பத்திரிகைச் செய்தி
சுற்றுச்சூழல் நெருக்கடி:
அறமும் பொறுப்பும் குறித்த தேசிய கருத்தரங்கை நடத்திய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி
புதுடெல்லி, ஜூன் 05, 2026
உலக சுற்றுச்சூழல் தினம் 2026-ஐ முன்னிட்டு, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி சார்பில் “சுற்றுச்சூழல் நெருக்கடி: அறத்திற்கும் பொறுப்பிற்குமான சோதனை” என்ற தலைப்பில் தேசிய அளவிலான இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.
மனிதகுலம் எதிர்கொண்டு வரும் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்குத் தேவையான அறநெறிசார் பொறுப்புகள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர்.
தலைமையுரையாற்றிய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தேசியச் செயலாளர் ரஹ்மத்துன்னிஸா A., சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது அடிப்படையில் ஒரு அறநெறி மற்றும் ஆன்மிகக் கடமை என வலியுறுத்தினார். “ஒவ்வொரு மனிதனின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு பூமி வளங்களை வழங்குகிறது; ஆனால் ஒவ்வொரு மனிதனின் பேராசையையும் பூர்த்தி செய்ய முடியாது” என்ற மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற கூற்றை மேற்கோள் காட்டிய அவர், சுற்றுச்சூழல் என்பது மனிதகுலத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரு அமானத் (நம்பிக்கைப் பொறுப்பு) எனக் குறிப்பிட்டார்.
இஸ்லாமியக் கோட்பாடான கலீஃபா (பாதுகாவலர் பொறுப்பு) குறித்து விளக்கிய அவர், படைப்பில் இறைவன் ஏற்படுத்தியுள்ள சமநிலையையும் நீதியையும் பாதுகாப்பதற்கான பொறுப்பு மனிதர்களுக்கு இருப்பதாகக் கூறினார். மேலும், சுற்றுச்சூழல் சீர்கேடு என்பது சமூக நீதியுடன் தொடர்புடைய ஒரு பிரச்சினை என்றும், வசதிபடைத்தவர்களின் அளவுக்கு மீறிய நுகர்வு ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களையே அதிகம் பாதிக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார். நிலைத்தன்மை மிக்க வாழ்க்கை முறைகளையும் இயற்கை வளங்களின் சமமான பகிர்வையும் உறுதி செய்வதன் மூலம் பூமியை அனைவருக்கும் வாழத் தகுந்த இடமாக மாற்றுவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
தொடக்கவுரையாற்றிய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தேசிய உதவிச் செயலாளர் சுமைய்யா மர்யம், சுற்றுச்சூழல் நெருக்கடியை “நவீன சமுதாயத்தின் மதிப்பீடுகளையும் தேர்வுகளையும் பிரதிபலிக்கும் ஒரு அறநெறிக் கண்ணாடி” என வர்ணித்தார்.
உலகின் பல பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகள் மற்றும் கனடாவில் நிகழ்ந்த பேரழிவு தரும் காட்டுத்தீ சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், சுற்றுச்சூழல் சீர்குலைவுகள் மனிதர்களின் செயல்பாடுகள் மற்றும் நிலைத்தன்மையற்ற வாழ்க்கை முறைகளுடன் நெருங்கிய தொடர்புடையவை என்று கூறினார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகளின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்ட அவர், நீடித்த மாற்றத்தை உருவாக்குவதற்கு மனித நடத்தையிலும் அறநெறி உணர்விலும் மாற்றம் அவசியம் என வலியுறுத்தினார்.
கேரளாவைச் சேர்ந்த சமூக மானுடவியலாளர் டாக்டர் மஞ்சு J. மனோஜ், காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படுவது மீன்வள மற்றும் வனவளத்தைச் சார்ந்து வாழும் சமூகங்களே என்று குறிப்பிட்டார். சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்கனவே நிலவி வரும் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மேலும் தீவிரப்படுத்துகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
புதுடெல்லியைச் சேர்ந்த காலநிலை ஆய்வாளர் சித்ரா கங்வானி, சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் எதிர்கொள்ளும் தண்ணீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றத்தால் உருவாகும் பேரிடர்கள் மற்றும் போதிய மறுவாழ்வு திட்டங்கள் இல்லாமை போன்ற சவால்களை எடுத்துரைத்தார். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களின் காலநிலைத் தாங்குதிறனை மேம்படுத்த வலுவான நிதி மற்றும் நிறுவன கட்டமைப்புகள் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
கோவாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும் கட்டிடக் கலைஞருமான தலுலா டி சில்வா, சிமெண்ட் மற்றும் கான்கிரீட்டின் அளவுக்கு மீறிய பயன்பாட்டை முன்னிலைப்படுத்தும் தற்போதைய வளர்ச்சி மாதிரிகளை விமர்சித்தார். இயற்கையுடன் ஒத்திசைவான மற்றும் நிலைத்தன்மை கொண்ட கட்டுமான முறைகளுக்குத் திரும்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அளவுக்கு மீறிய நுகர்வை “எதிர்கால தலைமுறைகளின் உரிமைகளைப் பறிக்கும் தலைமுறைகளுக்கிடையேயான காலனித்துவம்” என்று வர்ணித்தார்.
அகமதாபாத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும் ஊர்வன உயிரின மீட்புப் பணியாளருமான சுமைய்யா ஹசீப் ஷேக், வெறும் குறியீட்டு சுற்றுச்சூழல் பிரச்சாரங்கள் மற்றும் புகைப்பட விளம்பர நடவடிக்கைகளைத் தாண்டி, அர்த்தமுள்ள சமூகப் பங்கேற்பும் நிலையான நடத்தை மாற்றமும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
அவரது கருத்தை ஆதரித்து, சத்தீஸ்கரைச் சேர்ந்த கல்வியாளர் ஃபக்ரா தபஸ்ஸும், சிறு வயதிலிருந்தே காலநிலை குறித்த கல்வி அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். குப்பைகளைத் தரம் பிரித்து நிர்வகித்தல், வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற அன்றாட நடைமுறைகள் நிலையான வளர்ச்சிக்குத் தவிர்க்க முடியாதவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்தரங்கின் நிறைவில், அறநெறி மதிப்புகள், பொறுப்புணர்வுள்ள வாழ்க்கை முறை மற்றும் கூட்டு செயல்பாடுகளின் அடிப்படையில் ஒரு “பசுமை மனச்சாட்சியை” வளர்த்தெடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது வெறும் வளர்ச்சித் தேவையாக மட்டுமன்றி, தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கான ஒரு தார்மிகப் பொறுப்பும் ஆகும் என்பதையும் நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியது.
வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசியச் செயலாளர், ஊடகத்துறை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தலைமையகம்
புதுடெல்லி