அமைதி மற்றும் மனித நேயம் பரப்புரை இயக்கம்

PEACE-HUMANITY-ENGLISH

பத்திரிகைச் செய்தி
அமைதி – மனிதநேயத்தை வலியுறுத்தி 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பரப்புரை
அமைதி – மனிதநேயத்தை வலியுறுத்தி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பேரியக்கம் மாபெரும் பரப்புரையை 2016 ஆகஸ்டு 21 முதல் செப்டம்பர் 4 வரை அகில இந்திய அளவில் கடைப்பிடிக்கின்றது. இந்தப் பரப்புரையை முன்னிட்டு தமிழகத்தின் மிகச்சிறந்த ஆளுமைகள்,ஆன்மிகத்தலைவர்கள், கல்வியாளர்கள், சமூகவியற் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற பலதரப்பு மக்களைச் சந்தித்து கலந்துரையாடவும், அரங்குக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், நிறைவு நாளான செப்டம்பர் 4 ஆம் நாள் திருச்சியில் அமைதி – மனிதநேயத்திற்கான மாரத்தான் நடத்த உள்ளதாகவும், பரப்புரையின் மையக்கருத்தில் ஒரு இலட்ச ரூபாய் பரிசுக்கான குறும்படப்போட்டி, 25,000 ரூபாய் பரிசுக்கான கட்டுரைப்போட்டி போன்ற பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதாகவும் பரப்புரையின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வி.எஸ்.முஹம்மது அமீன் தெரிவித்தார்.
உலகமே வியந்து போற்றும் இந்தியாவின் பன்முகத்தன்மையும், நல்லிணக்கமும் அண்மைக்காலமாக பெரும் வீழ்ச்சியடைந்து வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நாட்டின் பெருமைக்குக் களங்கம் ஏற்படும் வகையில் தலித் மக்களும், சிறுபான்மையினரும் தாக்குதல்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாகி வருவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் நெடுங்காலமாகப் போற்றிப் பாதுகாத்து வந்த சமயங்களுக்கிடையேயான உறவில் இடைவெளி அதிகமாகி வருகிறது. வெறுப்புப் பரப்புரையும், மாச்சரியங்களும் இந்தியாவிற்கு பெரும் தலைக்குனிவையும், வீழ்ச்சியையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
உள்துறை அமைச்சகம் தரும் தகவலின்படி கடந்த ஆண்டில் இனக்கலவரங்கள் 17 விழுக்காடு அதிகரித்துள்ளன. கடந்த ஒரு ஆண்டில் 751 கலவர வழக்குகள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் பாதுகாப்பற்ற, பதட்ட நிலை உருவாகி இந்தியாவின் அமைதியைச் சீர்குலைத்து, மனிதநேயத்தைச் சிதறடித்து வருகின்றன. இந்த நிலை நீடித்தால் நாடு பெரும் பின்னடைவைச் சந்திப்பதுடன் ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொள்ளும் போக்கு அதிகமாகும். இணக்கமற்ற இந்தச் சூழ்நிலையை வகுப்புவாத, தீய சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பொய்யையும், வதந்தியையும், வெறுப்பையும் விதைத்து வருகின்றனர். சிறுபான்மை, தலித், பழங்குடி மக்களுக்கு எதிரான பொய்யான மனநிலையைக் கட்டமைத்து அவர்களைத் தனிமைப் படுத்தி நாட்டைத் துண்டாட நினைக்கின்றனர்.
1948 முதல் அகில இந்திய அளவில் செயல்பட்டு வரும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பேரியக்கம் நாட்டின் நிலையை கவலையுடன் நோக்குகிறது. நாடு செல்லும் அபாயகரமான, அவலமான சூழலைக் கருத்தில் கொண்டு வெறுப்பையும், மாச்சரியத்தையும் போக்கும் விதமாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய அளவில் அமைதி மனித நேயப் பரப்புரையை முன்னெடுத்துள்ளது.
தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த போதிலும், வட மாநிலங்களிலிருந்து கொடிய வியாதியான வெறுப்பும், துவேசமும் இறக்குமதியாகிவிடாமல் பாதுகாக்க வேண்டிய சூழலையும் ஜமாஅத்தே இஸ்லாமி கருத்தில் கொண்டுள்ளது. தமிழகத்தில் நிலவும் அமைதியும், நல்லிணக்கமும் கட்டிக் காக்கப்பட வேண்டிய அவசியத்தை மிக அழுத்தமாக ஜமாஅத்தே இஸ்லாமி முன்வைக்கிறது.
நாடு சந்தித்து வரும் வெறுப்பு, துவேசத்தை சிறுபான்மை, தலித்களுக்கான பிரச்னையாகப் பார்க்காமல் ஒட்டுமொத்த நாட்டின் பிரச்னையாகக் கருதி நல்லவர்கள் தங்கள் மெளனத்தைக் கலைக்க வேண்டும். அநீதிக்கு எதிராக ஆன்மிகவாதிகள், சமூகவியற்செயற்பாட்டாளர்கள், கல்வியாளார்கள், ஊடகவியலாளார்கள் என அனைவரும் கலந்துரையாடவும், ஒன்றிணைந்து களமிறங்கிப் போராடவும் வேண்டும் எனவும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேட்டுக் கொள்வதுடன் அனைவருடைய ஒத்துழைப்பையும் இந்த இனிய தருணத்தில் வேண்டி நிற்கிறது.