பத்திரிகை அறிக்கை
16 ஜூன் 2026
நாடு முழுவதும் நடைபெற்று வரும் மனிதாபிமானமற்ற மற்றும் சட்டவிரோத இடிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் –
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்தல்
அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தத்தை வரவேற்ற ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மாநிலங்களவைத் தேர்தல் நடைமுறையின் நேர்மை மற்றும் மேற்கு வங்கத்தின் தரைமட்ட நிலைமை குறித்தும் கவலை தெரிவித்தது.
புதுடெல்லி: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமைப்பின் மூத்த தலைவர்கள் நாடு முழுவதும் நடைபெற்று வரும் இடிப்பு நடவடிக்கைகள், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம், மாநிலங்களவைத் தேர்தலின் நம்பகத்தன்மை மற்றும் மேற்கு வங்கத்தின் தேர்தலுக்குப் பிந்தைய நிலைமை ஆகியவை குறித்து தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் துணைத் தலைவர் மலிக் முஹ்தசிம் கான்,
டெல்லியில் நடைபெற்று வரும் இடிப்பு நடவடிக்கைகள் உரிய சட்ட நடைமுறைகளையும், முறையான மறு வாழ்வுத் திட்டங்களையும் பின்பற்றாமல் மேற்கொள்ளப்படுவதாகக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார்.
இத்தகைய நடவடிக்கைகள் அடிப்படை உரிமைகளுக்கும் மனித மாண்புக்கும் எதிரான மிகக் கொடூரமான மனிதாபிமானமற்ற செயல்கள் என அவர் குறிப்பிட்டார்.
“கடந்த சில வாரங்களில் டெல்லி, பாந்த்ரா, பரீதாபாத், விராம்காம் (குஜராத்), கோரேகான் (மகாராஷ்டிரா), வாரணாசி, சம்பல், ஜெய்ப்பூர், பயந்தர், பிம்ப்ரி-சின்ச்வாட் (PCMC), இடாவா உள்ளிட்ட பல பகுதிகளில் இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிம்ப்ரி-சின்ச்வாட்டில் பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதுடன், நள்ளிரவு நடவடிக்கையில் பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. சூரத்தின் நாசிர் நகரில் மூன்று நாட்களில் 106 வீடுகள் இடிக்கப்பட்டன. ஜெய்ப்பூரில் சாலை விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக நூரானி பள்ளிவாசல் இடிக்கப்பட்டது.”
“இத்தகைய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் போதிய தங்குமிடமின்றியும், மறுவாழ்வு குறித்த எந்தத் தெளிவும் இன்றியும் தவித்து வருகின்றனர். கடுமையான கோடை வெயிலிலேயே இவர்கள் பெரும் துயரத்தை அனுபவித்துள்ளனர்; பருவமழை நிலைமையை மேலும் மோசமாக்கும் அபாயம் உள்ளது. உரிய மறுவாழ்வு ஏற்பாடுகள் செய்யப்படாமல் வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மாண்பான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில், இத்தகைய இடிப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் துணைத் தலைவர் பேராசிரியர் முஹம்மது சலீம் பேசுகையில்:
“சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தத்தை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வரவேற்கிறது. இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து அம்சங்களும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினராலும் அதன் எழுத்து மற்றும் உணர்வு ஆகிய இரண்டின் அடிப்படையிலும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என நம்புகிறோம். நீண்டகால பதற்றத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், மோதல்களைக் குறைத்து பிராந்தியத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கான முக்கியமான முன்னேற்றமாகும்” என்றார்.
