தலித் மக்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்!

425023-dalit-children-haryana

ஹரியானா மாநிலத்தில் தலித் குடும்பத்தினர் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழகத் தலைவர் ஏ. ஷப்பீர் அஹ்மத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  பாசிச பயங்கரவாதிகள் நம் நாட்டில் வாழும் தலித்துகள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு எதிரான வெறுப்பு உணர்வைத் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். இது போன்ற மிருகத்தனமான தாக்குதல்கள் நம் நாட்டிற்குப் பெரும் ஆபத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்துகின்றன. மாட்டிறைச்சியைக் காரணமாகக் கூறி குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவது வேதனைக்குரியது.  

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூர் கோயிலில் நுழைந்ததற்காக 90 வயது தலித் பெரியவர் ஒருவர்  உயிருடன் எரிக்கப்பட்டுள்ளார்.  ஹரியானாவில் உள்ள ஃபரீதாபாத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு தலித் குடும்பத்தினர் தாக்கப்பட்டுள்ளனர். இரண்டு குழந்தைகள் நெருப்பில் பொசுக்கப்பட்டுள்ளனர்.  அவர்களின் பெற்றோர்களும் கடுமையாகக் காயமடைந்துள்ளனர்.  தில்லி ஷஃப்தர்ஜுங் மருத்துவனையில் அக்குழந்தைகளின் தாய் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

இத்தகைய மோசமான தொடர் வன்முறைச் செயல்கள் நாடு தவறான பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பதைத் தெளிவாக நிரூபிக்கின்றன. இதனை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கவலையுடன் தெரிவிக்கின்றது.  சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றக் கடமைப்பட்ட அதிகாரிகள் தங்களது பொறுப்பை சரியான முறையில் ஆற்றவில்லை.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அரசு உடனடியாக இவ்விஷயத்தில் அக்கறையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜமாஅத் வலியுறுத்துகிறது.  பாசிச பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காக்க வேண்டும் என்ற செய்தியை சட்டம் ஒழுங்கு அதிகாரிகளுக்கு வழங்கி இதுபோன்ற செயல்கள் இனி நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கின்றது.