டாக்டர் முஹம்மத் முர்ஸிக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடும் கண்டனம்!

morsi

எகிப்து நாட்டு மக்களால், அந்நாட்டுச் சட்டப்படி ஜனநாயக முறையில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் முஹம்மத் முர்ஸி அவர்களின் அரசை, அந்நாட்டின் இராணுவத் தலைமைத் தளபதி அப்துல் பத்தாஹ் அல்ஸீஸீ சட்ட விரோதமாகக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைப் பறித்துக் கொண்டார். பின்னர் அவர் மீது பல்வேறு வகையான பொய் வழக்குகள் சுமத்தப்பட்டன. அந்த வழக்குகளில், டாக்டர் முஹம்மத் முர்ஸி உள்ளிட்ட முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தைச் சேர்ந்த 105 தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் கைப்பாவை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இதற்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை நீதி நியாயத்தைக் கடுமையான முறையில் காலில் போட்டு மிதிப்பதற்குச் சமம். அமைதியையும் நீதியையும் விரும்பும் உலக மக்கள் அனைவரும், ஐ.நா.சபை, அரசுகளின் முக்கியப் பொறுப்பாளர்கள், மனித உரிமை அமைப்புகளும் இதில் தலையிட வேண்டும். இந்தப் பகிரங்கமான, வெளிப்படையான அநீதிக்கும் பயங்கரவாதத்திற்கும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்றும், இந்த அநீதியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்லாத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்றும், நீதி நியாயத்தையும் ஜனநாயகத்தையும் படுகொலை செய்வதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்றும், டாக்டர் முஹம்மத் முர்ஸி, டாக்டர் அப்துல் பதீஃ, அல்லாமா யூஸுஃப் அல்கர்ளாவி உள்ளிட்ட சகோதரத்துவ அமைப்பைச் சார்ந்தவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் யாருக்கெல்லாம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோ அவை அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் எகிப்து நாட்டின் ஆட்சியை இப்போது கைப்பற்றி இருக்கும் கூட்டத்தினருக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த, இஸ்லாத்தின் தொட்டிலாகத் திகழும் புகழ்பெற்ற அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எகிப்து நாட்டின் கொடுங்கோல் ஆட்சியாளர்கள், டாக்டர் முர்ஸி உள்ளிட்டோருக்குத் தூக்குத்தண்டனை கொடுத்தது சரிதான் என்பதற்குச் சான்று பகர இந்தப் பல்கலைக் கழகத்தையும் பயன்படுத்த முயன்றுள்ளார்கள். இதன் மூலம் அதற்கு மிகப் பெரிய சோதனையை ஏற்படுத்தியுள்ளார்கள்.

உலகத்தில் உள்ள நீதியை விரும்பக்கூடிய எல்லா மக்களும் இந்தப் பல்கலைக்கழகத்திடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்கின்றனர்: அது தனது பழமையான வரலாற்றின் மகத்துவத்தை, புகழை, ஒளிமயமான நிலையை நிலைநிறுத்திக் கட்டிக்காக்க வேண்டும். சகோதரத்துவ அமைப்பைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது. அவர்களை கண்ணியமான முறையில் விடுவிக்க ஆவன செய்ய வேண்டும். இஸ்லாம் நீதியை நேசிக்கின்றது. அதைப் போதிப்பதிலும், அதை எப்போதும் உயிரோடு வைத்திருப்பதிலும் இந்தப் பல்கலைக் கழகம் ஒளிமயமாகப் பிரகாசிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.