News Channel

ஹஜ் பெருநாள் சந்திப்பு

"ஹஜ் பெருநாள் சந்திப்பு"

திருச்சி: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், பாலக்கரை வட்டத்தின் சார்பில் ஹஜ் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 31.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7 மணியளவில் திருச்சி சாஸ்திரி சாலையிலுள்ள KMS ஹக்கீம் அரங்கில் நடைபெற்றது.

மெளலவி ஜெய்னுல் ஆபிதீன் ஸலாமி அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், திருச்சி கிளைத் தலைவர் முனைவர் ஹஜ் மொய்தீன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். தனது உரையில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நாடு முழுவதும் மேற்கொண்டு வரும் சமய நல்லிணக்கம், கல்வி மற்றும் மக்கள் சேவைப் பணிகளை சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் பனானா லீஃப் உணவகங்கள் மற்றும் ஸ்ரீ அற்புதா ஸ்வீட்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர் திரு. இரா. மனோகரன் அவர்களுக்கும், திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் இணைப் பேராசிரியரும் முன்னாள் ஆங்கிலத் துறைத் தலைவருமான முனைவர் வி. எல். ஜெயபால் அவர்களுக்கும் “சமய நல்லிணக்க விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது. விருதுகளைப் பெற்ற இருவரும் தங்களது சமய நல்லிணக்க அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு வாழ்த்துரையாற்றினர்.

பாலக்காட்டிலுள்ள மவுண்ட் சீனா கல்வி நிறுவனங்களின் வாழ்க்கைத்திறன் பயிற்சியாளர் ஜனாப் A. P. அப்துல் நாசர் அவர்கள் “ஹஜ் பெருநாள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தனது உரையில், ஹஜ் பெருநாள் மனித சமுதாயத்தில் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டார். வறுமையை ஒழித்தல், தேவையுடையோருடன் பகிர்ந்து உதவுதல், மனிதர்களிடையே சாதி, இனம், நிறம் போன்ற எந்த வேறுபாடுகளுக்கும் இடமளிக்காமல் அனைவரையும் சமமாக மதித்தல் ஆகிய உயரிய பண்புகளை இஸ்லாம் வலியுறுத்துவதாக எடுத்துரைத்தார். மேலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்த ஒற்றுமை, சமத்துவம் மற்றும் மனிதநேயக் கொள்கைகளை நினைவுகூர்ந்தார்.

இறுதியாக முனைவர் அ. உமர் பாரூக் அவர்கள் நன்றியுரை வழங்கினார். தவ்ஃபிக் அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ரிஃபா சேம்பர் ஆப் காமர்ஸ் செயலாளர் ஜனாப் காஜா மொய்தீன், தலைமை ஆசிரியர் முனைவர் அந்தோணி லூயிஸ், சுமைதாங்கி இதழின் ஆசிரியர் திரு. முருகன் உள்ளிட்ட பல்வேறு சமயங்களைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

ஜமாஅத் மாவட்ட செயலாளர் முனைவர் அப்துல் ரஜாக் மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் நவாஸ்கான் ஆகியோரின் தலைமையில் பாலக்கரை வட்ட ஊழியர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெகுசிறப்பாக செய்திருந்தனர்.

வல்ல இறைவன் நமது பணிகளை அங்கீகரித்து இம்மையிலும் மறுமையிலும் அளப்பரிய நற்கூலியை வழங்குவானாக!