாடல்கள் (மாதிரிகள்) காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்தக்கண்காட்சியின் முதல் நாளான பிப்ரவரி 27 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9 – 30 மணியளவில் நடைபெற்ற துவக்க நிகழ்வில் ஜனாபா ஸுபைதா பேகம் (ஆயிஷா மஹால் குரூப்ஸ்), ஜனாபா நிலாஃபர் நிஸா (ஜீவன்ஸ் டீ குரூப்ஸ்), ஜனாபா ராபியா பேகம் (JB மஹால் குரூப்ஸ்), ஜனாபா ஸாபிரா ஹுசைன் (வைகை பம்ப்ஸ்) ஆகியோர் கண்காட்சி அரங்குகளைத் திறந்து வைத்தனர்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) கோவை மகளிரணி பொறுப்பாளர் ஜனாபா பர்ஸானா ரியாஸ், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) தமிழக துணைத்தலைவி ஜனாபா கதீஜா, இந்திய மாணவியர் இஸ்லாமிய அமைப்பு (GIO) தமிழகத்தலைவி சகோதரி முபீனா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஹிதாயா மகளிர் இஸ்லாமியக்கல்லூரி முதல்வர், ஜனாபா ஜுனைதா ஜலீல் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி பேராசிரியை திருமதி அஸ்மாபி கண்காட்சி குறித்து அறிமுகம் செய்தார். மற்றும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், சமுதாயத் தலைவர்கள், தொழில் அதிபர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்தக்கண்காட்சி நடைபெற்ற மூன்று நாட்களும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் திரளாக வருகைதந்து பல்வேறு இஸ்லாமிய வழிகாட்டுதல்கள் குறித்த தெளிவு பெற்றனர்.

எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே..!!