திருப்பூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பாக “மண்ணில் கைகள்... இந்தியாவில் இதயங்கள்...” என்ற தலைப்பில் ஜூன் 26 முதல் ஜூலை 26 வரை ஒருமாத காலம் நடைபெற்ற தேசிய அளவிலான பரப்புரை நிகழ்ச்சியின் நிறைவு விழாவை இன்று மாபெரும் பேரணியாக CIO மாணவ, மாணவிகள் நடத்தினார்கள். இப்பேரணியை காலை 9 மணியளவில் மாமன்ற உறுப்பினர் சகோதரி N. பெனாசிர் M.C அவர்கள் துவக்கி வைத்தார்கள். பேரணியின் நோக்கத்தை விளக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் CIO மாணவி ஹசானா அவர்கள் தெளிவாகவும் நன்றாகவும் பேட்டியளித்தார்கள். இப்பேரணிக்கு JIH மாநகரத் தலைவர் ஜனாப் முகம்மது காசிம் அவர்கள் தலைமை தாங்கி, JIH மகளிர் அணி நாஜிமா சகோதரி ஹம்ஸா பேகம் அவர்கள் பேரணியை வழிநடத்தினார்கள். இதில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி ஊழியர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் ஆண்கள் வட்டத்தின் உறுப்பினர்கள், ஊழியர்கள், ஆதரவாளர்கள் என திரளாக கலந்து கொண்டு CIO மாணவச் செல்வங்களை நல்ல முறையில் ஊக்குவித்து வழிநடத்தினார்கள். பேரணிக்கு காவல்துறை அதிகாரிகள் சிறந்த பாதுகாப்பை வழங்கினார்கள். இறுதியாக, பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் GIO பொறுப்பாளர் சகோதரி பெனாசிர் நிஷா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள். ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் இந்த பேரணி மிகச் சிறப்பாக நடைபெற்றது; இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.