“இந்த ஒப்பந்தம் மீறப்படாத வகையில் மத்தியஸ்த நாடுகளும், சர்வதேச சமூகமும் உறுதியான பங்காற்ற வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏதேனும் மீறல்கள் நிகழ்ந்தால், அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதைக் கருத்தில் கொள்ளாமல், அவர்களின் அரசியல், இராணுவ அல்லது பொருளாதார வலிமையைப் பொருட்படுத்தாமல், நியாயமான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த முன்னேற்றம் பொருளாதார அழுத்தங்களைக் குறைத்து, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை மற்றும் நிதிச் சிரமங்களால் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கு ஓரளவு நிவாரணத்தை வழங்கக்கூடும். அமைதி மற்றும் உரையாடலை மேம்படுத்துவதில் இந்திய அரசு மேலும் முனைப்பான பங்கை வகிக்க வேண்டும் என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் எதிர்பார்க்கிறது.
அதேவேளை, ஈரான் மக்களுடன் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம்; அவர்களின் உறுதியையும் மனோதிடத்தையும் பாராட்டுகிறோம். மேலும், காஸா மற்றும் பாலஸ்தீனத்தில் நடைபெற்று வரும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமான மீறல்கள் போன்ற அநீதிகளை சர்வதேச சமூகம் புறக்கணிக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறோம்.”
"மாநிலங்களவைத் தேர்தல்"
மாநிலங்களவைத் தேர்தல் குறித்து பேராசிரியர் முஹம்மது சலீம் கூறுகையில்:
“சமீபத்திய போக்குகள் தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மை குறித்து கவலைக்கிடமான கேள்விகளை எழுப்புகின்றன. குதிரைப் பேரம், பண பலம், சட்டமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்துதல் மற்றும் கட்சி மாறி வாக்களித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன.
நியமனப் பத்திரங்கள் தொடர்பாக தன்னிச்சையான முடிவுகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வு மற்றும் வெளிப்படைத்தன்மையின்மை ஆகியவை நிறுவனங்களின் நடுநிலைத்தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளன. சமீபத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட சம்பவம், அதன் வரலாற்றிலேயே முதல்முறையாக நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இது நடைமுறை நியாயத்தின் மீது கேள்விக்குறி எழுப்புவதோடு, ஆபத்தான முன்னுதாரணத்தையும் உருவாக்குகிறது.”
"மேற்கு வங்கத்தின் நிலைமை"
APCR தேசியச் செயலாளர் நதீம் கான் பேசுகையில்:
“அரசியல் விசுவாசங்களை கட்டாயப்படுத்தி மாற்ற முயற்சிகள், எதிர்க்கட்சிகளை உடைக்கும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு எதிரான தெருமட்ட வன்முறை சம்பவங்கள் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவை அனைத்தும் அச்சுறுத்தல் மற்றும் கட்டாயப்படுத்தல் நிறைந்த சூழலை உருவாக்குகின்றன.”
“குறிப்பாக டாப்சியா போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர வேண்டிய அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் இடிப்பு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் நியாயம் மற்றும் சட்ட நடைமுறை குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன. சட்டவிரோத கட்டிடங்கள் இருந்தால் அவை சட்டத்திற்குட்பட்டு கையாளப்பட வேண்டும்; ஆனால் எந்த நடவடிக்கையும் சட்ட நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றியே மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் இடிப்பு நடவடிக்கைகள், அரசியல் கட்டாயப்படுத்தல் மற்றும் அச்சுறுத்தல் குறித்த தகவல்களுடன் இணைந்து பார்க்கும்போது, ஜனநாயக செயல்பாடுகளுக்கே ஆபத்தாக மாறிவரும் ஒரு சூழல் உருவாகி வருவதை சுட்டிக்காட்டுகின்றன” என்றார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தலைவர்கள், குடிமை அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சட்ட நிபுணர்கள் இந்த விவகாரங்களை தீவிரமாக எடுத்துக்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒற்றுமையுடன் நிற்க வேண்டும் என்று கூட்டாகக் கேட்டுக்கொண்டனர்.
நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கு, அனைத்து குடிமக்களினதும் உரிமைகள், மாண்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அடிப்படையான அவசியம் என்பதை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மீண்டும் வலியுறுத்தியது.
வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசியச் செயலாளர், ஊடகத் துறை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
புதுடெல்லி