மௌலானா ஸையத் சல்மான் ஹுசைனி நத்வி (ரஹ்.) அவர்களின் மறைவையொட்டி
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி அவர்களின் அறிக்கை
மௌலானா ஸையத் சல்மான் ஹுசைனி நத்வி (ரஹ்.) அவர்களின் திடீர் மறைவு செய்தி எனக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும் மிகுந்த துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் இக்காலத்தின் தலைசிறந்த மார்க்க அறிஞர், புகழ்பெற்ற எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் சிந்தனையாளர் ஆவார். அவருடைய மறைவு, அவரது குடும்பத்தினருக்கும் மாணவர்களுக்கும் மட்டுமல்ல; ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்திற்கும், இஸ்லாமிய உலகின் அறிவியல் மற்றும் கல்வித் துறைகளுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
மௌலானா ஸையத் சுல்மான் ஹுசைனி நத்வி (ரஹ்.) அவர்கள் தமது வாழ்நாள் முழுவதையும் கல்வி, ஆய்வு, இஸ்லாமிய அழைப்புப் பணி (தஃவா), அறிவுசார் வழிகாட்டுதல் மற்றும் கல்வி நிறுவனங்களின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்காக அர்ப்பணித்திருந்தார். திருக்குர்ஆன், ஹதீஸ், ஸீரத் மற்றும் இஸ்லாமிய ஃபிக்ஹ் ஆகிய துறைகளில் தலைசிறந்த ஆசிரியராகத் திகழ்ந்த அவர், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி மற்றும் ஆளுமைப் பயிற்சியை வழங்கியுள்ளார். அவருடைய நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், சொற்பொழிவுகள் மற்றும் கல்விசார் பங்களிப்புகள், முஸ்லிம் சமுதாயம் நீண்ட காலம் பயனடையும் அரிய அறிவுச் செல்வமாக விளங்கும்.
தாருல் உலூம் நத்வத்துல் உலமாவுடனும் ஜாமிஆ ஸையத் அஹ்மத் ஷஹீத் கல்வி நிறுவனத்துடனும் அவர் கொண்டிருந்த நீண்டகால தொடர்பு, ஜம்இய்யத் ஷபாபுல் இஸ்லாம் அமைப்பின் தலைமைப் பொறுப்பு, மேலும் பல கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களை நிறுவுவதிலும் வளர்ப்பதிலும் அவர் ஆற்றிய முக்கிய பங்கு ஆகியவை என்றும் நினைவுகூரப்படும். மார்க்க அறிவை நவீன காலத்தின் தேவைகளுடன் இணைத்து, இந்தியாவிலும் உலகளாவிய அளவிலும் இஸ்லாமிய சிந்தனைக்கு புதிய பரிமாணத்தை அளித்தவர் அவர்.
எவ்வளவு பெரிய சிந்தனையாளராக இருந்தாலும், தவறுகள் மற்றும் கருத்து வேறுபாடுகளிலிருந்து முற்றிலும் விலகியவராக இருக்க முடியாது. மௌலானா சல்மான் நத்வி (ரஹ்.) அவர்களின் சில கருத்துகள், நிலைப்பாடுகள் அல்லது உரைகளில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவை, அவர் ஆற்றிய பன்முகத்தன்மை கொண்ட மகத்தான சேவைகளின் மதிப்பைக் குறைத்துவிட முடியாது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில், அவருடைய குடும்பத்தினர், மாணவர்கள், சக பணியாளர்கள், நேசிப்போர் மற்றும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது துயரத்தில் நாங்களும் பங்கெடுக்கிறோம். அல்லாஹ் தஆலா அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நேசிப்போருக்கும் அழகிய பொறுமையை வழங்குவானாக என்று பிரார்த்திக்கிறோம்.
மேலும், அல்லாஹ்விடம் நாங்கள் பிரார்த்திக்கிறோம்:
மர்ஹூம் மௌலானா அவர்களின் தவறுகளை மன்னித்து, இஸ்லாத்திற்காக அவர் ஆற்றிய வாழ்நாள் முழுமையான சேவைகளை அவருக்கு நிரந்தர நன்மையாக (ஸதகத்துல் ஜாரியா) ஆக்குவானாக. அவரை நல்லடியார்களின் உயர்ந்த அந்தஸ்தில் சேர்த்து, சுவனபதி ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக.
அதேபோல், மார்க்கப் பணியை நேர்மையுடனும் திறமையுடனும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய சிறந்த குணநலனும் அறிவாற்றலும் கொண்ட அறிஞர்களை இந்த உம்மத்திற்கு அல்லாஹ் தொடர்ந்து வழங்குவானாக என்றும் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.