20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொலை, தெலுங்கானாவில் முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை – ஜ.இ.ஹி கடும் கண்டனம்

138

நகரி – செம்மரங்களை வெட்டி கடத்தியதாக கூறி 20 தமிழக தொழிலாளர்கள் ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் வாரங்கல் சிறையிலிருந்து ஹைதராபாத் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும் வழியில் ஐந்து முஸ்லிம் விசாரணைக் கைதிகளைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு ஈவிரக்கமின்றி படுகொலை சம்பவங்களுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடும் கண்டனத்தையும் ஆழ்ந்த கவலையையும் தெரிவித்துள்ளது.

கடந்த 7-ம் தேதி காலை திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் சந்திரகிரி மண்டலம் வாரி மெட்டு என்கிற இடத்தில் சச்சிநோடு பண்டா மற்றும் ஈத்தல குண்டா ஆகிய இரண்டு இடங்களில் 20 தமிழக தொழிலாளர்கள், ஆந்திர சிறப்பு அதிரடி போலீஸாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவரை இல்லாத வகையில் 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது மூலம் நாட்டில் வாழும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.  இது போன்ற சம்பவங்கள் இனி ஒருநாளும் நடைபெறாத வகையில் உரிய நடவெடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநிலத்தலைவர் ஏ.ஷப்பீர் அஹ்மத் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
மேலும் வாரங்கல் சிறையிலிருந்து ஹைதராபாத் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும் வழியில் ஐந்து முஸ்லிம் விசாரணைக் கைதிகளைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு ஈவிரக்கமின்றி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறிழைத்த காவல்துறையினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்; அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கடுந்தண்டனை வழங்க வேண்டும்; இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக தலா ஒரு கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநிலத்தலைவர் ஏ.ஷப்பீர் அஹ்மத் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் நன்கு படித்த முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, போலி என்கவுன்டர்களில் கொலை செய்யப்படும் நிகழ்வுகள் கடந்த இருபது ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்தை இரண்டாந்தர குடிமக்களாக மாற்ற, துன்புறுத்துவது, பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பது என சதிவலை பின்னப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்ட பிறகும், நீதிமன்றங்களில் அவர்கள் மீதான எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு அவர்கள் வெளியே வருகின்றபோது, காவல்துறையினரின், புலனாய்வுத் துறையினரின் சதித்திட்டங்களையும், குற்றங்களையும் வெளிப்படுத்துகின்றனர். இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகளை மறைக்கவே விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொள்கின்றனர் எனவும் ஷப்பீர் அஹ்மத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் விசாரணைக் கைதிகள் ஐந்து பேரும் கைவிலங்கிடப்பட்டு, காவல்துறை வாகனத்தில் உள்ள இருக்கைகளுடன் கட்டப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. முஹம்மத் வகாருத்தீன், முஹம்மத் ஹனீஃப், அம்ஜத் அலீ, ரியாஸ்கான், இஸ்ஹர் கான் ஆகியோர் காவல்துறையினர் வைத்திருந்த ஆயுதங்களைப் பறிக்க முனைந்ததாகக் காவல்துறையினர் கூறும் தகவல் பொய் என்பது இதிலிருந்தே தெரிகிறது.
அரசு தாமதமின்றி, தவறிழைத்த காவல்துறையினரை உடனே கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.