மெளலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அகில இந்திய தலைவராக தேர்வு

moulana-jalaluddin-umri-on-egypt-crises

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 2015 – 2019 ஆண்டிற்கான அகில இந்திய தலைவராக
மௌலானா சையத் ஜலாலுதீன் உமரி அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர்: ஓர் அறிமுகம்
**********************************************************************************

தமிழகத்தைச் சேர்ந்தவர்
**********************************
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் 1935-இல் வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கருகே புத்தகரம் கிராமத்தில் பிறந்தார்கள். அந்தக் கிராமத்தின் உர்தூ பள்ளியில் தொடக்கக்கல்வியைப் பயின்ற பிறகு உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியில் சேர்ந்து மார்க்கக் கல்வியில் தேர்ச்சி பெற்றார்கள். தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் முன்ஷி ஃபாஸில் பட்டமும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும் படித்துத் தேர்ச்சி பெற்றார்கள்.

பதின்பருவத்திலேயே இயக்கத் தொடர்பு
********************************************************
1954-இலிருந்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார்கள். அலிகர் கிளையின் தலைவராக பத்தாண்டுகள் பணியாற்றி இருக்கின்றார்கள். கடந்த பல்லாண்டுகளாக ஜமாஅத்தின் மத்திய பிரதிநிதிகள் சபை மற்றும் மத்திய ஆலோசனைகள் குழு ஆகியவற்றின் முக்கியமான உறுப்பினராகவும் அவர் செயலாற்றி வந்துள்ளார்

பத்திரிகையாளர்
**********************
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் ஒரு பத்திரிகையாளரும் கூட. ஜிந்தகி நவ் என்கிற உர்தூ மாத இதழின் ஆசிரியராக ஐந்தாண்டுகள் பணியாற்றிய அனுபவமும் அவருக்குண்டு. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தஹ்கீகாதே இஸ்லாமி என்கிற காலாண்டிதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றார்.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிறுவன உறுப்பினர்களில் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்களும் ஒருவர்.

எழுத்தாளர்
***************
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் ஒரு தேர்ந்த எழுத்தாளரும் கூட. நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை யாத்திருக்கின்றார். இவற்றில் பதினேழு நூல்கள் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன.

தமிழிலும் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல், சமூகக் கட்டமைப்பில் முஸ்லிம் பெண்களின் பங்கு, மக்கள் சேவை, விசாரணை நேரம், பெண்களும் இஸ்லாமும், ஒன்றே குலம் ஒருவனே தேவன், நாட்டு நடப்பும் நமது பொறுப்புகளும் ஆகிய அழகான ஆறு நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி இருக்கின்றன. இவற்றை சென்னை இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் வெளியிட்டுள்ளது.

இவற்றில் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் என்கிற நூல் அரபி, ஆங்கிலம், துருக்கி, இந்தி, தமிழ், வங்காளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற நூல் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, மராட்டி, குஜராத்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. இஸ்லாத்தில் பெண்களின் அந்தஸ்து, உரிமைகள் பொறுப்புகள், நாட்டு நடப்பு, ஃபிக்ஹ் விவகாரங்கள், குடும்ப அமைப்பு, அடிப்படைக் கோட்பாடுகள், இஸ்லாமிய இயக்கம் என பல்வேறு தலைப்புகளில் நிறைய எழுதியிருக்கும் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் இன்று சமகால மார்க்க அறிஞர்களில் தனிச்சிறப்பும் மகத்துவமும் பெற்றவராக ஜொலிக்கின்றார்.

கல்வியாளர்
******************
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் ஒரு கல்வியாளரும் கூட. அலிகரில் பல்லாண்டுகளாகச் செயலாற்றி வரும் இதாரா-ஏ-தஹ்கீகே தஸ்னீஃபே இஸ்லாமி ஆய்வுக்கழகத்தின் செயலாளராக, தலைவராக சேவையாற்றி வந்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் வாரங்கல் நகரில் செயல்பட்டு வரும் ஜாமியத்துஸ் ஸுஃபா பல்கலைக் கழகத்தின் வேந்தராக இருக்கின்றார். இதே போன்று உத்திரப் பிரதேசம் ஆஜம்கர் பல்ரியா கஞ்சு நகரில் செயல்பட்டு வரும் ஜாமியத்துல் ஃபலாஹ் பல்கலைக் கழகத்தின் வேந்தராகவும் இருக்கின்றார்.

 

அகில இந்திய தலைவர் தேர்வை தொடர்ந்து மத்திய ஆலோசனைக் குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

புதிய மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்
*************************************************************
1. சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி (தெலுங்கானா)
2. எஞ்சினியர் முஹம்மத் சலீம் (இராஜஸ்தான்)
3. நுஸ்ரத் அலீ (உத்திரப் பிரதேசம்)
4. எஸ் அமீனுல் ஹஸன் (கர்நாடகம்/தமிழகம்)
5. முஹம்மத் ஜஃபர் (பீகார்)
6, டாக்டர் ஹஸன் ரஜா (ஜார்க்கண்ட்)
7. டாக்டர் சையத் காசிம் ரசூல் இல்யாஸ் (தில்லி)
8. டி ஆரிஃப் அலீ (கேரளம்)
9. டாக்டர் முஹம்மத் ரஃப்அத் (தில்லி)
10 மௌலானா முஹம்மத் யூசுப் இஸ்லாஹி (உத்திரப் பிரதேசம்)
11. பேராசிரியர் ஏஜாஸ் அஹ்மத் அஸ்லம் (தமிழகம்)
12. மௌலானா வலீயுல்லாஹ் சய்யீதி ஃபலாஹி (உத்திரப் பிரதேசம்)
13. ஹெச் அப்துர் ரகீப் (தமிழகம்)
14. மௌலவி டி கே அப்துல்லாஹ் (கேரளம்)
15. முஜ்தபா ஃபாரூக் (மகாராஷ்டிரா)
16. அப்துல் ஜப்பார் சித்திகீ (தெலுங்கானா)
17. முஹம்மத் இக்பால் முல்லா (கர்நாடகம்)
18. வி கே அலீ (கேரளம்)